நவம்பர் 01, 2010
காண்பதற்கே அரிதாகிவிட்ட பூவரசம் மரங்கள்
சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள்தோறும் தெருவுக்கு தெரு வளர்ந்து அழகாக பூத்துக் குலுங்கிய பூவரசம் மரங்கள் தற்போது காண்பதற்கே அரிதாகிவிட்டன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட அனைத்து கிராமங்களிலும் அழகிய மஞ்சள் நிற பூவுடன் பூவரச மரங்கள் ஆங்காங்கே இருந்தன. இந்த மரங்கள் தெஸ்பீசியா பேரணித்தையும், தெ.பாபுல்னியா இனத்தையும் சார்ந்தவை. வெப்பவளையப் பகுதிகளில் காணப்படும் இந்த மரங்கள் 5 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை.
இந்த பூவரசில் "நாட்டுப் பூவரசு' ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும். பருவத்தில் மட்டும் பூக்கும் "கொட்டை பூவரசு' என்றொரு மற்றொரு ரகமும் உண்டு. தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இதற்கு மருத்துவ குணமும் உண்டு.
தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இந்த மரங்களை காணவில்லை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பல்கிப் பெருகி இருந்த இம் மரங்கள் எங்கோ கிராமத்தின் ஒரு மூலையில் ஒன்றிரண்டு மரங்கள் மட்டுமே உள்ளன.
இந்த மரங்களை மீண்டும் வளர்க்கவும், பாதுகாக்கவும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து இயற்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜ் கூறியது:
"பூவரச மரம் வீடுகளில் உள்ள கதவு, ஜன்னல்கள் தயாரிக்க சிறந்த மரம். தேக்கு, கோங்கு மரங்களுக்கு இணையானது. இம் மரத்தின் தழைகளை வெட்டி வயல்களில் போட்டால் நல்ல உரம். இம் மரத்தை விதையைக் கொண்டுதான் வளர்க்க வேண்டும் என்பதில்லை. கிளைகளை நட்டு வைத்தாலே எளிதில் வளர்ந்துவிடும். இந்த மரங்களை கிராமங்கள்தோறும் விவசாயிகள் வளர்க்க அரசு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...