Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 21, 2011

வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதி: துல்லியமாக கணக்கிட வலியுறுத்தல்

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் அளவை துல்லியமாக கணக்கிட வேண்டும் என, விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், சென்னை நகர மக்களின் தாகத்தை தணிக்கும் ஜீவ நாடியாக உள்ளது.சென்னைக்கு குடிநீர் எடுத்துச் செல்வதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோடை காலத்தில் கூட, வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.ஆனால், இந்த ஆண்டு, எதிர்பாராத தொடர் மழையால், ஏரி நிரம்பியும் பொதுப்பணித் துறையினர் அறிவிப்பின்றி தண்ணீரை வெளியேற்றியதால், சுற்றுப்பகுதியில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததோடு, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது கோடையின் துவக்கத்திலேயே, வீராணத்தில் தண்ணீர் குறையத் துவங்கி, முற்றிலும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.

கொள்ளிடம் கரை பலப்படுத்தும் பணிக்காக, மண் எடுக்கவே, வீராணம் ஏரி தண்ணீரின்றி வற்ற வைக்கப்பட்டது என, அதிகாரிகள் காரணம் கூறினாலும், அனுபவம் இல்லாத அதிகாரிகள் செய்த தவறே, தண்ணீர் இல்லாமல் போனதற்கு காரணம் என, விவரம் அறிந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், முற்றிலும் வற்றிப் போன வீராணத்தின் சரியான கொள்ளளவை, இந்த சமயத்தில் கணக்கெடுக்க வேண்டும் என, விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, வெட்டு வாய்க்கால் நாரைக்கால் ஏரி பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், பொதுப்பணித் துறைச் செயலர் தனவேலுக்கு அனுப்பியுள்ள மனு:வீராணம் ஏரியின் தண்ணீர் பிடிப்பு பகுதியாக முழு கொள்ளளவு, 1,465 மில்லியன் கன அடி (47.5 அடி) என கூறப்படுகிறது.ஆனால் அந்த அளவிற்கு தண்ணீர் பிடிப்பு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. புதிய வீராணம் திட்டம் துவங்கப்பட்ட போது, ஏரியின் மொத்த உயரம், 45 அடியாக இருந்தது.சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக கொள்ளளவை அதிகப்படுத்த கரைகள் பலப்படுத்தப்பட்டு, ஸ்கேல் அளவு மட்டும், 2.5 அடி உயரம் உயர்த்தப்பட்டது. அதற்கு தகுந்தாற்போல் ஏரி ஆழப்படுத்தப்படவில்லை.

தற்போது முற்றிலும் வறண்டுள்ளதால், ஏரியின் முழு கொள்ளளவை முறையாக சர்வே செய்து, தண்ணீர் பிடிப்பு பகுதியை துல்லியமாக கணக்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...