“குளம்படியில் நீர் படிந்தால் குருவி குடித்துப்போம்.. வீராணத்தில் நீர் சேர்ந்தால் நாடு செழித்துப்போம்’’-- ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரம் திவ்ய பிரபந்தமாகத் தொகுத்த வைணவப் பெரியார் நாதமுனிகள் அருளிய வரிகள் இவை.
இதற்கு நிகழ்காலச் சான்றாக நிற்கும் வீராணம் ஏரி, 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் வீதம், குழாய்கள் வழியாக 228 கி.மீ. தொலைவுக்கு பயணித்து சென்னையை வந்தடைகிறது.
வீராணம் வந்த வரலாறு
வீரநாராயணபுரம் என்ற விண்ணகர்- இதுதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பராந்தக சோழன் தனது சேனைகளைக் கொண்டு வீரநாராயணபுரத்தில் பிரம்மாண்ட ஏரியை வெட்டி, அதற்கு தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரையே சூட்டி (வீரநாராயணபுரம் ஏரி), ஏரியை பெருமாளின் சொத்தாகவும் அறிவித்தான். கி.பி. 907- கி.பி. 935 காலத்தில் ஏரி வெட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
44,856 ஏக்கர் பாசனம்
வீராணம் ஏரியின் மொத்த நீர்ப் பரப்பு பகுதி 38.65 சதுர கி.மீ. கொள்ளளவு 1.455 டிஎம்சி. ஏரியின் கீழ்ப் புறத்தில் உள்ள 28 பாசன வாய்க்கால்கள், மேல் புறத்தில் உள்ள 6 பாசன வாய்க்கால்கள் மூலம் தற்போது மொத்தம் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரி மூலம் 18 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயமும், 1,150 ஏக்கரில் குள்ளக்கார் பருவ விவசாயமும், 550 ஏக்கரில் வெற்றிலை விவசாயமும் நடைபெற்ற காலமும் உண்டு. ஆனால், 1975-ல் காவிரி தாவா ஏற்பட்ட பிறகு இங்கே இருபோக விவசாயம் இல்லாமலே போய்விட்டது.
நீர்ப் பிடிப்பு பகுதிகளும், தடுப்பணைகளும்
தொடக்கத்தில், இப்போதைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 427.35 சதுர கி.மீ. பகுதிதான் வீராணம் ஏரியின் பிரதான