Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2010

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்


தன் வினையே தன்னைச் சுடும்' என்ற பழமொழிக்கு மிகப் பொருத்தமானவர்கள் யாரென்று கேட்டால் அனைவருமே சுலபமாக சொல்லிவிடலாம் புகைப்பிடிப்பவர்கள் என்று. விரல்களுக்கிடையே மரணத்தை சுமந்துக் கொண்டு சிந்தனையை சிறைவைத்த மனிதர்கள்தான் புகைப்பிடிப்பவர்கள் எனில் அது மிகையன்று. ஊதித்தள்ளும் புகை தலைக்கு மேலே வட்டமிடும் பொழுது தனது வாழ்க்கையும் கட்டம் கட்டப்படுகிறது என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் புகை பழக்கமுடையோர்.
ஆண்டுதோறும் மே மாதம் 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்து 1987 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்த பொழுதிலும் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. புகையிலை தயாரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த ஆண்டு புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி WHO என்றழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி ஒவ்வொரு எட்டு வினாடிகளுக்கு ஒருவர் இவ்வுலகில் புகைத்தல் மூலம் உயிரைத் துறக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 5.4 மில்லியன் மனிதர்கள் புகைத்தல் மூலம் தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். கடந்த ஆண்டு உலகில் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சிகரெட்டுகள் விற்பனையாகியுள்ளன.இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில் புகையின் உபயோகம் மூலம் உலகில் ஆண்டிற்கு 15 லட்சம் பெண்கள் மரணமடைகின்றார்கள் என்பதுதான்.151 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் புகையிலையை உபயோகிக்கும் ஆண் மற்றும் பெண் இளைய வயதுடையோரின் எண்ணிக்கை சமமாக உள்ளது. புகையினால் மரணமடையும் ஆறு லட்சம் பேரில் மூன்றில் இரண்டு பாகமும் பெண்களாவர். புகைப்பிடிப்பது மட்டுமல்ல புகைப்பிடிப் பொருளுடனான பழக்க வழக்கமும் மரணத்திற்கு காரணமாக அமைகிறது. இதனை ஈரானில் ஐ.நா வின் தகவல் மையம் தெரிவிக்கிறது.
வளர்ந்துவரும் நாடுகளில் பெண்கள் புகையிலையை உபயோகிப்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் இதற்கெதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார்.வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இதர நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.நமது இந்திய நாட்டிலும் பெண்கள் மத்தியில் புகைக்கும் வழக்கம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. மும்பையில் புகை பிடிக்கும் பெண்களில் 50 சதவீதம் பேர் கடும் பணிச் சுமை காரணமாகவே அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மும்பையில் நடத்தப்பட்ட இரு சர்வேக்களில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.பிபிஓ, கால்சென்டர்களில் பணியாற்றும் பெண்கள் பணிச் சுமை, போட்டி, அதிகமான ஊதியத்தால் கிடைத்துள்ள சுதந்திரத்தால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருகி்ன்றனர்.ஆங்கில தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் உள்ளிட்ட மீடியாக்கள், பொழுதுபோக்கு தொலைககாட்சி சேனல்களி்ல் பணியாற்றும் பெண்களில் 5 முதல் 35 சதவீதம் வரை நாளொன்றுக்கு 4 முதல் 10 சிகெரெட்களை புகைக்கி்ன்றனர். இதில் சிலர் செயின் ஸ்மோக்கர்கள் ஆவர்.திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஹாஸ்டல்களி்ல் தனியே தங்கியிருப்போர், பேயிங் கெஸ்ட் ஆகிவற்றில் தங்கியிருக்கும் பெண்களில் 15 முதல் 20 பேர் பசியைப் போக்கவோ அல்லது டயட்டிங் காரணமாகவோ புகை பிடிக்கின்றனர். இவர்கள் காசநோய்க்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.பி.பி.ஓ. நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களில் பலர் 'ஹூக்கா' பார்களுக்கு சென்று புகைப்பதன் மூலம் பணிச் சுமையிலிருந்து தப்புவதாகவும் தெரிவித்துள்ளனராம்.
உலகில் காணப்படும் நச்சுத்தன்மைமிக்க தாவர வகைகளில் புகையிலையும் ஒன்றாகும். இதன் தண்டுப்பகுதியை விட இலைப்பகுதியில் தான் அதிக இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை மருத்துவ,விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.இன்றைய காலக்கட்டம் வரை நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வுகளில் புகையிலையில் சுமார் 4 ஆயிரம் இராசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் முப்பதிற்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன்மோனக்சைட்,தார்(இது புற்றுநோயை உருவாக்கக்கூடியது),நிகோடின்,நைட்ரிக் ஆக்ஸைட்,மெர்குரி(பாதரசம்) போன்றவையாகும்.புகைப்பவர்கள் புகையை உள்ளுக்குள் இழுக்கும் ஒவ்வொரு வேளையும் நிக்கோட்டின் (Nikotin) மின்னல் வேகத்தில் மூளையைச் சென்றடைகிறது. புகையிலையில் நிக்கோடின் எனும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் சில மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப் பொருட்களாகும். இவற்றைத் தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர்.
மூளையில் மனநிலையை மாற்றும் செல் (cell) க்கு நிக்கோட்டின் செல்வதால் புகைப்பவர்கள் ஒரு ஆறுதலான நிலையை அடைகிறார்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றது. இந்த மாயையினால் புகைப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரச்சினைகள் எல்லாம் குறைந்த மாதிரித் தோன்றும். அதனால் மற்றைய நேரங்களை விட புகைக்கும் நேரங்களில் அதிக விஷயங்களில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நிலையில் தாங்கள் இருப்பதாக அவர்கள் எண்ணுவார்கள்.இன்றைய காலகட்டத்தில் மனிதன் புகையிலையை வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகிறான். அதாவது இந்த நச்சுத் தன்மை மிக்க புகையிலையை வெற்றிலையுடன் சேர்த்து மெல்கிறார்கள். தூள் புகையிலையை பொடியாக மூக்கில் போட்டுக் கொள்கிறார்கள். மற்றும் குழாய்களை பயன்படுத்தி புகையை உறிஞ்சுதல், பீடி, சிகரட், சுருட்டு, பைப் என்று பல்வகையாக புகையிலையை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.‘புகையிலை மதுவைவிட ஏன் ஹெரயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக் கூடியது.அடிமையானவர்களில் 60%–90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர் என்று அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வில்லியம் பொலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.
வலைகுடா நாடுகளில் புகைப்பிடிப்பவர்களின் மற்றும் போதைப் பொருட்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) வளைகுடா நாடுகளில் சமீபத்தில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு சில புள்ளி விவரங்களை தந்திருந்தது. வளை குடாவில் உள்ள மக்கள் தொகையில் 22 சதவீதமான நபர்கள் புகை பிடிக்கிறார்கள், 25 சதவீதமான மக்கள் போதைப்பொருட்கள் உபயோகிப்பதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 மற்றும் 20 சதவீதமான மக்கள் அதனை உபயோகிப்பதால் இரத்த கொதிப்பு நோய் மற்றும் அது சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மருத்துவர் அப்துல்லா அல் பாதாஹ் (Dr. Abdullah Al Badah, (Supervisor of the Anti – Smoking Programme at the Health Ministry) தன்னுடைய ஆய்வின் படி, தற்போது வளைகுடா நாட்டைச்சார்ந்த 600,000 பெண்கள் புகை பிடிக்கிறார்கள். இவற்றில் பெண்கள் தான் அதிகம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளநாடுகள் வரிசையில் சவூதி அரேபியா 23 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.புகையிலை பயன்பாட்டால் பலவிதமான நோய்களுக்கு உள்ளாக நேரிடும். அவற்றில் கண்களில் வெள்ளை படருதல், நியூமோனியா, வயிற்று புற்றுநோய், சதைப்புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கழுத்து புற்றுநோய் மூத்திரப்பையில் கட்டி, நுரையீரல் புற்றுநோய், சுவாசத் தொகுதிப் பாதிப்புக்கள், உணவுக் குழாயில் புற்றுநோய், குரல் வளையின் மேற்பகுதியில் பாதிப்பு, வாய் புற்றுநோய், வாயிலும், தொண்டையிலும், பாதிப்பு, இருமல், சளி பாரிசவாதம், இருதய அழுத்தம், இதய நோய்கள் போன்றன குறிப்பிடத்தக்கவை.
புகையினால் ஏற்படும் பாதிப்பு இத்துடன் முடியவில்லை இன்னும் பாருங்கள், பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது.1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்- உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை.
உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள்.
புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர்.இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது.புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை பயன்படுத்தப்படுகிறது.
உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.
புகையிலையை பயிரிடுவதனால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. இதனால் பல்லுயிரினம் பாதிக்கப்படுகிறது. 12 பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல்கள் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. புகையிலையை பயிரிடுவதற்கு பயன்படுத்தும் அதிக பூச்சிக்கொல்லி மருந்துகளால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையை அடைந்து பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. புகையிலையினால் காடுவளம் பாதிக்கப்படுகிறது.ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது.உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அணல் மின்நிலையம் ஒன்றை இயக்கி,
தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம்.இப்பொழுது கூறுங்கள் புகை நமக்கு பகைதானே? வெறும் பகையல்ல கொடும்பகை என்பதை மறந்துவிடவேண்டாம்.பிரபஞ்சத்தை படைத்து பாதுகாத்து வரும் வல்ல இறைவன் தனது திருக்குர்ஆனில் மனிதப் படைப்பை பற்றிக் குறிப்பிடும் பொழுது இவ்வாறு குறிப்பிடுகிறான்:
"திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்"(அல்குர்ஆன் 95:4).அத்தகையதொரு அழகான படைப்பான மனிதன் தனது உடல் நலத்தை சீரழித்து வாழ்வை சூன்யமாக்கும் புகைக்கு அடிமைப்படுதன் மூலம் பாரதூரமான அநீதத்தை தனக்கு இழைக்கிறான்."உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்"(அந்நிஸா: 25).
மனிதனுக்கு தனது உயிரை அழித்துக் கொள்ள எவ்வுரிமையும் இல்லை என்கின்ற பொழுது இறைவனால் வழங்கப்பட்ட தனது வாழ்வை அழிக்கும் இந்த கொடுமையிலிருந்து விடுபட்டால்தான் அவன் இவ்வுலகிலும் மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்விலும் நிம்மதியாக வாழ முடியும்.விஷத்தன்மை மிக்க வேதிப்பொருட்கள் அடங்கிய புகையிலையை தெரிந்தே பயன்படுத்தி அதன் மூலம் தனது இன்னுயிரை இழக்கும் செயல் தற்கொலைக்கு சமம்தானே!தற்கொலைக்கு என்ன தண்டனை என்பதை அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்...)கூறுவதைப் பாருங்கள்:"எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம் இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர் இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக் கொண்டே இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி), நூற்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.
பொருள் இழப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு, தனது ஆன்மாவுக்கும், உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு தன்னை சார்ந்தோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய கேடுகெட்ட பழக்கத்தை விட்டொழிப்போம். புகை நமக்கு என்றுமே கொடும் பகையாக இருக்கட்டும். இதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

source:பாலைவனத் தூது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...