இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று கொள்ளுமேடுXpress பிரார்த்தனை செய்கிறது.
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21ம் நாள் சென்னை பெரம்பூரில்,
வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R.B.C.C.C. பள்ளியில் தமது ஆரம்ப கல்வியை கற்ற அவர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971ல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார் சாதீய இழிவுகளையும், சமூக கொடுமைகளையும் கண்டித்து எழுதினார், பேசினார். அவர் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார்தாசனாக மாறினார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றினார். அவரிடம் நகைச்சுவை உணர்வு நிரம்ப காணப்பட்டது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ நிபுணர் என்பதோடு அவர் ஒரு நடிகராகவும் திகழ்ந்தார்.
பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் நடித்து சமூக அவலங்களை எடுத்துக் காட்டினார். மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். ஏராளமானோருக்கு சிகிட்சை அளித்துள்ளார். அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார்தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தர்மமும்’ என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார். இந்துக்களின் ஆன்மீக குருவாக தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார்தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார்.
இந்து மத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொண்டார். மக்காவில் வைத்து இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ், உடனே உம்ரா என்ற புனித கடமையையும் நிறைவேற்றினார். முஸ்லிமான பிறகு அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் -.
2 கருத்துகள்:
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் பணிகளைப் பொருந்திக்கொள்வானாக.
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நாடறிந்த அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பிரபல மனோதத்துவ நிபுணருமான பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் இன்று திங்கட்கிழமை (19.08.2013) அதிகாலை 1:30 மணியளவில் உடல் நலக் குறைவு காரணமாக தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.
தன்னுடைய நீண்டகால நாத்திக+புத்தமதப் பயணத்தின் இறுதியில் தன்னையும் இவ்வுலகையும் படைத்தவனைக் கண்டுகொண்ட பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், "கருத்தம்மா" என்ற பெண்சிசுக் கொலையை மையப்படுத்தி எடுத்திருந்த திரைப்படத்தின் மூலமும் தமிழக மக்களிடையே பிரபலமானவராவார். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்து தனது பெயரையே நாத்திகச் சிந்தனையாளரான பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை இணைத்துக் கொண்டு, 'பெரியார்தாசன்' ஆக வாழ்ந்தவர்.
சமூக சிந்தனைக் கருத்துகளைப் பரப்புவதில் முன்னணியில் நின்ற அவர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தைப் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த பெரியார்தாசன், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி (வியாழக்கிழமை) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்தில் இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு, தன்பெயரை "படைத்தவனுக்கு அடிமை" என்ற பொருள்படும் "அப்துல்லாஹ்" என்று மாற்றிக் கொண்டார்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் இஸ்லாமியர்கள் தங்கள் அமைப்பின் சார்பாக சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் உடல் நலிவுற்று சென்னை சோளிங்கநல்லூர் குளோபல் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு K-Tic பள்ளிவாசலில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேராசிரியர் அவர்கள் கலந்து கொண்டு "முஸ்லிம்களிடம் இவ்வுலகம் எதிர்பார்ப்பது என்ன?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான பேருரைரையாற்றிய நிகழ்வுகள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன.
எல்லாம் வல்ல அல்லாஹ் பேராசிரியர் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி! வஸ்ஸலாம்.
அன்புடன்....
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,
பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்கள்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: https://groups.google.com/q8tic
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...