புதுடில்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை!
மும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்:அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை!
இந்தியாவின் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி!
இவை அண்மைக்காலமாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்று வருகின்றன. இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் தரும் தகவல்கள் உண்மைதானா? என்ற சந்தேகம் தற்போது எழத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக மும்பை தாக்குதலுக்குப் பிறகு வெளிவரும் விஷயங்கள், அதற்கு முன்னர் அமெரிக்கா நடந்த கொண்ட விதங்கள் எல்லாம் இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்குக் கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா செய்த உதவிகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய நிலைக்கு வந்து விட்டன.
மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் உளவு மற்றும் பகுத்தாய்வு முறை சார்ந்த வல்லமை அதிகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா, இந்திய உளவுப் பணியில் ஊடுருவி அதன் ஆதிக்கத்தை இறுகச் செய்து விட்டதாக அதிகாரிகள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று அமெரிக்காவின் இரண்டு உளவு நிறுவனங்களான சி.ஐ.ஏ மற்றும் எஃப்.பி.ஐ. ஆகியவற்றிடமிருந்து தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த எச்சரிககையைத்தான் உளவு நிறுவனங்கள் மாநில காவல்துறைக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்க உளவு நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைந்துள்ளன. "நமது உளவுக்கு அமெரிக்காவை நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது" என்று இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள். நம்மை நாமே முன்னேற்றிக் கொள்ளாமல், அமெரிக்கா சொல்வதற்ககெல்லாம் தலை ஆட்டத் தொடங்கி விட்டன இந்திய உளவு நிறுவனங்கள்.மும்பைத் தாக்குதலுக்கு பிறகு இந்திய பாதுகாப்புக் கொள்கையில் அமெரிக்கா தொடர்ந்து மூக்கை நுழைத்து வருவதால், அமெரிக்கத் தகவல்களை உள்வாங்கியே இந்தியா செயல்படும் என்ற நிலை உருவாகிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
நன்றி:பாலைவனச்சோலை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...