Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 22, 2011

சட்டமன்ற தேர்தலுடன் முறிந்துபோன கூட்டணி: தனித்து களம் காணும் அரசியல் கட்சிகள்

சென்னை, செப்.22-
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தனித்தனியே தேர்தல் களம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிகள் அமைத்து மற்ற கட்சிகள் தேர்தலை சந்தித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த கட்சிகள் எதனையும் எதிர்பாராமல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டது. இதனால் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. கடும் அதிர்ச்சியில் உள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில் இதுவரை பங்கேற்காத அக்கட்சி தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தனித்து போட்டியிடப் போவதாக முதலிலேயே அறிவித்து விட்டது. யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க.வும் தனித்து போட்டியிடப் போவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலை போல உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜனதா போன்ற கட்சிகள் தங்கள் முடிவை வெளிப்படையாக அறிவித்துள்ளதால் இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பெரும்பாலும் திராவிடக் கட்சிகளின் துணையுடன்தான் தேர்தலை சந்தித்துள்ளது. இந்த முறை தனித்து போட்டியிடுவதன் மூலம் அந்த கட்சியின் உண்மையான பலம் என்ன என்பது தெரிந்து விடும்.

இதேபோல வடமாவட்டங்களில் பா.ம.க.வுக்கு உள்ள செல்வாக்கு என்ன என்பது தெரியும். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்த தே.மு. தி.க. உள்ளாட்சி தேர்தலில் பலத்தை காட்டவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை குமரி மாவட்டத்தில் அதற்கு செல்வாக்கு அதிகம். எனவே அந்த மாவட்டத்தில் பெரிய கட்சிகளுக்கு அக்கட்சி சவாலாகவே இருக்கும். இது ஒருபுறம் இருக்க கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டும் அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒரு வேளை இதில் உடன்பாடு ஏற்பட்டால் அக்கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தே தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகி கடந்த சட்டமன்ற தேர்தலை ம.தி.மு.க. புறக்கணித்தது. உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் ஜெயித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் ம.தி.மு.க.வும் உள்ளது.

இப்படி பலமுனை போட்டி நிலவும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் காணாமல் போகும் கட்சிகள் எத்தனையோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...