Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 02, 2011

கார்கள், இரு சக்கர வாகனங்கள் விற்பனை பன்மடங்கு உயர்வு

சென்னை:சென்ற மார்ச் மாதத்தில், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், இந்தியாவின் பங்களிப்பு, நல்ல அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த பல மாதங்களாகவே, உள்நாட்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் வாங்குவதற்கு வங்கிகள், அதிகளவில் நிதியுதவி அளித்து வருகின்றன. மேலும், இந்தியாவில் செலவிடும் வருவாயும் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், மோட்டார் வாகனங்கள் விற்பனை, தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது என, மோட்டார் வாகனத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்தார்.இந்தியாவில் கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 952 கார்களை விற்பனை செய்து, சாதனை படைத்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 28.2 சதவீதம் (95 ஆயிரத்து 123 கார்கள்) அதிகமாகும்.

சென்ற மார்ச் மாதத்தில், உள்நாட்டில் விற்பனையான மாருதி கார்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 10 ஆயிரத்து 424 ஆகவும், வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி 11 ஆயிரத்து 528 ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கை, சென்ற 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முறையே, 79 ஆயிரத்து 530 மற்றும் 15 ஆயிரத்து 593 ஆகவும் இருந்தது. இவ்விரு மாதங்களில், நிறுவனத்தின் உள்நாட்டு கார்கள் விற்பனை, 38.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்த நிலையில், ஏற்றுமதியான கார்களின் எண்ணிக்கை 26.1 சதவீதம் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், மாருதி சுசூகி நிறுவனம், ஒட்டுமொத்த அளவில், 12 லட்சத்து 71 ஆயிரத்து 5 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 365 ஆக இருந்தது.

ஆண்டுக்கணக்கில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை, 24.81 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதே ஆண்டுகளில், இந்நிறுவனம், உள்நாட்டில் மேற்கொண்ட கார்கள் விற்பனை, 30.1 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், ஏற்றுமதி 6.3 சதவீதம் குறைந்துள்ளது.நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 2,101 கார்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில், 89 என்ற எண்ணிக்கையில் இருந்தது. நிறுவனத்தின் கார்கள் விற்பனையில், உள்நாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 'நிசான் மைக்ரா' கார்கள் விற்பனை, சென்ற மார்ச் மாதத்தில் 2,060 ஆக இருந்தது. இது, சென்ற பிப்ரவரி மாதத்தில், 2,030 ஆக இருந்தது.ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டாரின் 100 சதவீத துணை நிறுவனமாக, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் விளங்குகிறது.

இந்நிறுவனத்திற்கு சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி முதல், இத்தொழிற்சாலையில் கார்கள் உற்பத்தி தொடங்கப்பட்டது.தற்போது, ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில், இத்தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு, இத்தொழிற்சாலையின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் என்ற அளவில் உயர்த்தப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆடி இந்தியா நிறுவனம், 'ஆடி' என்ற பெயரில், சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், சென்ற மார்ச் மாதத்தில், 681 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்றாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 3 மடங்கு (220 கார்கள்) அதிகமாகும்.நடப்பு 2011ம் ஆண்டின், முதல் மூன்று மாதங்களில், இந்நிறுவனம், 1,611 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற 2010ம் ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 107 சதவீதம் (778 கார்கள்) அதிகமாகும்.டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, சென்ற மார்ச் மாதத்தில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 781 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 27 சதவீதம், (1 லட்சத்து 46 ஆயிரத்து 763 வாகனங்கள்) அதிகமாகும். சென்ற நிதியாண்டில் (2010-11), இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்கள் விற்பனை 32 சதவீதம் அதிகரித்து, அதாவது,15 லட்சத்து 21 ஆயிரத்து 939 என்ற எண்ணிக்கையிலிருந்து, 20 லட்சத்து 6 ஆயிரத்து 808 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

சென்ற மார்ச் மாதத்தில் இந்நிறுவனம், உள்நாட்டில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 719 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 28 சதவீதம் (1 லட்சத்து 26 ஆயிரத்து 696 வாகனங்கள்) அதிகம். இதே மாதங்களில், நிறுவனத்தின் ஸ்கூட்டர் வகை வாகனங்கள், 50 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28 ஆயிரத்து 504 என்ற எண்ணிக்கையிலிருந்து 42 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 24 சதவீதம் உயர்ந்து, 64 ஆயிரத்து 147 என்ற எண்ணிக்கையிலிருந்து, 79 ஆயிரத்து 642 ஆக அதிகரித் துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் ஏற்றுமதி, 31 சதவீதம் அதிகரித்து, 20 ஆயிரத்து 585லிருந்து, 26 ஆயிரத்து 979 ஆக உயர்ந்துள்ளது. இதில், இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி, 20 ஆயிரத்து 67 லிருந்து, 24 ஆயிரத்து 62 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

சென்ற மார்ச் மாதத்தில், இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 2,431 என்ற எண்ணிக்கையிலிருந்து 4,427 ஆக அதிகரித்துள்ளது.சுசூகி நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில், 27 ஆயிரத்து 361 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் விற்பனையானதை விட, 25.94 சதவீதம் (21 ஆயிரத்து 725 இரு சக்கர வாகனங்கள்) அதிகமாகும். இருசக்கர வாகனங்கள் சந்தையில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய 'சுசூகி ஸ்லிங் ஷாட்' இரு சக்கர வாகனத்திற்கு, சந்தையில் அதிக தேவைப்பாடு காணப்படுகிறது. மேலும், ஜி.எஸ். 150 ஆர், ஆக்சஸ் 125 ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களும், நிறுவனத்தின் வாகன விற்பனையில், முக்கிய பங்களிப்பை பெற்று தந்துள்ளன.


உலகக் கோப்பையை வென்றால்இந்திய வீரர்களுக்கு ஹூண்டாய் கார் பரிசு: இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால், இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய வெர்னா வகை காரை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளது.'ஹூண்டாய் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, மும்பையில் நடைபெறும் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இறுதிப் போட்டியில், இந்தியா வென்று, உலக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கிறோம். எனவே, இவ்வீரர்கள் ஒவ்வொருவருக்கும், நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள, புதிய வகை 'வெர்னா' காரை பரிசாக அளிக்க உள்ளோம்' என, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயலதிகாரியுமான எச்.டபிள்யூ.பார்க் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...