Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 06, 2013

கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு பழைய பாலத்தில் போக்குவரத்து தடை!

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பழைய பாலத்தில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி விட்டதால் இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் முழுவதும் அப்படியே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நேற்றுமுன்தினம் முழு நீர்மட்ட அளவான 120 அடியை எட்டியது.

அதன்பிறகும் அணைக்கு நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,35,491 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 21 ஆயிரத்து 841 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்னும் திருச்சி முக்கொம்பை அடையவில்லை. இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்புக்கு வினாடிக்கு 86 ஆயிரத்து 332 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இவ்வளவு அதிக தண்ணீர் காவிரியில் விட்டால் சேதம் ஏற்படும் என்பதற்காக நேற்று காலை 11.15 மணிக்கு முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று காலை நிலவரப்படி முக்கொம்பில் இருந்து 60,580 கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. மீதமுள்ள 25,752 கன அடி தண்ணீர் காவிரியில் விடப்பட்டது.

கல்லணையில் இருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 22,588 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 83,168 கன அடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த அனைத்து மணல் குவாரிகளும் காலி செய்யப்பட்டது. கொள்ளிடம் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் நேற்றே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரையோரத்தில் உள்ள மக்கள் வெளியேறும்படி நேற்று கொள்ளிடக்கரை முழுவதும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை, அரியலூர், நாகை மாவட்டங்களை கடந்து
கடலில் கலக்கும்.

நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் என்ற கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள முதலைமேடு, முதலைமேடு திட்டு, நாதல்படுகை, வெள்ளமணல் ஆகிய 4 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சமயபுரம், மண்ணச்சநல்லூர் போன்ற இடங்களுக்கு கார், டூ வீலர் மற்றும் நடை பயணமாக செல்பவர்கள் கொள்ளிடம் பழைய பாலத்தின் வழியாகதான் செல்வார்கள். தற்போது கொள்ளிடத்தில் வெள்ளம் செல்வதால் இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் வைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

போக்குவரத்து பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டது. இதற்கிடையே இன்று காலை 8 மணிக்கு கரூர் மாவட்டம் மாயனூர் படுகை அணைக்கு வினாடிக்கு 1,19,150 கன அடி தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் இன்று மாலை முக்கொம்பு வரும். அதன்பிறகு மேலும் 25 ஆயிரம் கன அடி அதிக தண்ணீர் கொள்ளிடத்தில் திறக்கப்படும். எனவே கொள்ளிடத்தில் மேலும் வெள்ள அபாயம் ஏற்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
source:tamilmurasu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...