Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 30, 2010

மரணத் தருவாயில் மனிதன்!!!

கண்ணியமும் கருணையும் நிறைந்த இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:'(தவறான) ஆசைகளை தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்'. (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) திர்மிதி 2229)

எந்த நேரம் நம்மைத் தாக்கும் என்பது நமக்கே தெரியாத நிச்சயிக்கப்பட்ட ஒரு திரில்லிங்கான விஷயம் மரண நேரம் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மறைவான விஷயங்களில் சில திரை விலகி தெளிவாகும் பரபரப்பான தருணமே மரண நேரம்.

உலகில் மனிதன் தான் விதைத்து வந்ததின் பலாபலன்களின் தராதரத்தை உணர்தும் ஆரம்பக் காட்சிகளின் அரங்கேற்றமே மரண நேரம்.
உற்றார், உறவினர், நண்பர்கள் என எத்தனையோ பேர் புடைசூழ இருந்தாலும் நேரத்தை அடைந்த அந்த மனிதனுக்கு மட்டுமே சூட்சம உலகின் தரிசனம் தரப்படுகிறது.
எல்லோரும் அருகிலிருந்தும் எவரையும் அவன் துணைக்கு அழைக்க முடிவதில்லை. அல்லது தான் கானும் காட்சியை தன்னுடன் இருப்பவர்களுக்கு காட்டவோ, விளக்கிக்கூறவோ கூட அவனால் முடிவதில்லை.
தன்னந்தனியனாக, தன்னைப்படைத்த இரட்சகனின் மறைவான ஞானங்களின் உண்மையை சந்திக்க வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.
மெய்யான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும் அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.
ஏனைய கொள்கைகளும் சிந்தனையும் அந்நேரத்தில் உதவாதது மாத்திரமல்ல மனிதனுக்கு அவைகள் பாவச் சுமைகளாக மாறி விடும் அபாயங்களாக இருக்கின்றன.

அச்சுமைகளை கழற்றி விடவோ அல்லது பரிகாரம் தேடவோ முடியாத நேரமாகும். எனவே, மனித இனம் எச்சரிக்கப்படுகிறது!. தனக்கு இறுதி நேரம் வருவதற்கு முன் தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் சீர்திருத்திக் கொள்ள! அந்த சீர்திருத்தம் குர்ஆனின், நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாக! இன்ஷாஅல்லாஹ்.!

தீயவர்களின் வேதனையின் ஆரம்பம்
தீயவர்களின் உயிர் வாங்கப்படும்போதே அவர்களுக்கு வேதனை ஆரம்பமாகி விடுகிறது. இறைநிராகரிப்பாளர்களின் உயிர் வாங்கப்படும்போது அவர்களுக்குக் கொடுக்கபடும் வேதனையைப் பற்றி பின்வரும் இறைவசனம் தெளிவுப்படுத்துகிறது.கண்ணியமிகு அல்லாஹ் தன் திருமறையில் '(ஏக இறைவனை)மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப் பற்றும் போது சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர்ப் பார்க்க வேண்டுமே!' (அல்குர்ஆன்: 8:50)

கெட்டவன் மரணித்தவுடன் அவனது உயிரை வானவர்கள் எடுத்துச் செல்லும்போதே அவனுடைய இழிவையும் அவமானத்தையும் அடையும் விதத்தில் வானவர்கள் அவனுக்கு மோசமான வரவேற்பு கொடுப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'இறைமறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டுச் செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு! என்று கூறுவார். அப்போது அவன் உடலிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தை பிடுங்குபவரைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்த துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.

பூமியில் இறந்து அழுகிப்போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார் தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டு அவனுக்காக கதவைத் திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

நமது வசனங்களை பொய்யெனக் கருதி அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளை தண்டிப்போம். (7: 40) கடைசியில் பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுவான். (அறிவிப்பவர்: பரா இப்னு ஆஸிப் (ரலி) அஹ்மத் 17803)

தனக்கு கிடைத்துள்ள கஷ்டமான வாழ்வை நினைத்து கெட்டவர் அலறி கொண்டிருப்பார். தனக்கு கிடைத்துள்ள இன்பமான வாழ்வை எதிர்பார்த்தவராக நல்லவர் காத்துக் கொண்டிருப்பார். மரணித்த உடனேயே தீயவர்க ளின் புலம்பலும்இ நல்லவர்களின் சந்தோஷமும் ஆரம்பித்து விடுகின்றது. இருவரில் யாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? சிறிது சிந்தித்துப் பாருங்கள்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்த பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்: என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால் கை சேதமே! என்னை எங்கு கொண்டு செல்கின்றீhகள்! என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதர்களைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்'. (அபூ ஸயிதுல் குத்ரி (ரலி) புகாரி: 1380)

நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை
நல்லவர்கள் மரணிக்கும்போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தருவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள்.கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உமது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்துக் கொள்வாயாக! எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (அல்குர்ஆன்: 89 : 27)

நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்பு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. மதினாவாசி ஒருவருடைய ஜனாஸாவை பின் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நங்களும் அவரைச் சுற்றி அமர்;ந்தோம். நபி(ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள்.திடிரென தன் தலையை உயர்த்தி 'கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள்' என்று மூன்று தடைவ கூறினார்கள்.

பின்பு மரணத் தருவாயிலிலுள்ள ஒரு இறைநம்பிக்கையாளனுடைய நிலை பற்றி கூறினார்கள்'மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளை துண்டித்து விட்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து துணிகளையும் சுவர்க்கத்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். அப்போது உயிரைக் கைப்பற்றும் வானாவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே! நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும், அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல்' என்று கூறுவார்.

தோல் பையிலிருந்து நீர் வழிந்து விடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்து துணியிலும், நறுமணத்திலும் அதனை வைத்த விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தை திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தை கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவை சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியியீனிலே பதிவு செய்து விட்டும் பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவை சேர்த்து விடுங்கள்;! இறைச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்மரணிக்கும் தறுவாயில் இருக்கும்போது நல்லவருக்கு சொர்க்கம் உண்டு என்றும் கெட்டவருக்கு வேதனை உண்டு என்றும் முன்னறிவிப்பு செய்யப்படும். இந்த இறுதி நேரத்தில் தான் தன்னுடைய மண்ணறை வாழ்வு எப்படி அமையும் என்பதை இறக்கவிருப்பவர் அறிந்து கொள்வார்.


கண்ணியமிகு அல்லாஹ் கூறுகின்றான்: 'அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கி தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நிங்களே வெளியேற்றுங்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்த தாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்' (அல்குர்ஆன்: 6:93)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று சொன்னார்கள்.

போது நான் அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா? (நீங்கள் சொல்கிறீர்கள்). அவ்வாறாயின் (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்? என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதுவல்ல. மாறாக இறைநம்பிக்கையாளருக்கு (மரண வேதனையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவனைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அல்லாஹ் கோபம் கொண்டிருப்பதும் குறித்து அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 5208)
ஆகவே நம்முடைய செயல்களை தூய்மையாக்கி கொண்டு மரணத்தை அதிகம் அதிகம் நினைத்து இறைவனை சந்திப்பதை விரும்பக்கூடிய நன்மக்களாக வாழ்ந்து மரணிக்க ஏக இறைவனை பிராத்திக்கின்றோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...