Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 21, 2013

சிரியாவில் பஷார் அரசின் அட்டுழியம் - ரசாயன தாக்குதலில் 213 பேர் பரிதாப பலி!!

சிரியாவில் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

போராட்டக்காரர்கள் ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார். ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. 29-வது மாதத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள அய்ன் டர்மா, சமால்கா, ஜோபர் ஆகிய பகுதிகளில் அதிபரின் படைகள் ரசாயன குண்டுகளை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டன. சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் ஊடுருவி நரம்பு மண்டலத்தை முற்றிலுமாக செயலிழக்க வைக்கும் தடை செய்யப்பட்ட நச்சுப்பொருள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள் உள்பட 213 பேர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அவர்களின் உடல் உறுப்புகள் மிகவும் சிதைந்து போய் இருப்பதாகவும் பலரது கருவிழிகள் உருகி வழிந்த நிலையிலும் பலரது வாயிலிருந்து நுரை தள்ளியபடி உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பணியாளர்கள்
தெரிவித்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற போது அனைவரும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் கூறினர். மக்களை கொல்ல அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்த போதிலும், இதனை ராணுவம் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...