Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 03, 2015

வீராணம் ஏரிப் படுகையில் ஒரு பயணம்- தி இந்து தமிழ் கட்டுரை


    சென்னை மக்களின் தாகம் தணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் வீராணத்தின் தோற்றம், அதன் பாசனப் பகுதிகள், வீராணத்தை கடவுளாக நேசிக்கும் மக்கள், பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என ஆதங்கப்படும் ஆயக்கட்டு விவசாயிகள்.. என பல்வேறு தகவல்கள் உங்களுக்காக..
“குளம்படியில் நீர் படிந்தால் குருவி குடித்துப்போம்.. வீராணத்தில் நீர் சேர்ந்தால் நாடு செழித்துப்போம்’’-- ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரம் திவ்ய பிரபந்தமாகத் தொகுத்த வைணவப் பெரியார் நாதமுனிகள் அருளிய வரிகள் இவை.
இதற்கு நிகழ்காலச் சான்றாக நிற்கும் வீராணம் ஏரி, 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் வீதம், குழாய்கள் வழியாக 228 கி.மீ. தொலைவுக்கு பயணித்து சென்னையை வந்தடைகிறது.
வீராணம் வந்த வரலாறு
வீரநாராயணபுரம் என்ற விண்ணகர்- இதுதான் காட்டுமன்னார்கோவிலின் முந்தைய பெயர். கி.பி. 907-ல் சோழநாடு பராந்தக சோழனின் ஆளுகையில் இருந்தபோது, விவசாயத்துக்கு நீராதாரம் இல்லை என்று வீரநாராயணபுரத்து மக்கள் மன்னனிடம் முறையிட்டனர். இதையடுத்து, பராந்தக சோழன் தனது சேனைகளைக் கொண்டு வீரநாராயணபுரத்தில் பிரம்மாண்ட ஏரியை வெட்டி, அதற்கு தனது இஷ்ட தெய்வமான வீரநாராயணப் பெருமாளின் பெயரையே சூட்டி (வீரநாராயணபுரம் ஏரி), ஏரியை பெருமாளின் சொத்தாகவும் அறிவித்தான். கி.பி. 907- கி.பி. 935 காலத்தில் ஏரி வெட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
44,856 ஏக்கர் பாசனம்
வீராணம் ஏரியின் மொத்த நீர்ப் பரப்பு பகுதி 38.65 சதுர கி.மீ. கொள்ளளவு 1.455 டிஎம்சி. ஏரியின் கீழ்ப் புறத்தில் உள்ள 28 பாசன வாய்க்கால்கள், மேல் புறத்தில் உள்ள 6 பாசன வாய்க்கால்கள் மூலம் தற்போது மொத்தம் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரி மூலம் 18 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயமும், 1,150 ஏக்கரில் குள்ளக்கார் பருவ விவசாயமும், 550 ஏக்கரில் வெற்றிலை விவசாயமும் நடைபெற்ற காலமும் உண்டு. ஆனால், 1975-ல் காவிரி தாவா ஏற்பட்ட பிறகு இங்கே இருபோக விவசாயம் இல்லாமலே போய்விட்டது.
நீர்ப் பிடிப்பு பகுதிகளும், தடுப்பணைகளும்
தொடக்கத்தில், இப்போதைய அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 427.35 சதுர கி.மீ. பகுதிதான் வீராணம் ஏரியின் பிரதான
நீர் சேகரப் பகுதியாக இருந்தது. இந்த மாவட்டங்களிலிருந்து ஓடி வரும் மழைநீர், செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை ஆகிய வாய்க்கால்களில் வழிந்தோடி வந்து வீராணத்தை நிரப்பியது.
கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய ராஜேந்திர சோழன், கங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக வெட்டிய சோழகங்கம் என்ற ஏரியிலிருந்து (தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது) மழைக் காலங்களில் உபரியாக வெளியேறும் தண்ணீரும் கருவாட்டு ஓடை, வடவாறு ஆகியவற்றின் வழியாக வீராணத்தை வந்தடைகிறது.
மேட்டூர் அணைக்கு முன்பே கட்டப்பட்ட கீழணை
தமிழகத்தில் முக்கிய நீராதாரங்களை உருவாக்கியதில் பென்னி குயிக் போன்ற ஆங்கிலேயப் பொறியாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. அவரைப் போலத்தான் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனும்.
குடகிலிருந்து காவிரியில் திரண்டு வரும் தண்ணீரைத் தேக்கிவைக்க 1836-ல் திருச்சி முக்கொம்பு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையை (மேலணை) ஆர்தர் காட்டன் கட்டினார். பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கிராமத்தில் கீழணையையும் கட்டினார். (அதன் பிறகுதான் மேட்டூர் அணை கட்டப்பட்டது).
கீழணை கட்டப்பட்ட பிறகு வீராணம் ஏரியின் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, காவிரித் தண்ணீரும் வீராணத்துக்கு வரத் தொடங்கியது.
வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வடவாறு
கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து வடக்கு ராஜன் கால்வாய், தெற்கு ராஜன் கால்வாய் மற்றும் வடவாறு ஆகிய 3 கால்வாய்கள் பிரிகின்றன. வடக்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், கடலூர் மாவட்ட பாசனத்துக்கும், தெற்கு ராஜன் கால்வாய் வழியாக பாயும் தண்ணீர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பாசனத்துக்கும் பயன்படுகிறது. வடவாறு வழியாக 22 கி.மீ. பயணிக்கும் தண்ணீர், வீராணம் ஏரியின் தெற்கு எல்லையில் ஏரியை வந்தடைகிறது.
நீர்மட்டம் காட்டும் ஜலகண்டீஸ்வரர்
வீராணம் ஏரியின் தெற்குமுனை லால்பேட்டை பகுதியில் இருக்கிறது. ஏரி முழுக் கொள்ளளவை தாண்டும்போது, தண்ணீரை வெள்ளியங்கால் வாய்க்காலில் வெளியேற்றுவதற்காக 14 மதகுகள் அமைத்துள்ளனர்.
ஏரியின் நீர்மட்டத்தை அறிவதற்காக இந்த மதகுகள் இருக்கும் பகுதியில் ஜலகண்டீஸ்வரர் சிலையை புடைப்புச் சிலையாக நிறுவியுள்ளனர். வடக்கு திசையில் ஏரியை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிலையின் கழுத்துப் பகுதிக்கு மேலே தண்ணீர் உயர்ந்தால் ஏரி முழுக் கொள்ளளவை எட்டிவிட்டதாக கணிக்கப்பட்டிருக் கிறது. இப்போதும் இந்த அளவீடு மிகத் துல்லியமாக உள்ளது.
அதேபோல, ஏரியின் வடக்கு எல்லையில் உள்ள புதிய பாசன வடிகால்வாயில் 3 மதகுகள் உள்ளன. இதன் வழியாக பாசனத்துக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 2,550 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...