Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 07, 2013

காரைக்காலில் புதிய விமான நிலையம் - மத்திய அரசு ஒப்புதல்

சென்னை:காரைக்காலில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.புதுச்சேரி மாநில எல்லையில் இருந்தாலும் மூன்று பக்கமும் தமிழக எல்லை சூழ்ந்த நகராக காரைக்கால் விளங்கி வருகிறது. மேல வாஞ்சூர் வரை காரைக்கால் எல்லை உள்ளது. இங்கு சி.பி.சி.எல் பெட்ரோலிய நிறுவனம் இயங்குவதால் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தமிழகத்தை விட எல்லாவிதமான பொருட்களின் விலையும் இங்கு குறைவு என்பதால் இங்கிருந்து பலர் அங்கு சென்று எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வருகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில் போன்ற வழிபாட்டு தலங்கள் இங்கு உள்ளன. காரைக்காலுக்கு மிக அருகில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், நாகை துறைமுகம் போன்ற இடங்களும் உள்ளன. மேலும் 60 ம் கல்யாணத்துக்கு புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ள திருக்கடையூரும் காரைக்காலுக்கு அருகே உள்ளது. இவ்வாறு முக்கிய இடங்கள் உள்ளதால் காரைக்காலுக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. காரைக்கால் துறைமுகம், ஆயில் ஜெட்டி போன்றவை உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காரைக்காலில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதையடுத்து விமான நிலையம் அமைக்க கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்தது. மொத்தம் 562 ஏக்கர் நிலங்கள் இதற்காக வாங்கப்பட்டன. கடந்த 2011 ல் நிலம் வாங்கியதோடு பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் நின்றது. இந்நிலையில் காரைக்கால் விமான நிலையத்துக்கு மத்திய அரசு, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. ‘காரைக்கால் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ என்று காரைக்கால் விமான நிலையத்துக்கு பெயர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக அமையும் இந்த
விமான நிலையத்தில் தற்போது 1200 மீட்டரில் ரன்வே அமைகிறது.

ஒரு மணி நேரத்தில் 250 பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைகிறது. போயிங் 737 ரக விமானங்கள் மட்டுமே இங்கு வந்து செல்லும். காரைக்கால் தவிர கர்நாடகாவில் குல்பர்கா, ஹசன், ஷிமோகா, கேரளாவில் ஆரண்முல்லா, கண்ணூர் ஆகிய இடங்களிலும் புதிய விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-tamilmurasu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...