Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 04, 2011

அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் சேர மாணவர்கள் போட்டி

மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்ட தலைநகர்ப் பகுதிகளில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி சேர்க்கையை விட, ஆங்கில வழி மாணவர் சேர்க்கை அமோகமாக நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள பல அரசுப் பள்ளிகளில், மொத்த மாணவர் சேர்க்கையில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே தமிழ் வழி சேர்க்கை நடந்துள்ளது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும், நகரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் தமிழ் வழியில் சேர்வதை விட, ஆங்கில வழியில் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகளில், ஆண்டுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் கல்விக் கட்டணமாக இருக்கிறது. ஆனால், அரசுப் பள்ளிகளில் ஆண்டுக் கட்டணம் 1,000 ரூபாய்க்குள் இருக்கிறது. 
ஆங்கில வழி சேர்க்கை அதிகளவில் நடப்பதற்கு, கட்டணம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.நடப்பு கல்வியாண்டில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பில் ஆங்கில வழியில் 269 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ் வழியில் வெறும் 75 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். மொத்த மாணவர்களில் இவர்களின் சதவீதம் 27.88 தான். சென்னை எழும்பூர் மாநில அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பில் 75 மாணவியர் ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழ் வழியில் 10 மாணவியர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இவர்களின் சதவீதம் வெறும் 13.33 தான்.மற்ற அரசுப் பள்ளிகளிலும் இதே போன்ற நிலைமையே இருக்கிறது. 

அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழியில் 1,271 மாணவியரும், ஆங்கில வழிக் கல்வியில் 2,512 மாணவியரும் பயின்றுள்ளனர். கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் வழியில் ஆறாம் வகுப்பில் 16 மாணவர்களும், ஆங்கில வழியில் 145 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இது, கடந்த ஆண்டில் முறையே 15,199 என இருந்துள்ளது.பள்ளி நிர்வாகங்கள் திணறல்: மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல், ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆங்கில வழிக்கென தனி ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில்லை. இருக்கின்ற ஆசிரியர்களில், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் திறமை இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஆங்கில வழி வகுப்புகளில் பணி வழங்கப்படுகிறது. ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் இருக்க வேண்டும் என, அரசு கூறுகிறது. ஆனால், எந்தப் பள்ளிகளிலும் இந்த விதிமுறைகளின்படி ஆசிரியர்கள் எண்ணிக்கை இருப்பதில்லை.

இதனால், அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல், பள்ளி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. அதிலும், ஆங்கில வழி வகுப்புகளை பொறுத்தவரை, ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு வகுப்பு மட்டுமே நடைபெற வேண்டும் என, அரசு கூறுகிறது. ஆனால், ஒரே வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்கின்றனர். இதனால், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் வீதம் பிரித்து, தனித்தனி வகுப்புகளாக நடத்தப்படுகின்றன. இந்த விவரம், அரசு கோப்புகளில் இடம்பெறாது.ஆங்கில வழியில் மாணவர்களுக்கு, "சீட்' வழங்கும்படி, அரசுப் பள்ளிகளுக்கு, அரசியல் பிரமுகர்கள் பரிந்துரை செய்கின்றனர். அவர்கள் கூறும் மாணவர்களுக்கு, "சீட்' வழங்க வேண்டிய கட்டாயம், பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது. ஒரு பக்கம் அதிக மாணவர்கள், போதிய ஆசிரியர்கள் இல்லாதது, ஆங்கில வழி வகுப்புகளை அரசு ஊக்கப்படுத்தாமல், மறு பக்கத்தில், "சீட்' வழங்கும்படி நெருக்கடி தருவது போன்ற காரணங்களால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என்ன செய்வதென தெரியாமல் விழித்து வருகின்றனர்.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும் போது, "அனைவருமே ஆங்கில வழியில், "சீட்' கேட்கின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அளவுக்கு அதிகமாக மாணவர்களை சேர்க்க முடியாது. இதை உணராமல், பகுதிகளில் உள்ள பெரிய பிரமுகர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர், "சீட்' கேட்டு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் நெருக்கடி தருகின்றனர். ஆங்கில வழி வகுப்புகளை கூடுதலாக அங்கீகரித்து, போதிய ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தால், இது போன்ற பிரச்னைகள் இருக்காது' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...