சிதம்பரம் : ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வந்து செல்லும் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அந்த தரத்திற்கேற்ப எந்த அடிப்படை வசதியும் இல்லை. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு பஞ்சமில்லை என்பதால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்லவே அஞ்சுகின்றனர். உலக புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம், அண்ணாமலை பல்கலைக் கழகம் ஆகியன இருப்பதால் சிதம்பரம் நகருக்கு ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா நகரான சிதம்பரத்தில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற பஸ் நிலையம் இருந்து கூட அந்த தரத்திற்கேற்ப எந்த அடிப்படை வசதியோ, சுகாதார வசதியோ இல்லாததால் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் சாலைகள் சீர் செய்யப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் பஸ் நிலைய நுழைவாயில் பகுதியில் ஒரு அடிக்குமேல் பள்ளம் ஏற்பட்டு, பஸ்கள் விழுந்து, எழுந்து செல்லும் நிலை உள்ளது.
பஸ் நிலையத்திற்குள் சேலம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் கரடு, முரடான பள்ளத்தில் பஸ்களை நிறுத்த வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கிவிடுவதால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் சென்று பஸ் ஏற முடியாத நிலை உள்ளது. நா வறண்டாலும் தண்ணீர் கிடைக்காது. பயணிகள் சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத அளவில் சுகாதார சீர்கேடு உள்ளது. இலவச கழிப்பிடம் இரண்டு உள்ளது. திறந்த வெளியில் அந்த கழிப்பிடங்கள் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், பெண்கள், மாணவிகள் அந்த பக்கம் திரும்புவதற்கே முகம் சுளிக்கின்றனர்.
பஸ்சில் கிராஸ் செய்யும்போதுகூட மூக்கை பிடித்துக்கொண்டால்தான் தப்பிக்கலாம். கட்டண கழிப்பிடத்தின் நிலை மிகவும் கேவலம். காசு கொடுத்து நோய் தொற்றி வரலாம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அள விற்கு அங்கு சுகாதார சீர்கேடு. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் இரவு நேரங்களில் குடி பிரியர்களின் கூடாரமாக பஸ் நிலையம் மாறிவிடுகிறது. லேசாக இருட்டி விட்டால் போதும் திருடர்கள் பயம், பயணிகள் ஓய்வு அறை ஒன்று உள்ளது. அங்குதான் சமூக விரோத செயல்கள் அத்தனையும் அரங்கேறுகிறது.
சிறுநீர் கழிக்க பஸ் நிலையம் பின்புறம் ஒதுங்கும் பயணிகளை பலான சமாச்சாரத்திற்கு இழுக்கும் கும்பல், அவர்களிடம் பணம், நகை என அத்தனையும் பிடுங்கிக்கொண்டு அடித்து துரத்திவிடுகிறது. இப்படி தினமும் அப்பாவி பயணிகள் பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. பஸ் நிலையத்தில் போடப்பட்ட ஹைமாஸ் விளக்கு பாதி மட்டுமே எரிவதால் இரவு நேரங்களில் இருண்டு விடுவது சமூக விரோதிகளுக்கு வசதியாக அமைந்து விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் அங்கு கடை வைத்திருப்பவர்களே கடையை பூட்டிக்கொண்டு ஓடும் நிலையில் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கே அஞ்சுகின்றனர். ஒப்புக்கென போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது. அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்களில் சிறப்பாக இருக்கும் நிலையில் சுற்றுலா தலமாக சிதம்பரம் நகரில் ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் "பி' கிளாஸ் பஸ் நிலையத்தின் நிலை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் மிகவும் மோசமாக இருப்பது வேதனையிலும், வேதனை. சில மாதங்களுக்கு முன்பு 90 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய், சாலைகள், பிளாட்பார்ம் என சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடங்களை கவனிக்க மறந்துவிட்டனர்.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய "ஹை டெக்' பஸ் நிலையம் அவசியம் தேவை. எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் சிதம்பரத்தில் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
thanks:DM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...