Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 24, 2011

மருந்து விலை கொள்(ளையும்)கையும், மக்கள் விரோத அரசும்

இன்றைய சூழலில் உலகை சுருக்கமாக, எளிதாக எப்படி புரிந்து கொள்ளலாம்? வணிக நலனா? மக்கள் நலனா? என வரும்போது எந்தத் துறையை எடுத்தாலும் அது மக்கள் நலனை புறந்தள்ளி வணிக நலனை காக்கும் கொள்கைகளையே ஆளும் கட்சியானாலும் சரி, எதிர்கட்சியானாலும் சரி, கடைப்பிடிப்பதே நடைமுறை உண்மை!

மருத்துவத் துறையில் எப்படி வணிக நலன் காக்கப்படுகிறது, மக்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறதுஎனப் பார்ப்போம். மக்கள் பொதுவாக அதிகம் பாதிப்புள்ளாகும் நோய்களுக்கான மருந்தின் மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வது முக்கியம்.

வணிகத்துறையில் இலாபமே இருக்க கூடாதா? எனக்கேட்டால் அதற்குப் பதிலாக, இலாபம் இருக்கலாம்! ஆனால் அது கொள்ளை லாபமாக இருக்கக் கூடாது. கீழ்காணும் அட்டவணையை கூர்ந்து நோக்கினால் மருத்துவத்துறையில் நடப்பது கொள்ளை லாபம் என்றும் இதை சரி செய்ய எந்த அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பதிலிருந்து ஆளும், எதிர்கட்சி அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை எளிதாக புரிந்து கொள்ளலாம்

(உ.ம்) அமிக்காசின் 500 மி.கி. ஊசி மருந்தை எடுத்துக் கொள்வோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை ஒருவர், அமிக்காசின் ஊசியை வாங்க ரூ.70 செலவழிக்கும் சூழல்தான் உள்ளது. இது நியாயமா? பதிவு பெற்ற மருத்துவர் ஒருவருக்கு அதே ஊசி ரூ.10க்கு கொடுக்கப்படுகிறது. (இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். மொத்த மருந்து விற்பனை கடையினர் ஒரு லாபம் வைத்தே மருத்துவருக்கு ரூ.10க்கு கொடுக்கின்றனர்.
மருந்து தயாரிப்பாளர்கள் ஒரு லாபம் வைத்தே மொத்த மருந்துக் கடையினருக்குக் கொடுக்கின்றனர். ஆக அமிக்காசின் 500 எம்.ஜி தயாரிக்க ஆகும் செலவு ரூ.5லிருந்து ரூ.8 வரை இருக்கலாம்).

இந்திய அரசின் புள்ளி விவரப்படியே இந்தியாவில் ஏறத்தாழ 50% சதவிகிதனர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சூழல் இருக்கையில் அவர்களுக்கு ஏன், அமிக்காசின் 500 மி.கி. ஊசியை ரூ.10க்கே (பதிவு பெற்ற மருத்துவர் ஒருவருக்கு கொடுக்கும் அதே விலையில்) கொடுக்கக் கூடாது?

குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு பொது வினியோகத்துறை மூலம் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவை மானிய விலையில் கொடுக்கப்படும்போது, மருந்துகளையும் அவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க முன்வரும் அரசுதானே மக்கள் நல அரசாக இருக்க முடியும்? மேலும் இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கையில் அதைக் கிடப்பில் போட்டு, அரசு மௌனம் காப்பது வணிக நலன்களுக்காக மட்டுமே! அரசு மக்கள் விரோதப் போக்குகளில் ஈடுபடுவதை மக்கள் உடனடியாக உணர்ந்து இதைக் களைய செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

மருத்துவர்கள் மாறுவார்கள், மருந்துக்கடைகள், மருந்துக் குழுமங்கள், அரசு, அரசியல்வாதிகள், மாறுவார்கள் என நினைப்பது முட்டாள்தனம். ஏனெனில் அவர்களுக்கு இதன் மூலம் கொள்ளை லாபம் கிடைக்கையில் அவர்கள் மாறுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இல்லவே இல்லை! என்றே சொல்லலாம். ஆக மக்கள் தனது உரிமையை உணர்ந்து மருந்து விற்பனையில் இடைத்தரகர்களால் ஏற்படும் நியாயமற்ற கொள்ளையை உணர்ந்து செயல்பட்டாலே மாற்றத்திற்கான முதல்படியாக அது அமையும்.

அரசின் ஒரு அங்கமான தேசிய மருந்து விலை நிர்ணயிக்கும் குழு (National Pharmaceutical Pricing Authority) மொத்த விற்பனையாளர்கள் தனக்கான விலையிலிருந்து 10 to 15 சதவீதத்திற்கு மிகாமலும், சில்லரை விற்பனையாளர்கள் தனக்கான விலையிலிருந்து 30 to 35 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என வரையறுத்தது இன்னும் சட்டமாக்கப்படாமல் இருப்பதால் மக்கள் தேவையற்று வணிக நிறுவனங்களுக்கு அதிகப் பணம் செலவழிக்கும் நிலை தொடர்வதிலிருந்து அரசு, மக்கள் நலனில் உரிய கவனம் செலுத்தாமல் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுவதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மருந்துகளில் இரண்டு வகை உண்டு, ஒன்று, மருந்தின் வேதிப்பொருள் பெயரிலேயே விற்பனை செய்யப்படும் ஜெனரிக் Generic) மருந்துகள், இன்னொன்று ஒவ்வொரு மருந்துக் குழுமமும் குறிப்பிட்ட வேதிப்பொருள் மருந்திற்கு ஒரு தனி பெயரிட்டு குழுமத்தின் பெயரோடு விற்பனை செய்யப்படும் Patent மருந்துகள். அமெரிக்காவை பொறுத்தவரை ஜெனரிக் மருந்துகளுக்கும் பேடன்ட் மருந்துகளுக்கும் தர அளவில் வேறுபாடுகள் இல்லை என்பது பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் தர அளவில் வேறுபாடுகள் இருக்குமானால் அங்கு தண்டனைகளும் கடுமையாக உள்ளன. இந்தியாவைப் பொறுத்த மட்டில் Generic, Paent மருந்துகளுக்கிடையே தர அளவில் வேறுபாடுகள் இருப்பது உண்மையே என்று இருப்பினும் விலைக் குறைந்த, தரம் உள்ள மருந்துகளை உற்பத்தி செய்யும் Generic மருந்துக் குழுமங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பது ஆறுதலான விசயம்.

தரக்குறைவான ஜெனரிக் மருந்துக் கம்பெனிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகள் சரிவர இல்லாமலிருப்பதும் அரசுக்கு அம்மருந்து நிறுவனங்கள் கொடுக்கும் லஞ்சமுமே!
மருத்துவர்கள் பொதுவாக தரத்தைக் காரணம் காட்டி விலை அதிகமான பேடண்ட் மருந்துகளையே பரிந்துரை செய்கின்றனர். (உண்மையில் பேடண்ட் மருந்துக் குழுமங்கள் மூலம் மருத்துவர்களுக்கு மறைமுகமாக கிடைக்கும் பரிசுப்பொருட்கள் ஏராளம்).

மருந்து:
ஒரு மருந்து ஜெனரிக் மருந்து என்பதாலேயே அது சட்டப்படி தரக்குறைவாக இருக்கலாம் என ஏதாவது இருக்கிறதா என்ன? ஆக விஷயம் இப்படி இருக்கையில் தரக்குறைவான ஜெனரிக் மருந்துக்குழுமங்களின் மீது அரசு சட்டப்படி அதிகம் நடவடிக்கை எடுக்காததற்கு முக்கிய காரணம் அவர்கள் மூலம் கிடைக்கும் கையூட்டு பணமே!
மேலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு மருத்துவர்களும் தரம் குறைந்த மருந்துகளை தயாரிக்கும் மருந்துக் குழுமங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்காமலிப்பது ஏன்? மேலும் இங்கு தரமற்ற மருந்துகளை உறுதி செய்தும் அதற்கு உரிய தண்டனையைக் கொடுக்காத போக்கே இங்கு அதிகமாக இருக்கிறது.
(ஒரு வேளை, தண்டிக்கும் உரிமை அரசைத் தவிர்த்து, சுயேட்சையாக செயல்படும் சமூக ஆர்வலர்கள் குழுவுக்கும் அதிகாரம் இருக்குமானால் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் பெரும்பாலான மருந்துகளின் தரம் குறைவாகத்தான் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்து அரசும் தண்டிக்கப்பட வேண்டும் எனும் உண்மை வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்ற பயமா? அரசு மருத்துவர்களுக்கு இது பரவலாக தெரிந்திருந்தும் மௌனம் காப்பது எதனால்?

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வோர்களுக்கு பதிவு பெற்ற மருத்துவருக்கு கிடைக்கும் அதே விலையில் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும் (ஒரு அமிக்காசின் 500 மி.கி. ஊசியினால் மட்டுமே இதன் மூலம் ரூ.60 மிச்சமாகிறது.
ஆக இப்படி மிச்சமாகும் பணம் சில நாட்களுக்காவது அக்குடும்பத்தின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளது) என்னும் வாதம் மைய நீரோட்ட அரசியல் கட்சிகளால் (தலித் மக்கள் நலன் என்று சொல்லிக் கொண்டோ, சிறுபான்மையினரான கிறித்துவ, முஸ்லிம் மக்கள் நலன் என்று சொல்லிக் கொண்டோ, பாட்டாளி மக்கள் நலன், மீனவர் நலன்… என்று சொல்லிக் கொண்டோ) கண்டு கொள்ளப்படாமல் போகிறது, சமூக நலனுக்காக இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் பல தன்னார்வ நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளாமல் போவது, இவர்களும் உண்மையிலேயே யார் நலனில் அதிக கவனம் செலுத்துகின்றனர்? என்பதை கேள்விக்குள்ளாக்க வேண்டிய தருணம் இது.

எந்த மருந்துகளுக்கு மானியம் அளிப்பது நியாயமானதாக இருக்கும்? தமிழகம், இந்தியாவை பொறுத்த மட்டில் குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் (வறுமை காரணமாக?) முக்கியமானது இரத்த சோகை நோயாகும்.
ஏறத்தாழ 65 to 75 சதவீதத்தினர் (குறிப்பாக கர்ப்பிணி பெண்கள்) பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு மக்கள் நலன் காப்பது முக்கியமாக இருந் தால் என்ன செய்திருக்க வேண்டும். இரத்த சோகைக்கான மருந்தின் விலையைக் குறைத்து மானிய விலையில் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசு செய்தது என்ன தெரியுமா?
இரும்புசத்து ஊசியின் விலை மருத்துவருக்கு 2002ல் ஆண்டில் 10ரூ, 2004ம் ஆண்டில் 12.50ரூ, 2007ம் ஆண்டில் 17.50ரூ, என ஏறுமுகத்தில் இருந்தது.

ஆக பெண்களை அதிகம் பாதித்த இரத்த சோகைக்கு மானிய விலையில் சிகிச்சையளிப்பதற்குப் பதில் ( இரும்புச் சத்து ஊசியின் விலையை குறைப்பதற்கு பதில்) அதன் விலையை ஏற்றியதிலிருந்து அரசு வணிக நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு மக்கள் நலனுக்கு எதிராக இருப்பது தெளிவாகிறது.
மக்களே சிந்தித்து, விடைகளையறிந்து களத்தில், செயல்பாட்டில் இறங்குவதே அரசை நெறிபடுத்துவதற்கான வழியாக அமையும்.

நன்றி - டாக்டர். புகழேந்தி &சமுதாய ஒற்றுமை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...