Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 29, 2013

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு; மின் பற்றாக்குறை!

காற்றாலை மின் உற்பத்தி கடந்த சில தினங்களில் திடீரென குறைந்ததால் தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி புதன்கிழமை 254 மெகாவாட்டாகக் குறைந்தது. இதனையடுத்து, புதன்கிழமை காலையில் 1,703 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த மின் பற்றாக்குறையைச் சரிசெய்ய பல இடங்களில் 2 முதல் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தது. இதையடுத்து, தமிழகத்தில் அமலிலிருந்த மின்வெட்டு ஜூன் 1-ம் தேதி முதல் முற்றிலும் நீக்கப்பட்டது. அதோடு, பருவமழை காரணமாக நீர் மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்களுக்கான 40 சதவீத மின்வெட்டும் ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் மாதத்தோடு காற்றாலை மின் உற்பத்தி குறையும் என்பதால், அதற்குள்ளாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட 2 புதிய யூனிட்டுகள், வல்லூர் அனல் மின் நிலையத்தில் புதிய யூனிட் போன்றவற்றின் மூலம் தேவையான மின்சாரத்தைப் பெறவும் பணிகள் நடைபெற்று வந்தன.

ஓரிரு நாள்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி 90 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டதால், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட்டுக்கும் அதிகமாக இருந்த மின் உற்பத்தியும் இப்போது 1,189 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. எனவே, இரண்டு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு
அமல்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள புதிய யூனிட்டுகள், மேட்டூர் அனல் மின் நிலையம் போன்றவை விரைவில் முழு மின் உற்பத்தியளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அக்டோபர் முதல் பருவமழை காலம் என்பதால் மின் தேவையும் பெருமளவு குறையும்.

எனவே, இந்த இடங்களில் மின் உற்பத்தித் தொடங்கினால் இரண்டு வாரங்களில் மின் தேவைக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...