Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 08, 2011

சென்னை அருகே ரூ. 2160 கோடியில் சாட்டிலைட் டவுன்ஷிப்: முதல்வர் ஜெ., அறிவிப்பு

சென்னை அருகே ரூ. 2160 கோடியில் திருமழிசை துணைக்கோள் நகரம்", அதாவது திருமழிசை சாடிலைட் டவுன்ஷிப் அமைப்பது, டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் உயர்வு, கூடுதலாக மூன்று நாள் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வாசித்தார். இதில் அவர் பேசியதாவது:-

‌சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்து உள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக வீடு வாங்குவது என்பது கடினமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
சென்னை-பெங்களுர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து நிலம் பெறப்பட்ட பின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ. 2160 கோடி செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம் பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய "திருமழிசை துணைக்கோள் நகரம்", அதாவது திருமழிசை சாடிலைட் டவுன்ஷிப் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துணைக்கோள் நகரம், குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக் கூடம், பள்ளி, மருத்துவ மனை, பேருந்து நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும்.இந்த நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்.

சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தை ஒட்டியும்; உள்வட்டச் சாலை முகப்பிலும் உள்ளது. தற்போது, இந்தக் காலி இடத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ரூ.116 கோடி மதிப்பீட்டில், 4.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், பன்னடுக்கு வணிக வளாகம் ஒன்று கட்டப்படும். மேலும்,ரூ. 33 கோடி மதிப்பீட்டில், 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 குடியிருப்புகள் கட்டப்படும்.

இந்தாண்டு (2011 ஆம் ஆண்டு) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு சதவீத இட ஒதுக்கீட்டை மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் சம்பளம் உயர்வு: டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கடை மேற்பார்வையாளர் ‌தொகுப்பூதியம் ரூ. 4ஆயிரத்து 500 லிருந்து ரூ. 5 ஆயிரம் வரையும், விற்பனையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 200 லிருந்து 3 ஆயிரத்து 600 வரையும், உதவியாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறை மேலும் மூன்று நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திரதினம், குடியரசு தினம், மே தினம் என மொத்தம் வருடத்திற்கு 8 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். இவ்வாறு ‌முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...