"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." அல்குர் ஆன் 4:7
அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.
சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று கூறியிருப்பதால் இந்த வாரிசுரிமை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது கட்டாயம் ஆகும்.
சொத்துரிமை பிரச்சினை சிக்கலாகி குடும்பப் பிரச்சினை தோன்றினால் மட்டுமே அரபுக் கல்லூரிகளுக்கு தீர்ப்புக் கேட்டு எழுதி அதன்படி செயல்படுகின்றனர். இல்லையெனில் யூகத்தின் அடிப்படையில் தான் பாகப்பிரிவினை செய்து கொடுப்பதைப் பார்க்கிறோம்.
சில குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போதே சீர்வரிசை, வரதட்சணை, நகை நட்டுக்கள் என அதிகமாகச் செலவு செய்து விட்டோம் என்று கூறி விடுகின்றனர். இது வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளின் தீய விளைவாகும். சிலர் தாயாரின் சொத்துக்கள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண் மக்களுக்கு உரியவை என்றும் (யூகத்தின் அடிப்படையில்) பிரித்து விடுகின்றனர். எனவே, இந்நிலை மாற வேண்டும். வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்கு என்ன? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி பிரித்தளிப்பதும் அவசியம்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின் மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும், "இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் மீது கூறப்படும் ஒரேயொரு குறை என்னவெனில் அது பின்னங்களாக இருப்பதும் அதனால் சொத்து சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து விடுவதும் தான். குறிப்பாக ஒரு வீடு அல்லது ஒரு வயல் சிறு சிறு துண்டுகளாய்ப் பிரிக்கப்படும்போது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பது நாம் அறிந்ததே. "ஆனால் அந்தக் குறையும் கூட பிற வாரிசுகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் முன்னுரிமையை அந்நியரை விட மற்ற வாரிசுதாரர்களுக்கு வழங்குவதன் மூலம் இஸ்லாமிய சட்டம் போக்கிவிடுகிறது" என்றும் G.C. வெங்கட சுப்பாராவ் கூறுகிறார்.
அதாவது, இருவருக்குச் சொந்தமான சொத்தில் தமது பங்கை ஒருவர் விற்க விரும்பினால் அவர் தமது பங்காளிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
"பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டு விட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 2257
இந்தச் சொத்துரிமைப் பங்கு விகிதாச்சாரங்கள் நம்மையெல்லாம் படைத்த இறைவனே ஏற்படுத்திய கணக்கீடு ஆகும். மனிதர்களாகிய நாம் அதை ஏற்படுத்தி இருந்தால் நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற ரீதியில் பாகுபடுத்தி இருப்போம். ஆனால், கருணையாளனான அல்லாஹ் யாருக்கும் எந்தப் பாதகமுமின்றி எல்லோருக்கும் சொத்துக் கிடைக்கும் வகையில் பங்கீடு செய்துள்ளான்.
நன்றி:இஸ்லாம்கல்வி.காம்
மே 02, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...