Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் வெள்ளச் சேதம்: நிரந்தரத் தீர்வு எப்போது?

கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பது, அரசு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் செங்கால்ஓடை வழியாகவும், மணவாய்க்கால் மூலமாகவும் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக சென்று கடலை சென்றடைகிறது. இவையல்லாமல் மேட்டூரிலிருந்து காவிரியில் கூடுதலாக திறக்கப்படும் பல லட்சம் கனஅடி உபரிநீர் கீழணை வந்து அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக சிதம்பரம் அருகே கடலில் கலக்கிறது.

மேலும் பொன்னேரியிலிருந்து வரும் உபரிநீர் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் வழியாக கடலில் சென்று கலக்கிறது. கோமுகி, மணிமுத்தாறு பகுதியிலிருந்து வரும் உபரிநீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலுக்கு செல்கிறது. சரியான வடிகால் வசதி இல்லாததால் ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வெள்ளம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசம் செய்துவிட்டு கடலுக்கு செல்கிறது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களின் தெற்கே கொள்ளிடம் ஆறும், வடக்கே வெள்ளாறும் செல்கின்றன. இதற்கு இடையில் உள்ள இந்த தாலுகாக்களில் உள்ள மக்களும், விவசாயிகளும் வெள்ளச் சேதத்தினால் ஆண்டுதோறும் அவதியுற்று வருகிறார்கள். அரசும் ஆண்டுதோறும் நிவாரணம் வழங்குவது, இழப்பீடு வழங்குவது போன்ற வழக்கமான செயல்களில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆள்பற்றாக்குறை, வேளாண் இடுபொருள் விலையேற்றம், போதுமான விலை கிடைக்காதது மற்றும் மழை, வெள்ளம், வறட்சி என மாறி, மாறி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருவதால் பலர் விவசாயத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயத் தொழில் நலிவுறும் நிலை உருவாகியுள்ளது.

தடுப்பணைகள் தேவை

ஆண்டுதோறும் 2 டிஎம்சி தண்ணீர் சிதம்பரம் அருகே கொள்ளிடம், வெள்ளாற்றின் வழியாக கலந்து வீணாகிறது. எனவே இரு ஆறுகளிலும் பல இடங்களில் தடுப்பணைகளை அமைத்து கடலில் வீணாக கலக்கின்ற நீரை சேமிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீராணம் ஏரியில் அதிகளவு நீரைத் தேக்கி வைக்கக்கூடாது. சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கும் நோக்கில் கூடுதலாக நீரைத் தேக்கி வைக்கின்றனர். அப்போது கூடுதலாக ஏரிக்கு உபரிநீர் வரும் போது திடீரென அதிகளவு நீர் திறந்துவிடப்படுவதால் வெள்ளியங்கால் ஓடை மற்றும் பழைய கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிப்படைகின்றன.

எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிரந்தர தீர்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...