Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 22, 2010

மொழிவாரி மாநில நாள்:

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 54 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில்... நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை ‘மாநில நாள்’ கொண்டாடி வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதில் கொண்டாட பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், எல்லைப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட தலைவர்களைப் பற்றிய நினைவுபடுத்துதல் கூட பெரிதாக இல்லை.

இந்த நிலையில், அரசு நிகழ்த்த வேண்டிய ஒரு நிகழ்வை கருத்தரங்காக நடத்தியிருக்கிறது ‘தி சண்டே இந்தியன்’ பத்திரிகை.

இதில் தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார், பா.ம.க.வின் வேல்முருகன், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தார்கள்.

கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞரும், மொழியியல் அறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘சென்னை, ராஜதானியாக இருந்த சென்னை மாகாணம், ஒரிஸா மாநிலத்தின் பெட்டகஞ்சம் மாவட்டத்திலிருந்து குமரி வரை விரிந்திருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த குழுக்களின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தின் பல பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகத்துக்கும், ஆந்திரத்துக்கும் சென்றுவிட்டன.

கேரளாவோடு இணைக்கப்பட்ட குமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை தாலுகா ஆகியவை பலத்த போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் இணைந்தன. ஆனாலும் தேவிகுளம், பீர்மேடு, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, பாலக்காடு ஆகிய பகுதிகள் கேரளத்துக்குப் போய்விட்டன. தேவிகுளம், பீர்மேடு இரண்டு வட்டாரங்களிலும் அப்போது மொத்தம் இரண்டே இரண்டு மலையாள கிராமங்கள்தான் இருந்தன.
இன்றும் திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் உள்ள ஓலைச் சுவடிகள் அனைத்தும் தமிழில்தான் உள்ளன. இதே போல இன்று கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா, கோலார் தங்கவயல், பெங்களூர் ஆகியவையும் தமிழர் பகுதிகளே. பெங்களூர் முற்காலங்களில் வெங்களூர் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு வந்தது. மேலும் தமிழகப் பகுதிகளான சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி ஆகியவை ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. திருப்பதி கோயில் கல்வெட்டுக்கள் தமிழிலேயே உள்ளன. காளஹஸ்தி கோயில் ஆவணங்கள் தமிழில்தான் இருக்கின்றன. சித்தூரில் இன்றும் தமிழர்களே அதிகம் வாழ்கிறார்கள். இப்படியாக, நாம் நமக்குரிய ஏகப்பட்ட பகுதிகளை இழந்துவிட்டோம். இதற்கு யாரையும் குற்றம் சொல்லி இப்போது பயனில்லை. தமிழகம் இழந்த பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களைத் தமிழகத்துடன் பங்கிட்டுக் கொள்ள மறுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இந்த வரலாற்று உண்மைகளை உணர-வேண்டும். அங்குள்ள பூர்வகுடிகளாக உள்ள தமிழர்களைப் பாதுகாக்கவேண்டும்’’ என்றார்.

source:tamilagaarasiyal

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...