Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2014

பண முதலைகளுக்கு ரூ.1275 கோடி சலுகைகளை வாரி வீசியிருக்கிறார் மோடி!இவர் நாட்டின் உயர் பதவியில் அமர்ந்தால்

பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியின் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்தாமல், நரேந்திர மோடி எனும் தனி நபரை முன்னிறுத்துவது ஏன்?

பாரதீய ஜனதாவின், மதவாதக் கொள்கைகள், மசூதி இடிப்பு, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட அக்கட்சியின் மதவெறி ஆதரவு முகத்தை மறைத்துக் கொள்வதே இதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சி.

மோடியின் குஜராத், இந்தியாவிலேயே வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக உயர்ந்து நிற்கிறது என்ற பொய் பிரச்சாரம், இப்போது புள்ளி விவரங்களுடன் மறுக்கப்பட்டு வருகிறது. மோடி,குஜராத்தில் பெரும் தொழில் நிறுவனங்களை முதலீடு போடச் செய்து சலுகைகளை வாரி வழங்குகிறார். இதனால் பயன் பெறுவது ஏழை, நடுத்தர, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்ல; தொழிலதிபர்களும் மேல்தட்டுப் பிரிவினரும்தான். பெரும் தொழில் நிறுவனங்கள் ஒரு மாநிலத்தில் முதலீடு செய்ய வரும்போது, எந்தத் தொழில் என்பதை மட்டுமல்ல, எந்த இடத்தில் தொடங்குவது என்பதையும் அவர்களே நிர்ணயிக்கிறார்கள். “உங்கள் மாநிலத்தில் நான் முதலீடு செய்ய நீ என்ன தருவாய்?” என்று தொழிலதிபர்கள் கேட்க, பதிலுக்கு, “திருப்பி நீ எனக்கு என்ன தருவாய்?” என்று  மாநில முதல்வர்கள் கேட்க, அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஒரு புதிய உறவை உருவாக்கிக் கொள்கிறார்கள். இரண்டு பிரிவினரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டும், சொத்துகளை செல்வங்களை குவித்துக் கொள்கிறார்கள். இதுதான் இந்தியாவில் நடக்கும் அரசியல். இத்தகைய தொழிலதிபர்களால் தங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நபர் மோடிதான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எப்படி வந்தது இந்த நம்பிக்கை?
குஜராத்தில் மோடி செயல்பூர்வமாக நிரூபித்துக் காட்டியதால் உருவான நம்பிக்கை. இந்தியாவில் முதல் வரிசையில் நிற்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த பிரதமராக மோடிதான் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். (‘எக்னாமிக் டைம்ஸ்’-செப்.6, 2013)

10 ஆண்டுகாலமாக இதேபோல் பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியது காங்கிரசின் மன்மோகன் ஆட்சி. அதனால் ஊழல் சகதியில் சிக்கி அம்பலப்பட்டு, மக்கள் வெறுப்புக்கு உள்ளாகிவிட்டது. எனவே மன்மோகனை வைத்து வண்டியை ஓட்ட முடியாது என்ற நிலையில் மோடி என்ற புதுமுகத்தை இவர்கள் களத்தில் இறக்கியிருக்கிறார்கள்.

மோடி ஆட்சி முறைகேடாக தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கிய சலுகைகளை
மத்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கையே அம்பலப்படுத்தியிருக்கிறது. 2011-2012 ஆம் ஆண்டில் மட்டும் சந்தேகப்படக்கூடிய அளவில் ரூ.1275 கோடி சலுகைகளை வாரி வீசியிருக்கிறார் மோடி. மோடியினால் பயனடைந்தவர்கள் என்று அந்த அறிக்கை வெளியிட்ட பட்டியலில் அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. குஜராத் சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதம் வந்தபோது, “அறிக்கையில் ஊழல் என்று சொல்லவில்லை; முறைகேடு என்றுதான் கூறப்பட்டுள்ளது” என்றார், குஜராத் நிதியமைச்சர். அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ குழுமங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டதையும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் விரிவாகப் பதிவு செய்துள்ளது தணிக்கை அதிகாரியின் அறிக்கை. விவசாய நிலங்கள், கடற்கரைப் பகுதிகள், மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறையையும் மாநில அரசின் அவசர கால அதிகாரத்தையும் பயன்படுத்தி கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
குஜராத்  மாநிலத்திலேயே அதிக விளைச்சலைத் தரக்கூடிய  கோதுமைக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பகுதி தொலேரா. வளம் கொழிக்கும் இந்த விவசாய பூமியில் 920 சதுர கிலோ மீட்டர் விவசாய நிலத்தைக் கைப்பற்றி, விவசாயத்தை அழித்துவிட்டு, ‘சிறப்பு முதலீட்டு மண்டலமாக்கிட’ பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 10 ஏக்கர் நிலத்தில் ஒரு விவசாயி, 15,000 கிலோ கோதுமையை அறுவடை செய்து, ஆண்டுக்கு 6 லட்சம் ஈட்டக்கூடிய இந்தப் பகுதியின் விவசாயத்தை முழுதுமாக அழித்து, தொழில் நிறுவனங்களுக்கு “தாரை” வார்ப்பதை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். போராடும் விவசாயிகளை காவல்துறையை வைத்து அடக்குகிறது குஜராத் ஆட்சி. (செய்தி : ‘பிரன்ட் லைன்’, ஏப்.4, 2014)
வளர்ச்சி வளர்ச்சி என்று டமாரம் அடிக்கப்படும், மோடியின் குஜராத்தில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்நிலையோ படு மோசம்! உதாரணத்துக்கு சில: -

• அரசு பொது விநியோக அமைப்புகள் (ரேஷன் கடைகள்) மிக மோசமாக செயல்படும் மாநிலங்களில் ஒன்று குஜராத். ரேஷன் கடைகள் வழியாக அத்தியாவசியப் பொருள்கள் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதில் இந்தியாவின் கடைசி மாநிலம் குஜராத்.

• “காந்தி கிராம வேலை வாய்ப்புத் திட்டம்” மிக மிக மோசமாக அமுலாகும் மாநிலம் குஜராத். 2009-2010இல் 60 நாள் வேலைத் திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் 19 சதவீதம்தான். இது தேசிய சராசரி அளவைவிடக் குறைவு.

• தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் எடுத்த புள்ளி விவரப்படி, குஜராத் நகர்புறம், கிராமங்களில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் ஊதியத்தில் தேசிய சராசரியைவிட குஜராத் பின் தங்கியே நிற்கிறது. கிராமப்புறங்களில் வேலைக்காக கிடைக்கும் ஊதியம், அகில இந்திய அளவில் சராசரி ரூ.144 என்றால், குஜராத்தில் ரூ.112 தான். நகர்ப்புறங்களில் அகில இந்திய  சராசரி ரூ.231 என்று இருக்கும்போது, குஜராத்தில் ரூ.177 மட்டும்தான்.

• மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அறிக்கை அண்மையில் புதுடில்லியில் வெளியிடப்பட்டது. இதில் மனித வள மேம்பாட்டில் குஜராத் 9 ஆவது இடத்தில் நிற்கிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் குஜராத்தைவிட முன்னணியில் உள்ளன.

• 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குஜராத் சமூக பொருளாதார நிலை பற்றி கீழ்க்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது:

2001 இல் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 70 சதவீதம். 2012இல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதில் 5 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 100 பேருக்கும் 23 பேர் வறுமையில் வாடுகிறார்கள். ஒவ்வொரு 1000 ஆணுக்கும் 918 பெண் என்ற நிலை. இதை மாற்றியமைக்க எந்த திட்டமும் இல்லை.

• ஆண்-பெண் பாலின எண்ணிக்கை ஏற்றத் தாழ்வில் குஜராத், 28 மாநிலங்களில் 24 ஆவது இடத்தில் இருக்கிறது. 58 சதவீத குழந்தைகளுக்கு இன்னும் அரசின் தடுப்பூசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளிலும் 45 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதில் தமிழகம், மகாராஷ்டிரம், கேரளாவைவிட குஜராத் பின்தங்கி 21 ஆவது இடத்தில் இருக்கிறது. அதேபோல் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்பு 1000 குழந்தைகளுக்கு 60 ஆக உள்ளது. ஒவ்வொரு 1000 பிரசவத்துக்கும் இறக்கும் தாய்மார்கள் 148. இதிலும் தமிழ்நாடு, கேரளாவைவிட பின்தங்கி நிற்கிறது குஜராத்.

• எழுதப் படிக்கத் தெரிந்த குழந்தைகள் விகிதம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களைவிட மிகவும் பின்தங்கியிருக்கிறது குஜராத் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். ஆண்களைவிட பெண்கள் 20 சதவீதம் கல்வி அறிவு இல்லாதவர்களாக பின் தங்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கும் உயர்சாதியினருக்கும் எழுத்தறிவு பெறுவதில் உள்ள இடைவெளி குஜராத்தில் மிக மிக அதிகம். பிற மாநிலங்களைவிட குஜராத் இந்த கல்விக்கான சமூக ஏற்றத் தாழ்வில் முன்னணியில் உள்ளது. ‘சூத்திரர்’ களுக்கு கல்வியைத் தரக்கூடாது என்ற ‘மனுசாஸ்திர’ சிந்தனையில் ஆட்சி நடப்பதுதான் இதற்கு காரணம். தமிழ்நாட்டில் பஜாக  நிறுத்திய வேட்பாளர்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்பதையும் சிந்திக்க வேண்டும். வளர்ச்சியை நோக்கி ‘ராக்கெட்’ வேகத்தில் முன்னேறுவதாக கூறப்படும் குஜராத்தில் ஏன் இந்த பின்னடைவு? ‘வளர்ச்சி’யின் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதானே?

• பல்வேறு மொழி, இனம், பண்பாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்டது இந்திய உபகண்டம். இந்த நாட்டின் பிரதமராக வரக்கூடியவருக்கான முதல் தகுதி, இந்த மாறுபட்ட இனம், மொழி, பண்பாட்டு மக்களை அங்கீகரித்து, மதிக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும். சர்வாதிகாரி ஹிட்லர்கூட தனது தேசத்தில் வளர்ச்சித் திட்டங்களைத்தான் அமுல்படுத்தினார். ஆனால், ஆரிய இனவெறி பிடித்து யூதர்களை அழித்தொழித்து வரலாற்றில் களங்கமாகிப் போனார். வளர்ச்சியைக் கொண்டு வந்தவர் என்று ஹிட்லரை ஆதரிக்க முடியுமா?

மோடி - இப்படி ஒரு பாசிசப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். “நாட்டுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது ஆர்.எஸ்.எஸ்.” - என்று மோடி ‘ஈ.டி.வி.’ என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் (2.4.2014) கூறியுள்ளார்.

நன்றி:வெப்துனியா 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...