Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 14, 2013

அறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்!

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாத பிற மதங்களைச் சேர்ந்த அல்லது மதக்கோட்பாடுகளில் ஈடுபாடு காட்டாத அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வெளியிட்ட சில கருத்துக்கள் இவை:

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். - ஜவஹர்லால் நேரு

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள்இ ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே அப்படியின்றி அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். - எஸ். எச். லீடர் -

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்? - வாஷிங்டன் இர்விங் -

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது. - டாக்டர் ஜான்சன் -

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். - பெர்னாட்ஷா -

திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை. - நெப்போலியன்

இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும்
அரிது. - ஜி.ஜி. கெல்லட் -

சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்கமுடியாது. - வில்லியம்மூர் -

ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். - காந்திஜி

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். - தாமஸ் கார்லைல்

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. - டால்ஸ்டாய்

அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே. - கிப்பன்

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். - கலைஞர் கருணாநிதி

எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார். - கவியரசி சரோஜினி நாயுடு

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் “ஏன் அப்படி?” என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம். எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது. - மைக்கேல் ஹெச். ஹார்ட் – ‘The 100′ என்ற நூலில்..

சுருக்கமாக சொல்வதென்றால், தெளிந்த சிந்தனையும் நடுநிலை நோக்கும் கொண்ட அறிஞர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்வைப் புரட்டிப் பார்க்கையில் அதில் சுயநலமற்ற தொலைநோக்குக் கொண்ட சீரிய சிந்தனை பிரதிபலிக்கக் கண்டார்கள். கீழ்த்தரமான எண்ணங்களும் குறுகிய மனப்பான்மையும் உடையவர்கள் தங்கள் மனப்போக்கிற்கு ஏற்றவாறு அண்ணலார் மீது களங்கம் சுமத்த ஏதும் வாய்ப்பு கிடைக்காதா என இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்) நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான். நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107) 

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம். மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார்

உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.

அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம்.

சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம். இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம். Sourc – (Thehundred) தமிழில் அந்த நூறு பேர்.

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ வானவர் வந்து “இறைத்தூதர்” என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

 இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும்.

நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!

முஹம்மத் நபி (ஸல்) தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும், விசுவாசமும், குடும்பத்தின் மீது பரிவும், மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். ஜெனரல் பர்லாங்

சரித்திரத்தில் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கீழ்க்காணும் மூன்று அம்சங்களுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அவை

1) தலைவராக இருப்பவர், வழிநடத்தப்படும் மக்களின் நல்வாழ்வுக்கு வகை செய்ய வேண்டும்.

 2) ஒரு சமுதாயத்தை உருவாக்கி, அந்த மக்கள் போதிய பாதுகாப்பும் பெறுகிறேhம் என்ற உணர்வினைப்பெற வழிவகுக்க வேண்டும்.

3) அவர்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பாஸ்டர், மற்றும் சால்க் போன்ற தலைவர்கள் முதல் நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள்.

காந்தி கன்பூஷியஸ், அலெக்ஸண்டர், சீஸர் மற்றும் ஹிட்லர் போன்ற தலைவர்கள் இரண்டாவது மூன்றவது நிபந்தனையின் கீழ் வருகின்றவர்கள். ஆனால், புத்தர் மற்றும் ஏசு மூன்றவது நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். எல்லாக் காலத்திலும் நின்று நிலவக் கூடிய பெரும் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. காரணம் அவர்களிடத்தில் இம்மூன்று அம்சங்களும் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும் மோசேயிடத்திலும் இவ்வம்சங்கள் யாவும் சற்றுக் குறைவான அளவில் இருந்தன. (15.07.1974 ஆமாண்டு டைம் வார இதழ்

நீதி நெறி வகுத்தோரும், வெற்றி பல கண்டோரும் ஆகியவருற்றுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றினைப் போன்று சரியான ஆதாரபூர்வமானதாகவும் விரிவானதாகவும், விஷயங்கள் அடங்கியதாகவும் உறுதியான உண்மையுள்ளதாகவும் உள்ள வரலாற்றினை உடையவர் வேறு யாருமில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...