Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 17, 2011

உடைந்த ரகசியங்கள் – Wikileaks (விக்கீ லீக்ஸ்)

இணையதளம் ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகம் இல்லை என்பதை ‘விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் உண்மை படுத்திவிட்டது. பாதுகாப்பின் உச்சம் என்று உலகம் நம்பும் பென்டகனின் ரகசியங்களை நோண்டியிருக்கிறது இந்த இணையதளம்.
16 வயதிலேயே கணிணியின் சகல பரப்பிலும் புகுந்து விளையாடிய ஜீலியன் பால் அசஞ்சே (Julian paul Assa nge) என்ற 39 வயது இளைஞர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விஞ்ஞான தொழில் நுட்பத்தை கொண்டு பக்கம் பக்கமாக களவாடிவிட்டார்.

இந்த செயல் மூலம் ஒரு செங்கல் கூட தகர்க்கப்படாமல் பெண்டகன் மீது அசஞ்சே விஞ்ஞான யுத்தம் (Scientific War) நடத்தியுள்ளார். தற்போது, அசஞ்சே அமெரிக்காவுக்கு பின்லாடனை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று அமெரிக்கர்களே சொல்லத் தொடங்கிவிட்டார்கள். காயம் பலமாக இருக்கிறது. ஆனால் அழுகையும் கண்ணீரும் இல்லை, ரத்தமும் யுத்தமும் இல்லை. ஆனால் கோபம் விம்மி தெரிக்கவே செய்கிறது.

அசஞ்சேயை அமெரிக்காவுக்கு கொடுத்து விடுங்கள் என்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் லண்டனிடம் அமெரிக்கா கோருகிறது. ஆனால். ‘என்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் சட்டப்படியான விதிகள் பிரிட்டன் சட்டத்தில் இல்லை என்று கூறும் அசஞ்சே, தான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் கொல்லப்படலாம் என்றும் தெரிவிக்கிறார்.அதேநேரம் அமெரிக்கா என்னை துன்புறுத்த நினைத்தால் அதன் பொருளாதாரத்தை சின்னா பின்னப்படுத்துவேன் என்று ஆஜானுபாகுவான வார்த்தைகளால் மிரட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்,
அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் இருக்கும் வங்கிகளின் பட்டியல் வெளியிடுவேன் என்கிறார்.அதனால் அதன் பங்குதாரர்கள் பங்குகளை நீக்கி கொள்வதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழும் என்பது அவர் வாதமாக இருக்கிறது. அமெரிக்காவை அச்சுறுத்துவதில் பின்லாடனை பின்னுக்குத் தள்ளியிருக்கும் அசஞ்சே ஒரு வெள்ளை இனத்தவர். பிறப்பால் ஆஸ்திரேலியர். சுவீடன் நாட்டில் குடியேறியவர்.
17 வயதிலேயே Cili Bank-ல் கணிணி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதன் கணக்குகளுள் நுழைந்து 5 லட்சம் யூரோக்களை (யூரோ என்பது ஐரோப்பிய ஐக்கிய நாடுகளின் நாணயம், ஒரு யூரோ என்பது இந்திய மதிப்பில் சுமார் 60 ரூபாய்) திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டு கணிணிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் அவர் மீது வழக்கு தொடரப்படவில்லை. கணிணிகள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

அசஞ்சே தனி மனிதராக செயல்படவில்லை. அவருக்கு பின்னே ஒரு குழு இருக்கிறது. அதனிடம் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மாட்டிக் கொண்டுள்ளன என்று தெரியாது. ஆனால் அதற்குமுன் அசஞ்சே, அரசுகள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்களின் நட்சத்திரமாகிவிட்டார்.
பல நாடுகளில் அவருக்கு ஆதரவாக மக்கள்திரள் ஏற்படுகிறது. சுவீடனில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு வெறும் பழிவாங்கும் நடவடிக்கையே என்பதை சுமத்தப்பட்ட அபத்தமான குற்றச்சாட்டு மெய்ப்பிக்கிறது. அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பெண்களால் கொடுக்கப்பட்ட அல்லது கொடுக்கவைக்கப்பட்ட புகாரின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்கள் வலைதள வித்வானுக்கு விரிக்கப்பட்ட வலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சுவீடனில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அல்லது ரசிகர்கள் சுவீடனின் வங்கிகளை அடித்து நொறுக்கி அதன் செயல்பாடுகளை முடக்கினர்.பின்னர் அரசு வழக்கறிஞர் கொடுத்த ‘express permission’ (வெளிநாடு செல்லும் அனுமதி) க்கு பிறகு அவர் பிரிட்டன் சென்றார். லண்டனில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 1,80,000 யூரோக்கள் ஜாமீன் தொகையை, ஜெமிமாகான் (பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மனைவி) படத்தயாரிப்பாளர் Ken Loach பிரபல வழக்கறிஞர் Geoffery steen பேராசிரியர் Patricial David மற்றும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் John Pilger ஆகியோர் வழங்க முன்வந்த போதும் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி Howard Riddle மறுத்துவிட்டார்.

அதற்கு Riddle ‘இந்த நாட்டின் சமூகங்களுக்கிடையேயான ஐக்கியத்தை பலகீனப்படுத்திவிட்டார், மேலும் அவர் தலைமறைவாகிவிடுவார்” என்று காரணம் சொன்னார். லட்சக்கணக்கான நம்பகமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் எப்படி பெற்றது என்பதற்கான ஆதாரம் தொரியவில்லை.
இதனிடையே, அமெரிக்காவின் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் Michael Mukasey (மைக்கேல் முக்கஸே) அசஞ்சேயை அமெரிக்காவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிறார். அசஞ்சே ஒரு ஆஸ்திரேலியர் என்ற போதும் அவர் மீது அமெரிக்கா தேசதுரோக குற்றம் சுமத்துகிறது. தேசத்தை சாராதவர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்துவது எவ்வாறு? உசாமா பின்லாடனைபோன்று அசஞ்சேயை வேட்டையாட வேண்டும் என்கிறார் அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியரசு கட்சி உறுப்பினர் சாராபாலின். இவர் துணை அதிபர் தேர்தலில் நின்று தோற்றவர்.

விக்கிலீக்ஸ் சட்டவிரோதமாக செயல்பட்டு அமெரிக்க அரசுக்கு களங்கம் (Blemish) ஏற்படுத்திவிட்டது என்கிறார் வெளியுறவு அமைச்சர் கில்லாரி கிளிண்டன். விக்கிலீக்ஸை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அடையாளப்படுத்த வேண்டும், உளவு சட்டத்தின்படி (Espionage Act) அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர்.
தன்னை ஒரு பத்திரிக்கையாளர் அல்லது விஞ்ஞான செய்தியாளர் (Scientific Journalist) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் அசஞ்சேயின் விக்கிலீக்ஸ், அது வெளியிட்டு வரும் செய்தி தரம் பிரிக்கப்படாதவை (raw information) என்று வெளிப்படையாக சொல்கிறது.
இதிலிருந்து தெரியவருவது இதுதான். எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டுடன் உண்மையான உறவு கொள்ளவில்லை என்பதுதான்.

2010 நவம்பர் மாதம் 28ஆம் தேதி, அமெரிக்க அரசு துறை மற்றும் தூதரகத்தின் ரகசிய பதிவுகளில் ஏறக்குறைய 2,50,000 வலைதள செய்திகளை (cables) விக்கிலீக்ஸ் வலைதளமும் 4 செய்திதாள்களும் வெளியிட்டன. மிக கவனமாக 291 வலை தளங்களை மட்டும் வெளியிட்டது.

சில நாட்களுக்குப் பிறகுThe Gaurdian நாளிதழ் பதிவிறக்கம் செய்யதக்க வகையில் வலைதளங்களின் பட்டியலை வெளியிட்டு ஆர்வத்தை தூண்டிவிட்டது (Whets). வாஷிங்டனின் Foggy Bittm-ல் உள்ள State Department மற்றும் 274 தூதரகங்களின் வலைதளங்களின் பட்டியல் அவை. வெளியிடப்பட்ட வலைதளங்களின் செய்திகள் 1966க்கும் 2010க்கும் இடைப்பட்டவை எனினும் கொத்தான் செய்திகள் 2006க்கும் பிறகானவை.

இந்த வலைதளங்களின் செய்திகளில் தூதர்கள் அவர்கள் பணியிலுள்ள நாடுகளின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி கருத்து தெரிவித்ததாக இருக்கிறது. இந்த தூதர்களிடம் அமெரிக்க அரசியல் விவகார துறை கேட்ட கேள்விகளும் அதற்கு தூதர்கள் அளித்த பதில்களும், மேலும் தூதர்கள் அல்லது அரசு அதிகாரிகள் (Political Officers) கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் (meetings) பற்றிய அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறுதான், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், ‘லஷ்கர்-இ-தொய்பாவை விட இந்து பயங்கரவாதம் தான் நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று ராகுல் காந்தியும், ஆர்னால்டு சுவாட்சினேக்கர் மனைவி மரியாவிடம் ‘இந்திய முஸ்லிம்கள் அமெரிக்காவின் மீது கோபமாக இருக்கிறார்கள்’ என்று சோனியா காந்தி சொன்னதாகவும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டது.

தற்போது, விக்கிலீக்ஸ் தொடர்ந்து வெளியிடப்போவதாக மிரட்டி வருவதையட்டி உலக நாடுகள் மிரட்சியில் உள்ளன. 1917-ல் ஜரோப்பாவின் மிக முக்கியம் வாய்ந்த Tsarist கடிதங்களை (correspondence) வெளியிட்டது. அதன்பிறகு மிகப்பெரிய அளவில் அரசின் தகவல் பரிமாற்றம் வெளியிடப்பட்டது .

2009 தொடக்கத்தில், எகிப்துக்கான அமெரிக்க தூதர் மார்க்ரெட் ஸ்கோபே (Margaret Scobey) ஹில்லாரி கிளிண்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்நேரம் கில்லாரி எகிப்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் அபுல் கெய்த்தை சந்திக்க இருந்தார்.
ஸ்கோபே எழுதிய கடிதத்தில் அபுல்கெய்த்தை சந்திக்க தன்னை தயார் படுத்துமாறும், கூறியிருந்தார். அந்த வலை தள செய்தியில், கெய்த்தின் குணாதிசயங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ‘கச்சிதமான, நல்ல மனநிலையில் நாகரீகமாக உரையாடுவார் மேலும் கெய்ரோவில் நடக்கவிருக்கும், ‘காசாவுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்திற்கு’ வர அழுத்தம் கொடுப்பார் போன்ற செய்திகளை ஸ்கோபே குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கெய்த் மனித உரிமைகள் (குறிப்பாக அய்மன் நூர்), அரசியல் சீர்திருத்தம் அல்லது ஜனநாயகப்படுதல், போன்றவை பற்றி பேசமாட்டார். ஆனால் நீங்கள் பேசவேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அய்மன் நூர் Elghad (எல்காட்) என்ற சுதந்திர கட்சி (Liberal Party) யின் தலைவர். அவர் 2005 முதல் கெய்ரோவின் சிறையில் இருந்து வந்தார். கிளிண்டனின் சந்திப்பிற்கு பிறகு உடனடியாக நூர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்றொருபுறம் அமெரிக்க புலனாய்வுத்துறை பல்வேறு கைதிகளை எகிப்து புலனாய்வு துறைக்கு பிடித்து கொடுத்தது.

இந்த கைதிகளில் பலர் அல்கொய்தா உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர். இதனை ஸ்கோபே விமர்சித்திருக்கிறார்.
வலைதள செய்திகள் பலவற்றில், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பலரின் வெளிநாட்டு பயணம் மற்றும் அந்நாட்டு தலைவர்களுடனான உரையாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதில் தூதர்கள் நிகழ்ச்சியை உறுதிசெய்வது அல்லது செயல்படுத்தும் நபர்களாக (Luminaries) இருப்பது என்றளவில் செயல்பட்டிருக்கின்றனர்.

உதாரணமாக, ஏமன் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் Stephensache, 2010, ஜனவரியில், ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் சாலிஹிற்கும் அமெரிக்க ராணுவ தளபதி டேவிட் பீட்டர் (David Petraeus) சுக்கும் இடையே ஏமன் நாட்டின் அரசு கௌரவத்திற்கு எதிராக நடைபெற்ற பேச்சுக்களை வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். ஏமனில் தங்கி தீவிரவாதத்திற்கு எதிரான தேடுதல் வேட்டையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, ‘தாக்குதலில் பயன்படுத்தப்படும் குண்டுகள் உங்களுடையதல்ல, எங்களுடையதுதான் என்று சொல்வதை தொடர்கிறோம்’ என்று சாலிஹ், பீட்டர்ஸிடம் கூறியிருக்கிறார்.

துணை அதிபர் ரஷித் அல் அலீமி நாடாளுமன்றத்தில் கூறும்போது, ‘குண்டுகள் அமெரிக்காவுடையது, ஆனால் தாக்குதல் நடத்துவது ஏமன் வீரர்கள்’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் பீட்டர்ஸ், சாலிஹிடம், தூதரகத்திற்கு வரும் சரக்குகளை சோதனையிடக்கூடாது என்று சுங்க துறையிடம் கூறும்படி தெரிவித்திருக்கிறார். அதில் குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான போருக்காக வரும் கருவிகளையும் சோதனையிடக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் தூதரகம் என்பது கடிதங்களை மட்டுமல்ல ஆயுதங்களை கொண்டுவரவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதேபோல், ஜெர்மனியில் அமெரிக்க புலனாய்வுத்துறை, காலித்அல் மஸ்ரி என்பவரை கடத்தி, வதைத்து பின்னர் தவறான நபரை பிடித்துவிட்டதாக கருதிவிடுவித்தது. ஜெர்மன் அதிகாரிகள் இந்த கடத்தலில் ஈடுபட்ட புலனாய்வு முகவர்களின் பெயர்களையும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த காண்டலீசா ரைசுக்கு அவர்கள் அனுப்பிய தகவல்களையும் கண்டுபிடித்தனர்.

ஒரு ஜெர்மன் நாட்டவரை கடத்திய குற்றத்திற்காக முகவர்கள் 13 பேர் மீது அந்நாடு வழக்கு தொடுக்கும் என்று அன்றைய புஷ் நிர்வாகம் அஞ்சியது. இது விசயத்தில், குற்ற நடவடிக்கைகளை கைவிட ஜெர்மனியின் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புக்கு அமெரிக்கா அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுத்துவந்துள்ளது என்ற செய்தியையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் 2007-ல் நடந்துள்ளது.
இதுதொடர்பாக பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கலுடன் பேச்சு வார்த்தை நடத்திய குழுவின் துணைதலைவர் ஜான் கோயிங், அமெரிக்க அரசுக்கு அதுபற்றி எழுதியுள்ளார். ஸ்பெயினிலும் இதேபோன்று நடந்துள்ளது.

2009, ஜூலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுச்செயலரின் உடல் அடையாள தகவல்கள் (biometric data), கடன் அட்டை (credit card) தகவல்கள், தொடர்ச்சியாக விமானப்பயணம் செய்பவர்களின் எண்கள் இவற்றை சேகரிக்கும்படி தூதரக அதிகாரிகளுக்கு State Department உத்தர விட்டிருக்கிறது.
இதன் மூலம் தூதரகம் புலனாய்வுதுறை மற்றும் ராணுவத்தின் உளவு அமைப்பாக (emissary) செயல் பட்டிருக்கிறது.

அதுபோல் அரபுநாட்டு மன்னர்கள் ஈரான் மீதுபோர் தொடுக்கும்படி புஷ் நிர்வாகத்தையும், கடும் தடைகள் கொண்டுவரும்படி ஒபாமா நிர்வாகத்தையும் கெஞ்சிகேட்டதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. மேலும் விக்கிலீக்ஸ் ஈராக் மற்றும் அப்கான் போர்களில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் படுகொலை செயல்களையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

விக்கிலீக்கின் இந்த செயல் அமெரிக்காவின் அதிகாரவர்க்கத்திற்கு பெரும் கோபத்தை மூட்டியிருக்கிறது. அசஞ்சேவுக்கு 2.5 மில்லியன் வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிறார் செனட்டர் Diare Feinstein.
ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 வருடங்கள் தண்டனை என்ற வகையில் 2,50,000 ஆயிரம் ஆவணங்கள் வெளியிட்டதற்கு இது மொத்த தண்டனை என்று கணக்கிட்டுள்ளார். Amazon இணைய தளம் அவர்களது சேவை தளத்தில் (Server) இருந்து விக்கிலீக்ஸை வெளியேற்றவேண்டும் என்று செனட்டர் Joe Lieberman நெருக்கடி கொடுத்தார். அதனை தெடர்ந்து டிசம்பர் 1ஆம் தேதி Amazon விக்கிலீக்ஸை வெளியேற்றியது.

ஜனநாயக சமூகங்களுக்கு சக்திவாய்ந்த ஊடகம் வேண்டும், அந்த ஊடகத்தின் ஒரு பகுதிதான் இந்த விக்கிலீக்ஸ் என்கிறார் அசஞ்சே. அரசுகள் நேர்மையாக நடப்பதற்கு ஊடகங்கள் உதவுகின்றன.விக்கிலீக்ஸ் ஈராக் மற்றும் ஆப்கான் போர்கள் குறித்த கடினமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மேலும் வர்த்தக உலகத்தின் ஊழல் ரகசியங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறது’ என்கிறார்.
அமெரிக்காவின் ஒரு பெரிய வங்கியின் ஆவணங்களை வெளியிடப் போவதாக அசஞ்சே ஏற்கெனவே கூறியிருந்தார். Bank of America, தன்னைப்பற்றியே அசஞ்சே சொல்லியிருப்பதாக தானாக முன்வந்து சொன்னது.

தற்போது அமெரிக்காவிடம் ஒப்படைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படும் அசஞ்சே தான் வெளியிட்டு வரும் ஆவணங்களை புத்தகமாக கொண்டு வரவும் வெளியீட்டகங்க ளுடன் பேசிவருகிறாராம். அசஞ்சேயின் செயல் அசட்டு துணிச்சல் தான் என்றாலும் காலத்தால் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுதங்களால் அசைக்க முடியாத அமெரிக்காவை ஆவணங்களால் மிரட்டியிருக்கிறார் அசஞ்சே. ஆணவத்தின் உச்சியில் இருந்து வரும் அமெரிக்காவை அசஞ்சேவின் விக்கிலீக்ஸ் ஆட்டம் காணச் செய்தது அவமானப்படுத்திவிட்டது என்பதே நிஜம்.
நன்றி: பிரண்ட்லைன் டிசம்பர் 31 தெஹல்கா, டிசம்பர் 18&samuka neethi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...