Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 09, 2010

பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் "இரும்புப்பெண்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில், ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள "ஆயுதப்படை சிறப்புச் சட்ட'த்தை திரும்பப்பெறக்கோரி, ஐரோம் ஷர்மிளா என்ற பெண் கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.


வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கடந்த 1947ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1972ம் ஆண்டு வரை யூனியன் பிரதேசமாக இருந்த மணிப்பூர், பின், தனிமாநிலமானது.


கடந்த பல ஆண்டுகளாக, சுயாட்சி உரிமை கோரி, நக்சலைட்களும், பயங்கரவாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு கடந்த 1980ம் ஆண்டு முதல், பயங்கரவாதிகளையும், நக்சலைட்களையும் ஒடுக்குவதற்காக ராணுவத்திற்கு "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' வழங்கப்பட்டது.


இந்த சிறப்புச் சட்டத்தின்படி, பொது இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே அது பயங்கரவாத நடவடிக்கையாக கருதப்படும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கள் கூட, தங்கள் மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக்கொல்ல முடியும். அவர்கள் மீது எந்த நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படாது.

நீதிமன்றத்தின் அனுமதியின்றி, எங்கு, எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்த முடியும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வேண்டியதில்லை. இந்த சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து, அங்கு மனிதஉரிமை மீறல்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

ராணுவத்தினரால், அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுவது, பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது என மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதனால், ராணுவத்தினரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். மணிப்பூர் தலைநகரம் இம்பாலுக்கு அருகே மாலோம் என்ற இடத்தில், கடந்த 2000ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி பஸ்சுக்காக, காத்திருந்த அப்பாவி பொதுமக்கள் 10 பேரை, ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, சமூக ஆர்வலரான ஐரோம் ஷர்மிளா என்ற இளம்பெண், மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.

ஆனால், அவரை போலீசார் தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு ஆண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தபடியே ஷர்மிளா தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார்.

ஆனால், அவருக்கு போலீசார், கட்டாயப்படுத்தி திரவ உணவுகளை செலுத்தினர். ஒரு ஆண்டிற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார். இதனால், மறுநாளே அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வரும் ஷர்மிளா, சிறையிலும், மருத்துவமனையிலுமாக தனது நாட்களை கழித்து வருகிறார். அவருக்கு, நாள் ஒன்றுக்கு மூன்றுமுறை திரவ உணவுகள் செலுத்தப்படுகின்றன. தற்போது, 38 வயதாகும் ஷர்மிளா கடந்த பத்து ஆண்டுகளாக, தண்ணீரோ, உணவுகளையோ சாப்பிடவே இல்லை.

இதனால், உடல் மிகவும் மெலிந்து எலும்பும், தோலுமாக காணப்படுகிறார். இதுகுறித்து ஐரோம் ஷர்மிளா கூறியதாவது: மணிபூரில் தற்போது உள்ள நிலை மாறவேண்டும். இந்த மாற்றத்தை நான் சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன்.

இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தையும், உடல் பலத்தையும் நம்பியுள்ளனர். அவர்கள், அதை ஆயுதமாக பிரயோகிக்கின்றனர். நாங்கள் எங்கள் பட்டினி போராட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்துள்ளோம்.

இதைக் கொண்டு, நீதி கிடைக்கவும், அமைதி திரும்பவும் போராடுகிறோம். நான் நடத்திவரும் இந்த போராட்டமானது மிகவும் சாதாரணமானது. இவ்வாறு ஐரோம் ஷர்மிளா கூறியுள்ளார். அவரின் இந்த போராட்டத்திற்கு, குடும்பத்தினரும் மிகவும் ஆதரவாக உள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...