Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

செர்னோபிளை போல அணு அபாயம்: மிக மோசமான நிலையில் ஜப்பான் தவிப்பு

டோக்கியோ: ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை, உலகில் உச்சபட்ச அளவான, 7 ஆக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது, செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில், புக்குஷிமா அணு உலைகளில் இருந்து, தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என, தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜப்பானின் புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில், கடந்த மார்ச் 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின், உலைகளில், தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து, அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது. கடந்த ஒரு மாத காலமாக, அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்பட்டுள்ள வெப்பத்தைக் குறைக்கும் முயற்சி கூட இன்னும் வெற்றி பெறவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உலைகளில் வெப்பம் அதிகரிப்பு காரணமாக ஹைட்ரஜன் வாயு உருவாகி அதனால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இச்சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க, உலைகளுக்குள் நைட்ரஜன் வாயு செலுத்தும் முயற்சி இடையில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, உலைகளில் உள்ள கதிர்வீச்சு கலந்த நீரை கடலில் கொட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் அந்தப் பணியும் நிறுத்தப்பட்டது. இதனால், இன்னும் 10 ஆண்டுகளில் உலைகளை ஒன்றன் பின் ஒன்றாக மூடி விடும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நான்கு அணு உலைகளிலும், ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு ஏஜன்சி பிரதிநிதிகள் நடத்திய ஆய்வில், எதிர்பார்த்ததை விட மிக மோசமான அளவில் கதிர்வீச்சு வெளியாகி வருவது கண்டறியப்பட்டது. அளவு அதிகரிப்பு: ஏற்கனவே, கதிர்வீச்சு விபத்து பற்றிய அளவு, 4ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலவரம் மிகவும் மோசமான கதியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் சம்பவத்தை, உச்சபட்ச அளவான, 7 ஆக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. கடந்த, 1986ல், முந்தைய ரஷ்யாவும் தற்போது உக்ரைன் நாட்டில் செர்னோபிள் என்ற இடத்தில் இருந்த அணு உலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்திற்கு மட்டும் தான், 7ம் அளவு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானிலும் இந்த 7ம் அளவு பிறப்பிக்கட்டிருப்பதால் அது உலகின் மிகப் பெரும் அணுக் கதிர்வீச்சுப் பேரிடர் விபத்து என்பதும், அதனால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதும் திட்டவட்டமாகிவிட்டது. ஆனால், பிரதமர் நவோட்டோ கான், அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் கதிர்வீச்சின் அளவு குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கதிர்வீச்சால் இதுவரை யாரும் இறந்ததாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய, 21 ஊழியர்கள் மட்டும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அமைச்சரவை தலைமைச் செயலர் யுகினோ எடானோ கூறியுள்ளார். நிபுணர்கள் கருத்து: ஜப்பான் அணுக் கதிர்வீச்சு பேரிடர் நிலையை, 7 ஆக அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர், "செர்னோபிள் விபத்து மிக மிக மோசமானது. அதையும் இதையும் ஒப்பிடவே முடியாது. இது மிகைப்படுத்தப்பட்டுள்ளது' என்றனர். இந்த வாரம், சர்வதேச அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகள், புக்குஷிமா அணுமின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு நிலவரத்தை மதிப்பிடத் திட்டமிட்டுள்ளனர்.

பொருளாதாரம் இனி மீளுமா? நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பான் பொருளாதாரத்தில், 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். உலகில் இதுவரை நிகழ்ந்த இழப்பில் இதுவே மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்போது கணக்கிட்டிருப்பதை விடவும், இழப்பு மிகப் பெரியளவில் இருக்கும் என, ஜப்பான் பொருளாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். ஜப்பான் மத்திய வங்கி கவர்னர் கூறுகையில், "நாட்டு பொருளாதாரம் மிக ஆபத்தான நிலையில் தான் உள்ளது' என, தெரிவித்துள்ளார். ஜப்பான் நிலநடுக்கத்தில், இதுவரை, 13 ஆயிரத்து 228 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்து 529 பேர் காணாமல் போயுள்ளனர். 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்து விட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...