
போபால்:"தங்களுக்கு தீராத துயரத்தை பரிசாக அளித்த எல்லோரையும் தூக்கிலிடுங்கள்" 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு ஆறு லட்சம் பேர் பாதிப்படையவும் காரணமான போபால் விஷவாயு விபத்து வழக்கின் தீர்ப்பைக் கேட்டு ஹமீதாபி ஆவேசமடைந்து கூறிய வார்த்தைகள் இவை.
போபால் விஷவாயு துயரசம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் கறுப்புதினம் என நீதிமன்றத்திற்கு வெளியே காத்திருந்தவர்கள் உரக்க கூறினர்.மரணத்தின் குளிர்ந்த கரங்கள் தங்களுடைய காலனிகளை தேடிவந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த கோர சம்பவம் நிகழ்ந்த இரவை நினைவுக் கூறும்பொழுது அவர்களுடைய முகத்திலிருந்து இதுவரை மிரட்சி மாறவில்லை.இச்சம்பவம் நிகழ்ந்தபொழுது ஹமீதாபீக்கு 28 வயதாகியிருந்தது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் தூக்கிலிட்டால்தான் முழுமையான நீதி கிடைக்கும் என அவர் கூறுகிறார்.
தற்சமயம் சிறிதளவேனும் மன அமைதிக்கிடைப்பதற்காக இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளின் உருவப் பொம்மைகளை தூக்கிலிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் ஹமீதாபீயும் அவரைச் சார்ந்தவர்களும்.அன்றைய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டேர்சன் உள்ளிட்ட 64 பேரின் உருவங்களை பல்வேறு இடங்களில் நாங்கள் தூக்கிலிடுவோம் என போபால் விஷவாயு துயரச்சம்பவத்தில் தனது 6 வயது மகனையும், மாமியாரையும் இழந்த ஷம்ஷாபீ கூறுகிறார்.
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் எதிரேயுள்ள ஜெ.பி.நகரில்தான் அன்று 23 வயதாகியிருந்த ஷம்ஷாபீ வசித்துவந்தார்."எங்களுக்கு பொருளாதார உதவி தேவையில்லை. குற்றவாளிகளை தூக்கு மரத்திற்கு அனுப்புவதுதான் எங்களது கோரிக்கை" அந்த துயர சம்பவத்தில் கணவனை இழந்த சாந்திதேவி கூறுகிறார்.இப்பிரதேசம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்திருக்கும் பொழுது இந்த துயரத்திற்கு காரணமான டோ கெமிக்கல்ஸ் இந்தியாவில் சுதந்திரமாக வியாபரம் செய்கிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான நீர் அளிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பிரதமர் மன்மோகன்சிங்கின் வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என குற்றஞ்சாட்டுகிறார் இந்த துயர சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளான ஸஃப்ரீன்கான்.
பெயரளவிலான நீதிமன்ற தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்றத்திற்கு வெளியேயும், போபாலின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் தலைமையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
செய்தி:பாலைவன தூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...