Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 03, 2013

முஹர்ரம் மாதமும் ஆஷுராவும்!

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்... 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி.(புனிதமான)அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197

பஞ்சா எடுப்பது
இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில் விழா எடுப்பார்கள். இஸ்லாத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் பின்பற்றக்கூடிய(?) இளைஞர்களும், இளைஞிகளும், ஆண்களும், பெண்களும் கலர்ஃபுல்லாக காட்சியளித்து, ஒருவரை ஒருவர் கண்டு இன்புற்று, மகிழ்ச்சியைக் கொண்டாடி இந்த பஞ்சாவை சிறப்பிப்பார்கள். இதனை கண்களும், கைகளும், கால்களும், உள்ளமும் செய்கின்ற விபச்சார விழா என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த பஞ்சா விழாவில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும் பெருக்கெடுத்துக் காணப்படும். 

பள்ளிவாசலில் தொழும்போது நபிவழியின் அடிப்படையில் விரலசைத்து தொழுததற்காக கொதித்தெழுகின்ற ஜமாஅத்தினரும், ஒன்றும் இல்லாத தொப்பிக்காக காவல்துறை வரை சென்று புகார் கொடுக்கின்ற ஜமாஅத்தினரும், ஆலிம் பெருமக்களும் இந்த அனாச்சாரங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் உண்மையான சமுதாய நலனை மார்க்க அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், நிர்மாணிக்கவும் இவர்கள் நாடாததுதான் வணக்கத்தின் பெயரால் சமுதாயம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணங்களாகி விட்டன. 

இந்த பஞ்சாவில் அப்படி என்னதான் நடக்கின்றது? மனிதனின் கை போன்று செய்யப்பட்ட ஒன்றை ஒரு குதிரையின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள். இந்த குதிரையின் மீது ஏறி உட்கார்ந்தாலோ, அல்லது அதன் பாதங்களில் தண்ணீர் ஊற்றினாலோ நாடியது நடக்கும் என்று இந்த பஞ்சாவைக் கொண்டாடக்கூடிய பக்தர்களும் மற்றும் திருமணமாகாத பக்தைகளும், குழந்தை பாக்கியம் இல்லாத பக்தைகளும் இந்த குதிரை மகான்(?) அருள் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் அதற்கான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடுவார்கள். 

படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஒருவன்தான் குழந்தைப் பாக்கியம் தரக்கூடியவன் என்ற நம்பிக்கையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. ஏனென்றால் இவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் குதிரைச் சாமியைத்தான் குழந்தை பாக்கியம் தருபவராக இவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் உண்மையான முஸ்லிம்களுக்கு திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்...
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;. ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 43: 49-50)

மேலும் குதிரையின் மீது கொண்டுவரப்படுகின்ற கையின் விளக்கமாகிறது அதிலுள்ள ஐந்து விரல்களும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஐந்து கடவுள்களைக் குறிப்பதாகும். அவர்கள் முஹம்மது(ஸல்), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோராவர்.

இந்த பஞ்சா எடுக்கின்ற சுன்னத் ஜமாத்தினர்(?) இந்த ஐவரையும் கடவுளாகத்தான் வணங்குகின்றனர் என்று நாமாக கற்பனை செய்து கூறவில்லை. இவர்கள் ஓதக்கூடிய மௌலிதுகளில் ஒன்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
லீ கம்ஸத்துன் உத்ஃபீ பிஹா ஹர்ரல் வபாயில் ஹாத்திமா அல்முஸ்தஃபா வல் முர்தலா வப்னாகுமா வல்பாத்திமா இதன் பொருள்: எனக்கு முஹம்மது, அலீ, ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா ஆகிய ஐந்து நபர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் மூலம் முடிவான வேதனையாகிய (நகர நெருப்பின்) சூட்டை நான் அணைத்து விடுவேன் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நரக நெருப்பை விட்டும் இறைவனைத் தவிர வேறு யாரும் காப்பாற்ற முடியாது என திருமறைக் குர்ஆன் சொல்கிறது.
'என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 67:28)

இறைவன் நாடிவிட்டால் இறைவனுடைய வேதனையி லிருந்து தன்னைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது எனக் கூறுமாறு அல்லாஹ் நபியவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! 

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன் என்றும் கூறுவீராக!
(அல்குர்ஆன் 72: 21-22)

நபியவர்களுக்கே இறைவனுடைய வேதனையை விட்டும் தடுக்கின்ற அதிகாரம் இல்லை என திருமறைக் குர்ஆன் குறிப்பிடும் போது பஞ்சா எடுப்பவர்கள் இந்த ஐவரும் தங்களை நரகத்தை விட்டும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்தக் கையை எடுத்துவருகின்றனர். இவர்கள் அல்லாஹ்வை மறுத்து இறைவனுக்கு இணைகற்பிக்கின்ற மாபாதகச் செயலையே செய்கின்றனர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நபி மூசா(அலை) அவர்கள், அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிபெற்று கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட தினமான ஆஷுரா தினத்தை ஒரு சாரார் களங்கப்படுத்தி அதை துக்கமிக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.

அலீ(ரலி) அவர்களை தூதராக ஏற்றுக் கொண்ட ஷியாக்கூட்டத்தினர், அலீ(ரலி) அவர்களின் மகனார் ஹுசைன்(ரலி) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கொல்லப்பட்டார்கள் என்றும் அதற்காக துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி நெஞ்சில் அடித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, ஊர்வலம் நடத்துவது, தீக்குண்டத்தை வலம் வருவது என்பன போன்ற வீணான காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் செய்து வருகின்றனர்.

இவ்வாறு செய்வது பெரிய பாவமாகும். அது மட்டுமின்றி, எந்த ஒரு முஸ்லிமும் இப்படிச் செய்யக்கூடாது. இது போன்று செய்தால் அவன் முஸ்லிம் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
கன்னத்தில் அடித்துக் கொண்டு, சட்டையைக் கிழித்துகொண்டு, அறியாமைக் காலத்து ஒப்பாரி வைப்பவன் என்னைச் சார்ந்தவனில்லை. அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி-1294, முஸ்லிம்-148, திர்மிதி-920, நஸயி-1827
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், துக்கம் என்ற பெயரில் மார்பில் அடித்துக கொள்ளும் இந்த ஷியாக் கூட்டத்தினரின் செயலை சிலர் முஸ்லிம்கள் பெரிய சாதனையை செய்து விட்டதைப்போல் ரசிக்கின்றனர்.அங்கே ஒன்று கூடுகின்றனர். ஆனால் இது போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியத்தை யார் செய்தாலும் அதை தடுக்க வேண்டும்.அதற்கு சக்தியில்லையென்றால் இஸ்லாத்திற்கே கேவலம் ஏற்படுத்தும் இவர்களின் காரியங்களை பார்த்து வேதனைப்பட்டு ஒதுங்கி விட வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
(கவலையின் போது) ஒப்பாரி வைப்பவனையும், தலையை மழித்துக் கொள்பவனையும் ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டு விலகிக் கொண்டேன் அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: முஸ்லிம்-149
இவர்கள் தான் இப்படியென்றால், தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் சிலரது காரியங்கள் இன்னும் படுமோசமாக இருக்கிறது. முஹர்ரம் பத்தாம் நாள் வந்த உடனேயே பஞ்சா எடுப்பது (ஐந்து விரல்களில் படும் அளவிற்கு மஞ்சளைக் கையால் தட்டி வீட்டுக் கதவுகளில் அப்புவது), ஹுசைனார் பெயரில் மவ்லித் ஓதுவது, பத்தாம் நாளில் மட்டும் நோன்பு நோற்று யூதர்கள் வழியைப் பின்பற்றுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இதுவெல்லாம் நபிகளாரின் வழிமுறைகளல்ல. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ ஸஹபாக்கள் ஷஹீதானார்கள். ஸஹாபியப் பெண்கள் இறந்துள்ளார்கள். இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களுடைய பாசத்துக்குரிய மனைவி கதிஜா(ரலி) அவர்களும் இறந்துள்ளார்கள். இதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்தார்களா? 

நெஞ்சில் அடித்துக் கொண்டார்களா?சட்டையைக் கிழித்துக் கொண்டார்களா? தீக்குண்டத்தை சுற்றி வந்தார்களா? மொட்டையடித்துக் கொண்டார்களா?ஹுசைனார் மவ்லித் ஒதினார்களா? இல்லவே இல்லை.
நபி(ஸல்) அவர்கள் செய்து காட்;டாத தடுத்துள்ள இந்த அனாச்சாரங்களை நாம் ஏன் செய்ய வேண்டும். இதனால் நன்மை கிடைக்குமென்றா? இல்லையே!. இது போன்ற காரியங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள் என்றே நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
புதிய அனாச்சாரங்கள் அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் (தள்ளி) விடும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயி-1560

மேலும் ஆஷுரா தினம் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எப்படி சிறப்பு தினமாக கருதப்பட்டு வந்தது என்பதையும் விளங்க வேண்டும். ஏனெனில் சிறப்பு என்று எண்ணி நம் சமுதாயத்தினர் தவறான காரியங்களை செய்து வருகின்றனர்.

ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பிற்கு பிறகு சிறந்தது, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் வைக்கப்படும் நோன்பாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1962)

ஆஷுரா தினத்தில் வைக்கப்படும் நோன்பு கடந்த ஒரு வருடத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும் எனக் கூறினார்கள் (அபூகதாதா(ரலி) முஸ்லிம் 1977)
நபி(ஸல்) அவர்கள் மதினா வந்தபோது ஆஷுரா தினத்தில் வேதக்காரர்கள் நோன்பு நோற்றிருந்தனர். அப்போது வேதக்காரர்கள், இன்றைய தினம் மகத்துவமிக்கதாகும். அல்லாஹ் நபி மூஸா(அலை) அவர்களை காப்பாற்றி ஃபிர்அவ்னின் கூட்டாத்தார்களை கடலில் மூழ்கடித்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக நபி மூசா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இவர்களைவிட நாம்தான் மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று கூறி ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று மக்களையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) புஹாரி 3145)
'நபி(ஸல்) அவர்கள் மதினா வந்த போது எங்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது நபி மூஸா(அலை) அவர்கள் வெற்றி பெற்ற தினமாக இருப்பதால்) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் தினமாயிற்றே என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டில் முஹர்ரம் 9ம் நாளிலும் நோற்போம் என்று கூறினார்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) அபூதாவூத் 2087)
ஆகவே, மேற்காணும் விஷயங்களை நன்கறிந்து புனிதமிக்க ஆஷுரா தினத்தைக் கண்ணியமாகக் கருதி முஹர்ரம் 9, 10-ல் நோன்பு நோற்று புண்ணியம் தேடுவோம். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத மார்க்கம் காட்டித் தராத காரியங்களை செய்வதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...