Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 19, 2010

நாம் அந்நியர்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
This Article has been updated at 11.10 hrs, 17th May 2010.Updated Info: "Strangers" Video included at the end of the article.
சகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், "Strangers" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

"சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள்.

அப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பின்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா? என்று கேட்ட போது,

ஆம், நம்புவோம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

அந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள்.

பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர், என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது.

இது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார்.

ஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.

மக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார். இன்றைக்கு அந்நியராக இருக்கும் நாம், அந்த அந்நியர்களுடன் தான் நம்மை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்களை செய்த அவர்களோடுதான் நம் குழந்தைகளை தொடர்பு படுத்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார் என்று கூறி, முதல் குணமாக கூறியது, அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார் என்பது.

ஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார்,

"தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டேன்"

அப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், "வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரி கூட்டத்தில் இருந்தாய்".

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.

இதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்க்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.

இன்னும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் இன்னும் இஸ்லாத்தை பற்றிய தீப்பொறி இருக்கிறது. ஆனால் அவர்களோ குப்பைகளில் உழல்கிறார்கள், அதையே உண்கிறார்கள், அந்த குப்பைகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் யாரைப்பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இங்கே இருப்போரில் அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். அல்ஹம்துலில்லாஹ்.ஏனென்றால் இதுதான் உங்களுக்கு வேறு எங்கிருப்பதை காட்டிலும் சிறந்த இடம். நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்.

ஆக, முஸ்லிங்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.

அவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும், மைக்கல் ஜோர்டனோ, மைக்கல் ஜாக்சனோ, கால்பந்து விளையாட்டு வீரர்களோ, கூடைப்பந்து விளையாட்டு வீரர்களோ அல்ல.

தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இப்படியே ஒரு 90 நாட்கள் செய்து பாருங்கள். அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் காணலாம். அவர்களுக்கு பரிசளிப்பதை ஒரு முதலீடாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீட்டை நீங்கள் செய்யத் தயங்கினால், வெளியே இருந்து தவறான செயல்களுக்கு அவர்களை தூண்ட, வேறு சிலர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நம் பிள்ளைகளுக்கு ஒசாமா இப்ன் ஜைத் (ரலி) யாரென்பதை சொல்லித்தருவோம். அந்த பதினாறு வயது சிறுவனை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, அலி (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) என்று அனைவரும் இருந்தபோதும், இவர்தான் சிறந்தவர் என்று கூறி ஒப்படைத்தார்களே அந்த சிறுவனைப் பற்றி சொல்லி கொடுப்போம்.

அபிசீனியாவில், மன்னர் நஜ்ஜாசியிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அவரை கவர்ந்தாரே ஜாபர்(ரலி), அவரைப் பற்றி சொல்லித் தருவோம்.

களவில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களிடமிருந்து வந்தாரே அபூதர் (ரலி), அவரைப் பற்றி சொல்லித்தருவோம்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கா நகர மக்களிடம் சென்று, லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் என்று உரக்கச் சொல்ல போகிறேன் என்று அபூதர் (ரலி) சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் அவர்கள் உங்களை தாக்குவார்கள் என்று கூறியபோதும், இல்லை நான் சென்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும் என்று சென்று, அந்த மக்கள் முன் ஷஹாதாவை உரக்க கூறினார்கள். கூறியதற்கு தண்டனையாக தாக்கப்பட்டார்கள். மயங்கி விழுந்தார்கள். அடுத்த நாள் மறுபடியும் சென்று கலிமாவை உரக்க கூறினார்கள். மறுபடியும் தாக்கப்பட்டார்கள். பின்னர் நாயகம் (ஸல்) அவர்கள், அபூதரை மக்காவை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள்.

இதோ இவர்கள் தான் அந்நியர்கள். தங்கள் வாழ்க்கை முறையை நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவர்கள். இறைச் செய்தியையும், நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் மட்டுமே ஏற்று வாழ்ந்தவர்கள்.

முஹம்மது என்ற சகோதரர் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் இஸ்லாமை சரி வர பின்பற்றவில்லை. அதனால் அந்த அலுவலக மேலாளரால் மிதவாத முஸ்லிம் என்று பாராட்டப்படுகிறார்.

ஒரு நாள் நிலைமை மாறுகிறது. முஹம்மது தன் மார்க்கத்தை நன்கு புரிந்துக் கொள்கிறார். மேலாளர் மதியம் மணி 12.30 க்கு, "வாருங்கள் கீழ போய் சாப்பிட்டு வருவோம்" என்கிறார். ஆனால் முஹம்மதோ, "இல்லை, இது லுஹர் நேரம், நான் தொழ செல்ல வேண்டும்" என்கிறார். மேலாளருக்கோ அதிர்ச்சி,

"முஹம்மது என்ன ஆயிற்று உங்களுக்கு?

"இனி என்னால் முன் போல இருக்க முடியாது. இதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை".

எப்போது அவர் அப்படி சொன்னாரோ அந்த நிமிடத்தில் இருந்து அந்நியராகி விட்டார்.
அவர் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றுவதனால் அவரது மேலாளரால் மேலும் மதிக்கப்படலாம். ஆனால் முஹம்மதுக்கு அவர் அந்நியராகும் வரை இது புரிந்திருக்கவில்லை.

நீங்கள் நினைக்கலாம், மிதவாத முஸ்லிம் என்று எதையும் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் உங்களை மதிப்போடு நடத்துவார்கள் என்று. இல்லை, நீங்கள் மிதவாதி என்று சொன்னாலும் அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களுக்கான உண்மையான மரியாதையெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. அவன் கட்டளையிட்டதை நீங்கள் முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது.

அதுபோல, ஒரு சகோதரி இருக்கிறார். அவர் இதுநாள் வரை ஹிஜாப் அணிந்ததில்லை, இஸ்லாம் சொல்கின்ற பெண்ணாக வாழ்ந்ததில்லை. அவருடைய கணவரும் அதை பெரிதாக அலட்சியப்படுத்தியதில்லை. ஒரு நாள், குரானைப் படிக்கிறார், சுன்னாஹ்வை படிக்கிறார். கண்களில் கண்ணீர் வழிகிறது. இத்தனை நாளாய் இப்படி வாழ்ந்து விட்டோமே என்று வருந்துகிறார். இனி ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்வது என்று முடிவெடுக்கிறார்.

அவருடைய மாற்றத்தை கண்ட அவரது கணவர், "என்ன ஆயிற்று உனக்கு?" என்று கேட்கிறார்.

"இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொண்டேன், இனி என்னால் முன் போல் வாழ முடியாது"

"நீ அடிப்படைவாதியாகி விட்டாய். இனி நீ எனக்கு தேவையில்லை".

ஆம், இப்போது அந்த சகோதரி அந்நியராகிவிட்டார். அவருடைய கணவர், அவரை விட்டு விலகினால், அல்லாஹ் அவருக்கு வேறொரு அந்நியரை துணையாகக் கொடுப்பான்.

அந்நியர்களாக இருப்பதற்குண்டான விருப்பமும், தைரியமும் நம்மிடம் இருக்க வேண்டும். நீங்கள் அந்நியராக இருப்பதனால் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தாரே கேட்கலாம்.

அல்லாஹ்விடத்தில் அச்சம், நம்பிக்கை, தியாகம், ஒழுக்கம், தைரியம், விசுவாசம், மரியாதை, கல்வியைத் தேடுவது,ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது, சகோதரத்துவம், பொறுமை, ஒத்துழைப்பு ஆகிய இவைகள் தான் அந்நியருக்கான குணநலன்கள்.

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்க வேண்டும். நாம் அந்நியராக இருந்தால், இஸ்லாத்திற்க்கெதிரான சிலரது எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அவர்களிடம் அணுகுண்டு, Hydrogen குண்டு என்று பலவிதமான, மனித இனத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடிய குண்டுகள் இருக்கலாம்.

ஆனால் அல்லாஹ், நமக்கு அவைகளையெல்லாம் விட சக்தி வாய்ந்த குண்டை கொடுத்திருக்கிறான். அதற்கு பெயர் D-BOMB, ஆம் அது DAWAH BOMB. இந்த ஆற்றல் மிகுந்த குண்டு கட்டிடங்களை சிதறடிக்காது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இது அவர்கள் உள்ளங்களை ஊடுருவிச் சென்று அவர்களது மனதில் பலமான தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களையும் அந்நியர்களில் ஒருவராக மாற்றிவிடும் தன்மை கொண்டது.

நீங்களும் நானும் இந்த குண்டை எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆம், நாம் பெற்ற இஸ்லாம் என்ற பொக்கிஷத்தை அவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக இருக்கச் செய்வானாக...

வழி தவறி சென்று கொண்டிருக்கும் சில முஸ்லிம்களை, இறைவன், கூடிய விரைவில் அந்நியர்களில் ஒருவராக திரும்பச் செய்வானாக....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு"

அல்ஹம்துலில்லாஹ்...

இந்த மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. பதிவின் நீளம் கருதி சகோதரர் காலித் யாசின் அவர்கள் கூறிய பல தகவல்கள் விடப்பட்டுள்ளன. இந்த உரையை முழுமையாக காண விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்க்கலாம்.
இந்த உரையை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
காலித் யாசின் அவர்கள் நிகழ்த்தி என்னுள் தாக்கத்தை ஏற்ப்படுத்திய மற்றொரு உரை, "Purpose of Life" என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய உரை.

அந்த உரையின் முடிவில், இருபதிற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவினார்கள். அந்த உரையையும் நீங்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


This Article Inspired by:
1. Sheik Khalid Yasin's Lecture "Strangers".

"Strangers" Video can be downloaded from:
1. http://www.kalamullah.com/khalid-yasin.html

My Sincere Thanks to:
1. One Islam Productions, New South Wales, Australia. http://www.1islam.net
2. Br. Jafar Safamarva

நன்றி
ஆஷிக் அஹ்மத் அ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...