Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 11, 2011

தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டுவேட்டை பிரசாரம் இன்று ஓய்கிறது


சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. 5 மணிக்கு பிறகு பொதுக்கூட்டம் மற்றும் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் தேர்தல் நடக்கிறது. வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி முடிவடைந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தேர்தலையொட்டி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் தொகுதி, தொகுதியாக சென்று ஆதரவு திரட்டினர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டனர். மேலும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டும் பேசியும் ஆதரவு திரட்டினர். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் வடிவேலு, பாக்யராஜ், சந்திரசேகர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் திமுக கூட்டணிக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கம்யூனிஸ்ட், பா.ஜ. கட்சிகளின் தலைவர்களும், தங்கள் அணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடந்து வந்த பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. பிரசாரம் இன்றுடன் முடிவதால், தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் கருணாநிதி, நேற்று காலை சிதம்பரத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். பிற்பகலில், தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதிக்கு சென்ற அவர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். இன்றும் திருவாரூரில் ஆதரவு திரட்டும் முதல்வர், அங்கேயே பிரசாரத்தை நிறைவு செய்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாநகர், விருகம்பாக்கம், ஆயிரம்விளக்கு தொகுதிகளில் மக்களை நேற்று சந்தித்து திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். வடசென்னையில் இன்று பிரசாரத்தை முடிக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் முகாமிட்டுள்ளார். நேற்று பிற்பகல், தென்சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று மாலை வடசென்னையில் பிரசாரத்தை முடிக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இன்றும் இதே தொகுதியில் பிரசாரம் செய்து முடிக்கிறார். பிரசாரத்துக்கு இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், அனைத்துக் கட்சி தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களும் வீடு, வீடாகச் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.


234 தொகுதிகளில் 2,773 பேர் போட்டி


தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2ம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மார்ச் 19ம் தேதி மனுதாக்கல் தொடங்கியது. மார்ச் 26ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,228 பேர் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28, 29 ஆகிய நாட்கள் நடந்தது. 30ம் தேதி வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. வாபஸ் பெற்றது போக 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதியாக 234 தொகுதிகளில் 2,773 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன.

மாலை 5 மணிக்கு மேல் தடை

மாலை 5 மணிக்கு பிறகு பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம், வாகனங்களில் சென்றும், மைக்செட், ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கலாம், பூத் சிலிப் வழங்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...