Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 17, 2014

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு!

கடலூர், இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளிலேயே பதிவு செய்யும் முறை ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டதும், கல்வித்தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் குவிவது வழக்கமாக இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை வேலைவாய்ப்பு அலுவலகம் கொண்டு வந்தது. எனவே இந்த ஆண்டும் பிளஸ்-2 மாணவர்கள், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் என்று வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 21-ந்தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதனால் அன்று முதல் 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். இது பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பதால் அவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வது எப்படி? என்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில்
முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 185 பள்ளிகளைச்சேர்ந்த 29 ஆயிரத்து 150 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். அவர்களில் 24 ஆயிரத்து 438 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வருகிற 21-ந்தேதி முதல் 15 நாட்களுக்குள் மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தின் இணைய தளத்தில் அவரவர் படித்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து கொள்ள வேண்டும். 

வெளிமாநிலத்தவர்களுக்கு பதிவு செய்யக்கூடாது உங்கள் பள்ளிகளில் வெளிமாநில மாணவர்கள் படித்தால், அவர்களுக்கு பதிவு செய்யக்கூடாது, உதாரணமாக தூக்கனாம்பாக்கம் பள்ளியில் புதுச்சேரி மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களுக்கு இங்கே பதிவு செய்யக்கூடாது, ஆனால் வெளிமாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் இங்கே படிப்பார்கள், அவர்களின் ரேசன்கார்டு வெளிமாவட்டத்தில் இருக்கலாம். அத்தகைய மாணவர்களுக்கு நீங்களே பதிவு செய்து கொடுக்கலாம். 21-ந்தேதி முதல் அடுத்த 15 நாட்கள் வரை எந்த நாளில் பதிவு செய்தாலும் ஒரே சீனியாரிட்டி தான் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதால் பதிவு செய்வதை தாமதப்படுத்தக்கூடாது, எந்த மாணவருக்கும் பதிவு செய்யமாட்டேன் என்றும் சொல்லக்கூடாது. 

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் பதிவு செய்தாலும், அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கும் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதன்மை கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் பேசினார். கூட்டத்தில் அவரது நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரிகள் வடிவேலு, மல்லிகா, மெட்ரிக். பள்ளிகள் ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
-dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...