வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுக் கொள்ளாததால் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 2.5 லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன.
இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் கடலூர் மற்றும் நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலத்தில் ஒரு ஏஜன்சியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா ஒரு ஏஜென்சியும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டும், நெய்வேலி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜன்சிகள் என மொத்தம் 15 காஸ் ஏஜன்சிகள் இயங்கி வருகின்றன.
வீட்டு உபயோக காஸ் இணைப்பு பெற்ற நுகர்வோர், பதிவு செய்த மூன்று நாளில் சிலிண்டர் வழங்க வேண்டும் என விதியிருந்தாலும், ஒரு சிலிண்டர் வாங்கி 21 நாட்களுக்கு பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என ஏஜன்சிகள் அவர்களாகவே கால நிர்ணயம் செய்து வைத்துள்ளனர். அப்படியே 21 நாட்களுக்கு பிறகு பதிவு செய்தாலும் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பிறகே சிலிண்டர்கள் வழங்குகின்றனர். இதனால் காஸ் இணைப்பு பெற்றவர்கள் (குறிப்பாக நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள்) சிலிண்டர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து காஸ் ஏஜன்சிகளிடம் விசாரித்தால், தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஆயில் நிறுவனங்கள் சிலிண்டர்களை வழங்காததால் தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து காஸ் ஏஜன்சி ஊழியர்களிடம் விசாரித்தபோது, "ஆயில் நிறுவனங்களில் இருந்து வீட்டு உபயோக சிலிண்டர்கள் "ரெகுலராக' அனுப்பப்படுகிறது.
சிலிண்டர் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடே தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம்' என்கின்றனர். மாவட்டத்தில் 5,450 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆட்டோக்களில் காஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளன. அதேப்போன்று சொந்த உபயோகம் மற்றும் வாடகைக்கு இயக்கப்படும் ஆம்னி வேன்கள், கார்கள் பெரும்பாலானவற்றில் பெட்ரோலுக்கு பதிலாக சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் நிலையம் மாவட்டத்தில் சிதம்பரத்தில் மட்டுமே உள்ளது. வேறு எங்கும் இல்லாத போதிலும், காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் ஆட்டோக்கள் மற்றும் கார்கள் மட்டும் தங்கு தடையின்றி இயங்கி வருகின்றன. காஸ் சிலிண்டர் பொருத்திய ஆட்டோக்கள், ஆம்னி வேன்கள் மற்றும் கார் உரிமையாளர்கள், வீட்டிற்கு உபயோகப்படுத்தும் காஸ் சிலிண்டர்களை காஸ் ஏஜன்சிகளிடமும், சிலிண்டர் வினியோகிப்பாளர்களிடமும் கூடுதல் விலைக்கு வாங்கி எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாகவே மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி முறையாக இணைப்பு பெற்ற காஸ் சிலிண்டர் அதிகம் பயன்படுத்தாத நுகர்வோர்களும் ஏஜன்சிகள் நிர்ணயித்த 21 நாட்களுக்கு பிறகு பதிவு செய்து தங்களுக்கு வரும் சிலிண்டரை ஆட்டோ மற்றும் கார்களுக்கு 550 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு பெற்ற கிராமப்புற மக்கள் இந்த வியாபாரத்தில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளதால், காஸ் அடுப்பு மட்டுமே பயன்படுத்தும் நகரப்பகுதி மக்கள் சிலிண்டர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க, மாவட்டத்தில் வாகனங்களுக்கு காஸ் நிரப்பும் மையம் இல்லாத நிலையில், வாகனங்களில் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவதைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் துறை, போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இணைந்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
நன்றி:thi
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...