Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 06, 2011

நாடு முழுவதும் 200 அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டி.எம். மையங்கள்

நாடு முழுவதும் உள்ள 200 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களை அமைக்க அஞ்சல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னை மயிலாப்பூர் உள்ளிட்ட 7 தலைமை அஞ்சலகங்களில் இந்த ஏடிஎம் வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அஞ்சல் துறை தொடங்கப்பட்டது முதல் குக்கிராமங்களில்கூட சிறுசேமிப்புத் திட்டங்கள் மூலம் வங்கிச் சேவை நடத்தப்பட்டு வருகிறது. இப்போது அஞ்சலகங்களை நவீனமயமாக்குவதோடு, மக்களுக்கான பல்வேறு மதிப்பு கூட்டு சேவைகளை வழங்கும் திட்டங்களை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 90 சதவீத அஞ்சலகங்கள் கிராமங்களில் இயங்கி வருகின்றன.

இந்த அஞ்சலகங்களில் 22 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகை 5.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த சேமிப்புக் கணக்குகளை 35 கோடியாக அதிகரிப்பதன் மூலம் வைப்புத் தொகை 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் பொருளாதார சக்தியாக அஞ்சலகங்களை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் ஒவ்வொருவருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.

இதன்படி "பிராஜக்ட் ஆரோ' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,000 அஞ்சலகங்களை நவீனமயமாக்க அரசு அனுமதி அளித்தது. இதில் இதுவரை 727 அஞ்சலகங்கள் கணினி, இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த அஞ்சலகங்களில் 22 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகை 5.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க அஞ்சலகங்கள் மூலம் ஏடிஎம் மையங்கள், மொபைல் வங்கி முறை, கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிதிச் சேவைகளை நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை விரைவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் முதல் கட்டமாக 200 தலைமை அஞ்சலகங்களில் அஞ்சல் துறை சார்பில் பிரத்யேகமாக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏ.டி.எம். அட்டைகளை நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களின் ஏடிஎம் சாதனங்களில் பயன்படுத்த முடியும். தேசியமயமாக்கப்பட்ட இதர வங்கிகளின் ஏடிஎம் மையங்களிலும் இந்த அட்டைகளைப் பயன்படுத்தி, தங்களது கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் முடியும்.

இதுதவிர தங்களது சேமிப்புக் கணக்கில் பணத்தைச் செலுத்தவும் வசதி செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் 10 அஞ்சலகங்களில்... தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 தலைமை அஞ்சலகங்களில் ஏ.டி.எம். மையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் முதலாவதாக சென்னை மயிலாப்பூர் அஞ்சலகத்தில் இந்த ஏ.டி.எம். மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வங்கிகள் மட்டுமன்றி அஞ்சலகங்களுடன் இணைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்படுவதோடு, அவற்றின் சேமிப்புத் தொகையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகப் பெரிய ஊக்கம் அளிப்பதாக உள்ளதால் அஞ்சல் துறை தனது வங்கிச் சேவையை விரிவாக்கம் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதையடுத்து பெண்கள், தொழில் முனைவோருக்கு சிறு வணிகக் கடனுதவி வழங்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
நன்றி:கடலூர் செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...