Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2014

மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 989 மையங்களில் நாளை நடைபெறும். காலை 11 மணியளவில் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். மாலை 4 மணிக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதற்கென நாடு முழுவதும் 989 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன்முறை யைத் தடுக்க, அனைத்து மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காலை 8 மணியளவில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். அதற்கான முன்னேற்பாடுகள் அதிகாலை 5 மணியிலிருந்து தொடங்கிவிடும். கண்காணிப் பாளர்கள், உதவியாளர்களை குலுக்கல் முறையில் நியமிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், தேர்தல் ஆணைய பார்வையாளரும் மேற்கொள்வார்கள். சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேஜை விவரம், அவர் வாக்குப் பதிவு மையத்துக்கு வந்த பின்புதான் தெரிவிக்கப்படும். காலை 8 மணிக்கு முதலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

இதை மையத்தின் தேர்தல் அலுவலர் நேரடியாக கண்காணிப்பார். காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,
வாக்கு எண்ணும் போது மையத்தில் இருக்கலாம். சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை பெற்ற வேட்பாளர், தன்னுடன் சாதாரண உடையணிந்த ஒரு வீரரை மட்டும் வைத்துக்கொள்ளலாம். வாக்கு எண்ணப்படும் மேஜை ஒவ்வொன்றிற்கும் தலா ஒரு முகவரை நியமித்துக்கொள்ள வேட்பாளருக்கு அனுமதியுள்ளது. வாக்கு எண்ணிக்கையை தொடங்கும் முன்பு, இயந்திரத்தில் உள்ள சீல் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதன் பின், ஒவ்வொரு சுற்றிலும், ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் வீதம் மேஜைகளில் வைக்கப்பட்டு, அதில் பதிவாகியுள்ள விவரங்கள் குறித்துக்கொள்ளப்படும். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், மொத்த வாக்குகள், நோடாவில் பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்களை படிவம் 17சி-யில் பதிவு செய்யப்படும்.

அந்த படிவத்தில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வேட்பாளர்களின் முகவர்கள் கையெழுத்திடுவார்கள். ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும், மேஜைகளில் இருந்து வரும் 17சி-படிவம், மையத்தின் தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்படும். அதை சரிபார்த்த பின்பு, இறுதி முடிவை அறிவிக்கும் அலுவலருக்கு தேர்தல் அலுவலர் அனுப்பிவைப்பார். அந்த விவரங்கள் வாக்குச்சாவடி வாரியாக இறுதி முடிவை பதிவு செய்வதற்கான படிவம் 20-ல் எழுதப்படும். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்பு, இறுதி முடிவு படிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரத்தை தேர்தல் அலுவலர் அறிவிப்பார். அப்போது வேட்பாளர்கள் யாருக்காவது ஆட்சேபம் இருந்தால், மறு வாக்கு எண்ணிக்கைக் கோரி மனு அளிக்கலாம். அதை ஏற்று வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் அலுவலர் உத்தரவிடுவார். இறுதி முடிவு படிவத்தில் தேர்தல் அலுவலர் கையெழுத்திட்ட பின்பு, மறுவாக்கு எண்ணிக்கையை கோர முடியாது.

வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணைய பார்வை யாளர்கள் கண்காணிப்பார்கள். முறைகேடு நடப்பதாகத் தெரிந்தால், இறுதி முடிவை அறிவிக்காமல் நிறுத்திவைகக் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. பின்னர், அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 3 மணி நேரத்திற்குள் (காலை 11 மணி) நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். அடுத்து ஆட்சி அமைக்கப்போகும், கட்சி அல்லது கூட்டணி எது என்ற கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும். இறுதி முடிவு, மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-the Hindu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...