Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 05, 2011

மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் : முதல்வர் வழங்கினார்


சென்னை : மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில், 1 முதல், 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும், 26.3 லட்சம் மாணவ, மாணவியர், இலவச பஸ் பாஸ் பெற தகுதியுடையவர்கள்.

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், கடந்தாண்டு, 3.40 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ்களை வழங்கியது. இந்த கல்வியாண்டில் (2011-12), 3.60 லட்சம் மாணவ, மாணவியர் இலவச பஸ் பாஸ் பெற உள்ளனர். மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளிகளுக்கே சென்று, அவர்களை போட்டோ எடுத்து, அங்கேயே இலவச பஸ் பாஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும், 27.2 லட்சம் மாணவ, மாணவியர் இச்சலுகை பெறுகின்றனர். இதற்காக, 303 கோடியே, 84 லட்ச ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெ., வழங்கிய பாஸ்: சென்னை விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் லோகநாதன் உட்பட, ஏழு மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அத்துடன், படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதே போன்று, தமிழகத்தில் உள்ள பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க, போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலர், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...