மக்கள் பிரச்னையைப் பற்றி விவாதிக்கவும், தேவையான சட்டங்களை இயற்றவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் சட்டமன்ற மேலவை அமைக்கப்பட வேணடும் என்று தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்காளர் சேர்ப்பும் நடைப்பெற்றுவருகின்றது, இந்நிலையில் மேலவை கூடாது என்று வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர்.
1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது மேலவை ஒழிக்கப்படும் வரை தமிழகத்தில் மேலவை செயல்பட்டு வந்தது. அப்போது ஒழிக்கப்பட்ட சபையை தான் கருணாநிதி இப்போது கொண்டு வர முயற்சிக்கிறார்.
சட்டசபைக்குத் தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அறிவிலிகளாகவும், படிக்காதவர்களாகவும் இருந்ததால் அவர்களால் மக்கள் பிரச்னை பற்றி விவாதிக்க முடியாத நிலை இருந்தது. மக்களுக்குப் பயன் தரும் சட்டங்களை அவர்களால் இயற்ற முடியவில்லை. எனவே, ஆன்றோர்கள், சான்றோர்கள், நிபுணர்களைக் கொண்ட ஒரு சபையை நிறுவி அதிலும் மக்கள் பிரச்சினை விவாதிக்கப்பட்டு அந்த அவையிலும் ஒப்புதல் பெற்று சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் மேலவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
நாட்டில் உள்ள மாநிலங்களில் ஆறு மாநிலங்களில் மட்டுமே மேலவை உள்ளது. 22 மாநிலங்களில் மேலவை என்பது கிடையாது. மேலவை உள்ள ஆறு மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்கள், விவாதங்கள் மேலவை இல்லாத மாநிலங்களில் இருந்து எந்த வகையிலும் மேம்பட்டவையாக இல்லை. மேலவை இல்லாத மாநிலங்கள் என்பதற்காக 22 மாநிலங்களின் தரம் தாழ்ந்து விடவும் இல்லை.
1986 முதல் மேலவை இல்லாமல் தான் தமிழக சட்டமன்றம் இயங்குகிறது. இதன் காரணமாக 1986ஐ விட அதற்குப் பிந்தைய வருடங்களில் தமிழகம் அதலபாதாளத்தில் விழுந்து விடவும் இல்லை. தமிழகத்தில் மேலவை இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று ஒரு பாதிப்பைக் கூட தமிழக முதல்வரால் சொல்லிக் காட்ட முடியவில்லை. எவ்வளவோ சாதனைகளைச் செய்து விட்டதாக முதல்வர் மார்தட்டுகிறார். அது உண்மை என்றால் அவை மேலவை இல்லாமல் தானே செய்யப்பட்டன.
மேலவை அமைப்பதற்குச் சொல்லப்படும் காரணங்களில் கடுகளவும் உண்மை இல்லை. சினிமா கூத்தாடிகள், ஆள்வோரைத் துதிபாடும் எழுத்து விபச்சாரிகள், அன்று முதல் இன்று வரை மன்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் வால் பிடிக்கும் புலவர்கள், ஆளும் கட்சியின் சார்பில் சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதவர்கள், எதிர்கட்சியில் இருந்து கட்சி மாறி ஆளும் கட்சியில் சேரும் பிரபலங்கள் ஆகியோர் தான் சட்டமேலவையை அலங்கரித்தனர்.
சில படித்த அறிவாளிகள் தேர்வு செய்யப்பட்டாலும் படித்தவர்கள் தான் பாமரர்களைவிட ஆள்வோருக்கு பலமாக ஜால்ரா அடிப்பவர்கள் என்பதால் அரசின் விருப்பத்துக்கு எதிராக அவர்கள் எந்த விமர்சனமும் செய்ததில்லை. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு ஒரு பயனும் இல்லாத இந்த மேலவையை அமைக்க வேண்டுமா? சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது போன்ற உரிமைகளும் சம்பளமும் இவர்களுக்கு உண்டு என்பதால் இது மக்கள் வரிப்பணத்தைப் பாழாக்குவதாகத்தான் அமையும். ஆனால் தமிழக முதல்வர் நிதி நிலையைப் பாதிக்காது என்கிறார்.
1985-1986 லேயே 13 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்தான். செயலகத்திற்கு 18 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய்தான் செலவானதாக முதல்வர் கூறுகிறார். ஆண்டுக்கு 30 இலட்சம் ரூபாய்தான் கடந்த காலங்களில் செலவாகி யுள்ளது என்கிறார். கோடிகளில் புரளும் முதல்வருக்கு முப்பது இலட்சம் வீணாக்குவது ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை.
இனி அமைய போகும் மேலவைக்கும் 30 இலட்சம் ரூபாய் தான் செலவாகும் என்று முதல்வர் கூறவில்லை. கடந்த காலத்தில் செலவான விபரத்தைக்கூறி மக்களை ஏமாற்ற நினைக்கிறார். ஆரம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 250 ரூபாயாக இருந்தது. இன்று ஐம்பதாயிரமாகி விட்டது.
சம்பளம், வாகனப்படி, டெலிபோன்படி, ஈட்டுப்படி, தபால்படி, தொகுப்புப்படி என்ற பெயரில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐம்பதாயிரம் கிடைப்பதுபோல் மேலவை உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பத்தாயிரம் வழங்கப்படுகிறது. மேலவை உறுப்பினர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் இறந்து விட்டால் அவர்களின் வாரிசுகளுக்கு ஐந்தாயிரம் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இதுபோல் மேலவை உறுப்பினர்களின் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச சிகிச்சை அளிப்பது போல் இவர்களுக்கும், அளிக்க வேண்டும். இப்படி பல கோடி ரூபாய்கள் ஆண்டு தோறும் செலவாகும் பயனற்ற திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்துள்ளார்.
நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிப்பதில் காட்டும் அநியாய தாமதம் காரணமாக மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. பெரும் அல்லலை மக்கள் அனுபவிக்கிறார்கள். எனவே எளிதில் வழக்குகளை விசாரித்து முடிப்பதற்காக எல்லா ஊர்களிலும் நியாயாலாய அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
இதற்கு தமிழகத்தில் நிதி இல்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக அன்பழகன் நடப்பு சட்ட மன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு பெரிதும் பயன் தரும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நிதி இல்லை என்று கூறும் தமிழக அரசு மக்களுக்கு கடுகளவும் பயன் தராத ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பணத்தைப் பாழாக்குவது என்ன நியாயம்?
ஊதாரித்தனம் செய்யும் அளவுக்கு நிதிநிலை சிறப்பாக இருந்தால் கூட இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சகித்துக் கொள்ள முடியும். ஆனால் தமிழகத்தின் நிதிநிலை படு மோசமான நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தமிழக அரசின் மொத்த வருவாய் 63,091.74 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் கூறுகிறார். தமிழக அரசின் கடன் எவ்வளவு என்ற கேள்விக்கு முதல்வர் பதிலளிக்கும்போது கடந்த மார்ச் நிலவரப்படி 74,858 கோடி ரூபாய் கடன் பொறுப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது மாநிலத்தின் ஒரு வருட மொத்த வருவாயை விட மாநில அரசின் கடன் சுமை அதிகம் என்று சொல்லும் ஒரு அரசாங்கம், பயனற்ற வழிகளில் பணத்தைப் பாழாக்குவதை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள முடியாது. மேலும், தமிழக அரசின் வருட வருவாய் 63,091.74 கோடி என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் 66 ஆயிரம் கோடி செலவு என்கிறார்.
வரவை விட மூவாயிரம் கோடிக்கு அதிக செலவு உள்ளதாக பட்ஜெட் போடும் அரசாங்கம் பயனற்ற செலவுகள் செய்யத் திட்டம் போடுவது என்ன நியாயம்?
மேலவை அமைத்தல், சிலைகள், மணிமண்டபங்கள் அமைத்தல், நினைவுச்சின்னங்கள் அமைத்தல், கூத்தாடி களுக்கு விருது வழங்குதல், திரைப்படங்களுக்குச் சலுகை அளித்தல், கூத்தாடிகளுக்கு இலவச வீட்டு மனை அளித்தல், ஆடம்பர விழாக்கள் நடத்துதல் போன்ற ஊதாரித்தனமான செலவுகளை அறவே ஒழித்தால் கடள் இல்லாத வளமான தமிழகம் உருவாகும். முதல்வர் செய்வாரா?
மேலவை என்றால் என்ன?
சுட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் நாற்பது உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இவர்களின் பதவிகாலம் ஆறு ஆண்டுகள்.
சட்டசபை என்பது நிரந்தரமற்றதாக உள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் அல்லது கலைக்கப்பட்டதும் அந்த சட்டசபை முடிந்து விடும். ஆளுனர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டால் அங்கே சட்டசபை இல்லாமலும் இருக்கும். ஆனால் மேலவை என்பது நிரந்தரமானதாகும். மேலவை உறுப்பினர்கள் அனைவரின் பதவியும் ஒரு நேரத்தில் முடிந்து போகாது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி இழப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் 79 உறுப்பினர் கொண்ட அவையை அமைக்க முடியும் என்றாலும் 63 உறுப்பினர் கொண்டதாக மேலவை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இவர்களில் 21 உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளில் பதவி இழப்பார்கள். அந்த இடங்களுக்கு வேறு 21 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலவையின் 63 உறுப்பினர்களில் 21 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலமும் மற்றொரு 21 உறுப்பினர் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலமும் ஆறு உறுப்பினர்கள் பட்டதாரிகள் தொகுதியில் இருந்தும் மேலும் ஆறு பேர் ஆசிரியர் தொகுதியில் இருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள். ஒன்பது பேர் ஆளுனரால் நியமிக்கப்படுவார்கள்.
ஆரம்ப காலத்தில் சென்னை, ஆந்திரா, பீகார், மகாராஷ்டிரம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், மத்தியபிரதேம், மைசூர், பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேலவையும் சட்டமன்றமும் இருந்தன.
ஆனால் தற்போது உத்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே மேலவை உள்ளன. மீதி 22 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மேலவை இல்லை.
நன்றி:tntjdubai
ஜனவரி 12, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...