Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 13, 2011

இலவசத்துக்கு ஓட்டு : விவசாயத்துக்கு வேட்டு

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பதைப் போல, இலவசத்துக்கு இலவசம் கொடுத்து, வாக்காளர்களை வசீகரிக்கப் பார்க்கின்றன திராவிட கட்சிகள். வாசலில் இலவசங்களை வழங்கி, டாஸ்மாக் வழியாக குடும்பத்தின் வருமானத்தைப் பறிக்கப் பார்க்கும், இந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளின் சூட்சுமம், இன்று வரையிலும் பாமர மக்களுக்குப் புரிந்தபாடில்லை.



அது மட்டுமின்றி, இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, இங்கு வாரி வழங்கப்படும் இலவசங்களால் தமிழகத்தின் மீதான சர்வதேச சமுதாயத்தின் பார்வையும் மாறியிருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்னை, விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பல்வேறு பிரச்னைகளிலும், தமிழக மக்கள் தெளிவான நிலைப்பாடு எடுக்காததற்கு இந்த இலவசங்களும் காரணம் என்பது, எல்லாரது மனத்திலும் பதிந்துள்ளது.


இதெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த "இலவசங்களால்' அசுர வேகத்தில் அழியப்போவது விவசாயம் தான் என்ற ஓர் அபாய அறிவிப்பும் ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் விவசாயத்துக்கு ஆள் கிடைப்பது, குதிரைக் கொம்பான விஷயமாக மாறிவிட்டது. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், உடல் உழைப்பே இல்லாமல், தினமும், 130 ரூபாய் சம்பளம் கிடைப்பதால், விவசாய வேலைக்குச் செல்ல யாரும் விரும்புவதில்லை. நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, மரம் ஏறுவது போன்ற விவசாய வேலைகளைச் செய்வதற்கு, இதைவிட அதிகமான சம்பளம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால், விளை பொருட்களுக்கும் அதிக விலை கிடைப்பதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு, மழைக்குறைவு, உர விலையேற்றம் என, பலமுனைத் தாக்குதல்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த வேலை உறுதித்திட்டம், மிகப் பெரிய சாபக்கேடு.


இந்த கொடுமையை மேலும் அதிகரிக்கும் விதமாக, இத்திட்டத்தில் சம்பளத்தையும் அவ்வப்போது மத்திய அரசு உயர்த்தி வருகிறது. தற்போதுள்ள சம்பளம் மேலும் உயர்த்தப்பட்டால், சிறு தொழில்களுக்கான தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது.இதைப் பயன்படுத்தி, விவசாயிகளிடமிருந்து நிலங்களை அடித்துப் பிடுங்குவதற்கு பெரு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களும், ஊழல் பணத்தைக் குவித்துள்ள அரசியல்வாதிகள் அனைவருமாக ரியல் எஸ்டேட் களத்தில் குதித்துள்ளனர்.


பலவிதமான நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள், நல்ல விலை கொடுத்தால் விவசாய நிலத்தை விற்கவும் அதிகம் யோசிப்பதில்லை. விவசாயம் தான் செய்ய வேண்டுமென்று முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருக்கும் மிகச் சில விவசாயிகளையும், திராவிடக் கட்சிகள் இப்போது வெளியிட்டுள்ள, "இலவச' அறிவிப்புகள் மேலும் அச்சுறுத்துகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...