வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துவிட்டு செல்லும் வகையில் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. இதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியா முழுவதும் சென்னை, மும்பை, தில்லி உள்பட 8 இடங்களில் குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைக்காக வெளிநாடு செல்லும் தனி நபர்களும், வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் செல்பவர்களும் இந்த அலுவகத்தில்தான் விசா கிளியரன்ஸ் பெற வேண்டும்.இந்த நிலையில், சென்னை அலுவலகத்தில் கடந்த ஆண்டு சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்போதைய குடியுரிமை பாதுகாவலர் உள்பட 6 அதிகாரிகள் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் போலி முகவர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களை நம்பி அப்பாவி இளைஞர்கள் பல லட்சங்களை ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.இந்த அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக, குடிபெயர்வோர் நிர்வாக ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தைப் போல் தனி அதிகாரத்துடன் இது செயல்படும்.இந்த ஆணையம் குறித்து குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது;'குடிபெயர்வோர் நிர்வாக ஆணையம் அமைக்கப்படுவதன் மூலம், குடிபெயர்வோர் பாதுகாவலர் அலுவலகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோர், விசா கிளியரன்ஸ் பெற வேண்டிய அவசியமே இருக்காது. விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு விடும்.வெளிநாடு செல்வோர் அமைச்சக இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்துவிட்டு, வெளிநாடு சென்று விடலாம். ஆனால், இந்த இணைய தள பதிவை, உரிமம் பெற்ற ஆள் தேர்வு முகவர்கள் மூலம் மட்டுமே பதிவு செய்யும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.உரிமம் பெற்ற முகவர்கள் மட்டுமே இணைய தளத்தின் குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும்.முகவர்களை மட்டும் கண்காணித்தால் போதும் என்ற நிலையை உருவாக்குவதற்காக, இதுபோன்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதனால் ஊழல் தடுக்கப்படுவதோடு,போலி முகவர்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படும்.இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார்.'மேலும் படிப்புக்காக வெளிநாடு செல்வோரையும் கண்காணிக்கவும், அதுதொடர்பான முகவர்களை முறைப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.
நன்றி :பாலைவனதூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...