Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 11, 2011

தமிழகத்தின் புதிய ஆளுநர் ரோசய்யா?

டெல்லி: முன்னாள் ஆந்திர முதல்வரான ரோசய்யா தமிழகத்தின் அடுத்த கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தமிழக கவர்னராக உள்ள சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான அவருக்கு இனியும் பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி, வேறு ஒருவரை கவர்னராக நியமிக்க முடிவு செய்துள்ளனர் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்.

இந் நிலையில் இந்தப் பதவிக்கு கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், உத்தர்கண்ட் மாநில கவர்னருமான மார்க்ரெட் ஆல்வாவின் பெயர் அடிபட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நெருக்கமானவர் என்பதால், அதிமுகவுடன் எதிர்கால கூட்டணியை மனதில் வைத்து இந்த முடிவை மத்திய அரசு எடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரோசய்யாவை கவர்னராக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து ரோசய்யாவை முதல்வராக நியமித்தார் சோனியா. ஆனால், அந்தப் பதவிக்குக் குறி வைத்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தந்த நெருக்கடியால், ரோசய்யா பதவி விலக நேர்ந்தது.

இப்போது ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் சிபிஐ வளையத்தில் உள்ளார்.

இந் நிலையில் தலைமையில் பேச்சுக்குக் கட்டுப்பட்டு பதவி விலகிய ரோசய்யாவுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது வயதை கருத்தில் கொண்டு, அவரை தமிழக கவர்னராக்க சோனியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும் ராஜஸ்தான் கவர்னராக இருந்த பிரபா ரவு மரணமடைந்ததையடுத்து அந்தப் பதவிக்கு மார்க்ரெட் ஆல்வாவை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல மத்தியப் பிரதேச ஆளுநராக உள்ள ராமஸ்வர் தாக்கூரின் பதவிக் காலமும், கோவா ஆளுநர் எஸ்.எஸ்.சித்துவின் பதவிக் காலமும் முடிவதால் அவர்களையும் மாற்றவும், ஜார்க்கண்ட் ஆளுநரையும் மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆல்வாவுக்குப் பதில் உத்தர்கண்ட் மாநிலத்துக்கு வட-கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்த மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

அதே நேரத்தில் காமன்வெல்த் போட்டி ஊழலில் பெயர் அடிபடும் டெல்லி துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கண்ணாவை தொடர்ந்து அதே பதவியில் நீடிக்க வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...