Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 21, 2014

தமிழகத்தின் பெருமையை மோடி தெரிந்து கொள்ள வேண்டும்! -ராகுல் காந்தி

ராமநாதபுரம்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் தேர்தல்களிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு மக்கள் விரும்பும் ஆட்சியை  அமைப்போம் என்று ராமநாதபுரத்தில் ராகுல் காந்தி பேசினார்.அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, இன்று காலை 11 மணியளவில் மதுரைக்கு  தனி விமானத்தில் வந்தார். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரத்திற்கு சென்ற அவர், அங்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்  திருநாவுக்கரசரை ஆதரித்து பேசினார். அவர் பேசியதாவது:மீனவர் பிரதிநிதிகள் மும்பையில் என்னை சந்தித்து, மீனவர்களுக்கென தனி இலாகா, தனி அமைச்சர்  நியமிக்க வேண்டுமென கோரினர். இதை ஏற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சந்திக்கும் துன்பங்களை நான் நன்கு அறிவேன். 

எவ்வளவு சீக்கிரம் இப்பிரச்னையில் தீர்வு காண முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தீர்ப்போம். வன்முறை, மத துவேசம், ஒருவருக்கு ஒருவரை விரோதமாக்கி லாபம்  பெறுவதில் காங்கிரசுக்கு நம்பிக்கையில்லை. அதை எப்போதும் விரும்புவதில்லை. இந்திய வரலாற்றில் காணாத வளர்ச்சியை கடந்த பத்தாண்டு கால காங்கிரஸ்  ஆட்சியில் இந்தியா கண்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. 15 கோடி ஏழை மக்களை வசதியான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எந்த அரசும் இவ்வளவு குறுகிய  காலத்தில், இந்த அளவு மக்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றியதில்லை. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 5கோடி பேருக்கு வேலை  கொடுத்துள்ளோம். தகவல் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றித் தந்ததன் மூலம், எந்த தகவலையும் சாதாரண ஏழை மக்களும் பெற முடியும். எங்கு ஊழல் நடந்தாலும்  மக்களுக்கு தெரிந்து விடுகிறது. ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய ஆயுதமாக லோக்பால்
சட்டம் கொண்டு வந்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் இச்சட்டத்தைக் கொண்டு வரவிடாமல் தடுத்தனர். அதையும் மீறி காங்கிரஸ் கட்சி இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இன்னும் முக்கியமான 5  சட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டோம். உண்மையில் ஊழலை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இருந்தால், இந்த 5 சட்டங்களை நிறைவேற்ற  ஒத்துழைத்திருக்க வேண்டும். விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்துள்ளோம். விவசாயிகளுக்கு நில உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது  அனுமதியில்லாமல் அவர்கள் நிலத்தை யாரும் எடுக்க முடியாது. அப்படியே எடுக்க வேண்டிய நிலை வந்தாலும், சந்தை விலையை விட நான்கு மடங்கு அதிக  விலை கொடுத்தே எடுக்க முடியும். பஞ்சாயத்துகள் அனுமதியில்லாமல் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது. 

தமிழக வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம். பெண்கள்  முன்னேற்றம் பற்றி பேசும் எதிர்க்கட்சிகள், அதை செயல்படுத்துவதில்லை. 
பஞ்சாயத்து தேர்தலில் 50சதவீத  இடஒதுக்கீட்டை பெண்களுக்கு காங்கிரஸ் கொடுத்தது. சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு தர  சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சிகள் அந்த சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு  வந்தால் பெண்களுக்கான  இந்த 33சதவீத இட ஒதுக்கீட்டை முதல் சட்டமாக நிறைவேற்றித் தருவோம். 

தமிழகத்தில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் வங்கிகள் மூலம்  கடன் பெற்று சுய தொழில் செய்து வருகின்றனர். இவர்களை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  இளைஞர்கள் அணிந்துள்ள கடிகாரம், ஷூ, டீசர்ட் என  அனைத்துப் பொருட்களிலும் மேட் இன் சீனா என போடப்பட்டுள்ளதை பார்க்கிறோம். ‘மேட் இன் தமிழ்நாடு, மேட் இன் இந்தியா என மாற வேண்டும்.அமெரிக்கா,  இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நமது தயாரிப்பு பொருட்கள் விற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.  
டெல்லி -மும்பை, மும்பை - பெங்களூர், பெங்களூர் - சென்னை, டெல்லி -கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களை வலுவாக இணைக்கும் வகையில் பல  ஆயிரக்கணக்கான தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதற்கென ஜப்பானிய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான தமிழக  இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறுவர். 

இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் ஆளுக்கொரு வீடு கிடைக்க சட்டம் கொண்டு வரப்படும்.தற்போது தமிழகத்தில்  காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆர்வத்தோடு தேர்தல் பணியில் ஒற்றுமையுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.  நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழகத்தில் நடக்கும் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு, மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில்  ஏற்படுத்துவோம். தமிழ்நாட்டின் மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவதில்லை.

அதிகாரத்திற்கும் வரப்போவதில்லை. ஏழைகள் முன்னேற, மதச்சார்பற்ற அரசு மத்தியில் அமைய காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்.தமிழக மக்களின் திறமை  உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெருமையை மோடி தெரிந்து கொள்ள வேண்டும். ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரியை உருவாக்க  காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசை ஆதரிக்க வேண்டும். அவர் நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்காக குரல் கொடுப்பார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில்  தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய அமைச்சர்கள் வாசன், சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசி முடித்தபின்  மேடையிலிருந்து கீழிறங்கி வந்த ராகுல் பாதுகாப்பு வளையத்தை தாண்டி அங்கு நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களுடன் கைகுலுக்கி உற்சாகப்படுத்தினார். 
-tamilmurasu.org

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...