எழுதியவர்: சகோதரர் மௌலவி. பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள்.
மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.
சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம். இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.
இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.நபிகள் நாயகத்தையும் பார்க்கிறோம்.
ஐம்பது வருடத்துக்குள் பகுத்தறிவு, மூட நம்பிக்கையாக இங்கே மாறியது போல் அந்த மாமனிதரின் சமுதாயம் மாறவில்லை. நபி(ஸல்) அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம்,
*அவருக்காகச் சிலை வடிக்கவில்லை.
* அவரது சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.
* அவருக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.
* அவரது அடக்கத் தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.
* எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவரால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.
* காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே! நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா? என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.
மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப்பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுய மரியாதைக்கு இழுக்கு அல்லவா?' என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.
அரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுய மரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை.
இந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) 'அமருங்கள்' என்றார். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார். நூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
மற்றவர்களுக்கு இவ்வாறு போதித்தாலும் தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால் தமக்காக மட்டும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்பினார்களா? நிச்சயமாக இல்லை.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார். நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்' என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 624
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார் கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) முன்னால் அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோன்றுகிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள். தமக்கு மரியாதை செலுத்துவ தற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும் போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.
கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகை யிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக் குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். நூல் : திர்மிதீ 3807
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.
தமக்காக எழுந்து நிற்பதைக் கூட நிராகரித்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்வதால் தான் முஸ்லிம்கள் அவரை நூறு சதவிகிதம் பின்பற்றுகின்றனர்.
மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலும், எல்லா வகையிலும் மக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலும் தான் ஆன்மீகத் தலைவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
மக்களுடன் சர்வ சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டால் ,மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்ட எந்தச் சிறப்பும் அவர்களுக்கு இல்லை என்பது மக்களிடம் வெளிச்சமானால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் தான் தாம் ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்த போதும் எந்த வகையிலும் தாம் மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அறியாத மக்கள் அவர்களை மனித நிலையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகக் கருதினாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் இத்தகைய கருத்துக்கு இடமிருந்தாலோ அதை உடனடியாகக் கண்டித்துத் திருத்தி விடுவார்கள்.
அவர்களின் வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் போது அவர்களுக்கு இயன்றதையே கட்டளையிடுவார்கள். அப்போது சில நபித் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போன்றவர்களாக இல்லை. அல்லாஹ் உங்களின் முன் பாவங்களையும், பின் பாவங்களையும் மன்னித்து விட்டான்.' என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அந்தக் கோபத்தின் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது. ' நான் உங்களை விட இறைவனை அறிந்தவன். அவனை அதிகம் அஞ்சுபவன்' எனக் கூறினார்கள். நூல் : புகாரி: 20
பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் தாம் கூறும் ஆன்மீக நெறியைத் தாம் கடைப் பிடிக்காவிட்டாலும் தமது சீடர்களும், பக்தர்களும் முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீடு வாசல் குழந்தை குட்டிகள் என அனைத்தையும் மறந்து தனது குருநாதரே கதி என்று கிடப்பவர்களைத் தான் இவர்கள் மிகவும் விரும்புவார்கள்.
இத்தகையோர் கூட்டம் பெருகப் பெருகத் தான் இவர்களது மதிப்பும், செல்வமும் உயரும்.
ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எது இயலுமோ அதைத் தான் செய்ய வேண்டும். ஆன்மீகத்தின் பெயரால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து விடக் கூடாது' என்று அறிவுரை கூறி வந்தார்கள்.
குடும்பம், ஆட்சி, நிர்வாகம், பிரச்சாரம் என்று பல்வேறு பொறுப்புக்கள் அவர்கள் மீது இருந்ததால் முழு நேரத்தையும் வணக்க வழிபாடுகளிலேயே அவர்களும் செலவிட மாட்டார்கள்.
ஆயினும் சில நபித் தோழர்கள் வேறு விதமாக நினைத்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதராக இருப்பதால் அவர்கள் குறைவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போதுமானது. ஏனெனில், இறைத் தூதர் என்ற தகுதியின் மூலம் மறுமையில் அவர்கள் மகத்தான பதவியைப் பெற்று விட முடியும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அப்படி நடக்கக் கூடாது. அவர்களை விட நாம் அதிகமதிகம் மார்க்கத்திற்காகச் செலவிட்டாக வேண்டும் என்பது தான் அவர்களின் நினைப்பு.
எல்லாக் காலத்திலும் மக்களின் நம்பிக்கை இப்படித் தான் இருக்கிறது. இதனால் தான் ஆன்மீகத் தலைவர்கள் கஞ்சா அடிக்கின்றனர். பெண்களுடன் உல்லாசம் புரிகின்றனர். இதைப் பார்க்கும் பக்தர்கள் அவர் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் கடவுளுக்கு வேண்டப்பட்டவர் (?) என்பதால் அவரது தவறைக் கடவுள் கண்டு கொள்ள மாட்டார்; நாம் அப்படி நடந்தால் மட்டும் தான் கடவுள் தண்டிப்பார் என்று அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக நினைக்கின்றனர்.
ஆனால் அறியாத மக்களின் இந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக இந்த மாமனிதர் பயன்படுத்திக் கொண்டாரா? 'ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான். நான் உங்களை விட்டு வேறுபட்டவன் தான்' எனக் கூறினார்களா?
மாறாகக் கடும் கோபம் கொள்கிறார்கள். அந்தக் கோபம் அவர்களது முகத்திலும் தென்படுகிறது. இறைவனை அதிகமாக அஞ்சுகின்ற நானே இயன்றதை மட்டுமே செய்யும் போது உங்களை நீங்கள் வருத்திக் கொள்வது எப்படிச் சரியாகும்? எனக் கூறி அந்த மக்களின் அறியாமையை நீக்குகிறார்கள்.
இத்தகைய அறியாத மக்கள் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் கைகளில் சிக்கியிருந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வெளிப்படையாக நான் செய்கிற வணக்கம் மட்டும் தான் உங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாத முறையில் நான் கடவுளோடு எப்படி ஒன்றிப் போய் வணங்குகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு முழுவதும் உறங்காமல் தவத்திலேயே நான் மூழ்கி இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்றெல்லாம் புளுகி மக்களைத் தங்களின் அடிமைகளாகவே வைத்திருப்பார்கள்.
மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்தார்கள். 'அவர் பெயர் அபூ இஸ்ராயீல். உட்காராமல் நின்று கொண்டிருப்பது என்றும், நிழலை அனுபவிப்பதில்லை எனவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பது எனவும் அவர் நேர்ச்சை செய்திருக்கிறார்' என்று மக்கள் விளக்கினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்காருமாறும், நிழலை அனுபவிக்குமாறும், பேசுமாறும், நோன்பை மட்டும் முழுமைப் படுத்துமாறும் அவருக்குக் கூறச் சொன்னார்கள். நூல் : புகாரி: 6704
எந்த ஆன்மீக வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டினார்களோ அந்த ஆன்மீகத்தின் பெயரைச் சொல் ஒருவர் அதி தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்.
இம்மாமனிதர் இறைவனின் தூதராக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்திருந்தால் இத்தகையோரை ஊக்குவித்திருப்பார்கள்.
இது போன்ற கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்வோர் தான் ஆன்மீகத் தலைவர்களின் முக்கியமான பலம்.
தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தனது தொண்டன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு சாவதை சாதாரண அரசியல் தலைவர்களே உள்ளூர விரும்புகின்றனர். ஆன்மீகம் இதை விட அதிகம் போதை தரக் கூடியது. தன்னால் மதிக்கப்படும் குரு, தன்னை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மனிதப் படுக்கைகளாக மாறும் பக்தர்களை இன்றைக்கும் பார்க்கிறோம்.
தன்னைக் காண்பதற்காக வாகனத்தில் செல்ல வசதி இருந்தும் சுட்டெரிக்கும் வெயில் கால்நடையாகவே பக்தர்கள் நடந்து வருவதைக் கண்டு ஆனந்தம் அடையும் ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், சிறுவர்களும் கூட பல நாட்கள் நடையாக நடந்து தங்கள் குருநாதரைக் காண வருகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் விரைவான வாகனங்களை யாரும் பயன்படுத்த முடியும். ஆனாலும் அறியாத மக்கள் சாரைசாரையாக பல நாட்கள் நடந்து வருவதில் கிடைக்கும் விளம்பரங்கள் வாகனத்தில் வந்தால் கிடைக்காதே!
இந்த மாமனிதரைப் பாருங்கள்!
1) உட்காராமல் நிற்க வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் ஒருவர் முடிவு செய்கிறார்.
2) யாருடனும் பேசவே மாட்டேன்
3) பகலெல்லாம் வெயில் தான் நிற்பேன். நிழலை அனுபவிக்க மாட்டேன்.
4) காலமெல்லாம் நோன்பு நோற்பேன்
என்று நான்கு காரியங்களைச் செய்வதாக இவர் செய்த தீர்மானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அடியோடு நிராகரிக்கிறார்கள்.
'நோன்பு மட்டும் வைத்துக் கொள்! மற்ற மூன்று தீர்மானங்களையும் மாற்றிக் கொள்' என ஆணையிடுகிறார்கள்.
ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்த முயன்றவர்கள் கூட இந்த இடத்தில் தோற்று விட்டனர். தமக்காக மற்றவர்கள் வெயில் காத்திருக்க வேண்டும்! கஷ்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டனர்.
ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அனைவரும் தோற்ற இடத்தில் இந்த மாமனிதர் வென்று காட்டுகிறார்!
அபூ ஜுஹைபா (ரலி) கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபூ தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். 'உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி), 'உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை' என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம், 'உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, 'நான் நோன்பு வைத்திருக்கிறேன்' என்றார். 'நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்' என்று ஸல்மான் கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி) 'உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், 'உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி) 'இப்போது எழுவீராக!' என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ' உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!' என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபூ தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'ஸல்மான் உண்மையையே கூறினார்!' என்றார்கள். நூல் : புகாரி: 1968, 6139
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். மதீனா நகரில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே தஞ்சமடைவதற்கு முன்பே அவர்களின் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட மதீனாவைச் சேர்ந்த பலர் மக்கா சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே ஏற்றிருந்தனர். 'நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால் எங்களிடம் வாருங்கள்! உயிரைக் கொடுத்தும் உங்களைக் காப்போம்' என்று உறுதி மொழியும் கொடுத்தனர்.
எனவே தான் தஞ்சமடைய மதீனா நகரை நபிகள் நாயகம் (ஸல்) தேர்வு செய்தனர். அவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் ஏராளமானவர்கள் அகதிகளாக வந்து குவிந்திருந்தனர்.
அகதிகள் பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) சமாளித்த விதம் அவர்களின் மார்க்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி எனலாம்.
'மதீனாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அகதியாக வந்துள்ள ஒருவரைத் தமது சகோதரராக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) முன் வைத்த திட்டம்.
மதீனத்து நன் மக்கள் ஒவ்வொருவரும் வெளியூரைச் சேர்ந்த ஒருவரை ஏற்று சோறு போடுவதுடன் நின்று விடவில்லை. சொத்தில், வியாபாரத்தில், தோட்டம் துறவுகளில், ஆடைகளில், வீட்டில் என அனைத்திலும் பாதியைத் தமது கொள்கைச் சகோதரருக்கு வழங்கி னார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் கூட இப்படி பங்கு போட்டுக் கொடுக்க முடியுமா என்று நினைக்குமளவுக்கு நடந்து கொண்டனர்.
அரவணைத்து உதவுவதில் இவர்களை யாருமே வெல்ல முடியாது என்பதால் அன்ஸாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்கள்.
நாம் மேலே சுட்டிக் காட்டிய நிகழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.
அபூ தர்தா என்பார் மதீனாவைச் சேர்ந்தவர். சல்மான் ஈரானைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் இணைவதற்காகவே வந்தவர் சல்மான். சல்மானை அபூ தர்தாவுக்குச் சகோதரராக நபிகள் நாயகம் (ஸல்) நியமித்தார்கள்.
ஆனால் அபூ தர்தாவோ ஆழ்ந்த மார்க்கப் பற்றுள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிபாட்டில் முழுமையாக மூழ்கி விட வேண்டுமென்பதற்காக இரவெல்லாம் தொழுகையிலேயே நிற்பார். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூட இவர் செய்யத் தவறினார். அது மட்டுமின்றி ஒரு நாள் விடாமல் தினமும் நோன்பு நோற்றும் வரலானார்.
இதனால் தாம்பத்தியத்தையே மறந்த நிலைக்கு ஆளான போது தான் சல்மானுக்கு விபரம் தெரிந்து கண்டிக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்துகிறார்.
முடிவில் இந்த விவகாரம் நபிகள் நாயகத்திடம் வந்த போது, சல்மான் கூறியது தான் சரி என ஒற்றை வரியில் நபிகள் நாயகம் விடையளித்தார்கள்.
தனது மார்க்கத்தையும், வழி முறையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் கூட்டம் உருவானதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) ஆனந்தம் கொள்ளவில்லை; அவரைப் பாராட்டவில்லை; அவரைப் போல் நடக்குமாறு மக்களை ஊக்குவிக்கவுமில்லை.
மாறாக, நான் கூறியதைச் செய்வதென்றாலும், மனைவி, மக்கள், உடல், கண் போன்ற அனைத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளுக்குத் தடையாக ஆகி விடக் கூடாது எனக் கூறி அவரது அறியாமையை விலக்கி நெறிப்படுத்துகிறார்கள்.
நபிகள் நாயகத்துக்கு வேறு நோக்கம் ஏதும் இருந்திருந்தால் இது போன்ற செயல்களை அவர்கள் ஊக்குவித்திருக்க வேண்டும். அதில் தான் அதிக விளம்பரமும், புகழும் கிடைத்திருக்கும்.
இது போல் மற்றொருவர் பக்தியிலேயே மூழ்கி உலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்த போது அவரைத் தேடிச் சென்று இது போன்ற ஒரு அறிவுரையைச் சொல்ல அவர்கள் தவறவில்லை.
இதோ அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.
அப்துல்லா பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறியதாவது: 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகின்றதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், 'ஆம்! அல்லாஹ் வின் தூதரே!' என்றேன். 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்! (சில நாட்கள்) விட்டு விடும்! (சிறிது நேரம்) தொழும்! (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில் (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்குப் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் சிரமத்தை வந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என் மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! 'அல்லாஹ்வின் தூதரே நான் வலு உள்ளவனாக இருக்கிறேன்!' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!' என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன் 'வருடத்தில் பாதி நாட்கள்!' என்றார்கள்.'அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார் என அபூ ஸலமா கூறுகிறார். நூல் : புகாரி: 1975
மக்களின் அறியாமையை நீக்கி அவர்களை மேம்படுத்தத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பினார்களே தவிர அவர்களது அறியாமையில் குளிர்காய விரும்பவில்லை என்பதை இந்நிகழ்ச்சியும் உறுதி செய்கின்றது.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தங்கினேன். (விடிந்ததும்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளும் தண்ணீரையும், தேவையான இன்னபிறவற்றையும் எடுத்து வைத்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என்னிடம் எதையாவது கேள்' என்றனர். அதற்கு நான் 'சொர்க்கத்தில் உங்களுடன் தோழமையாக இருப்பதை உங்களிடம் கேட்கிறேன்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இதைத் தவிர வேறு ஏதாவது (கேள்)' என்ற கூறினார் கள். 'அது தான் வேண்டும்' என நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உனது நன்மைக்காக அதிகமதிகம் வணக்கத்தில் ஈடுபட்டு எனக்கு உதவுவாயாக' என விடையளித்தார்கள். அறிவிப்பவர் : ரபீஆ பின் கஅப் (ரலி), நூல் : முஸ்லிம் 754
தமக்குத் தண்ணீர் எடுத்து வைத்ததற்காக இவ்வுலகப் பொருட் களில் எதையாவது கொடுக்கலாம் என்ற கருதியே என்னிடம் கேள் என நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ஆனால், அவரோ இவ்வுலகப் பொருட்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதைத் தான் கேட்கிறேன் எனக் கூறுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) இறைத் தூதராக இல்லாதிருந்தால், அப்படியே ஆகட்டும் எனக் கூறியிருக்கலாம். அவரும் மன நிறைவு அடைந்திருப்பார். மறுமை என்ற வாழ்க்கை இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் இல்லை என்றும் வைத்துக் கொண்டால் இப்படிச் சொல்வது மிக எளிதானது தான்.
ஆனால் மறுமை நாளில் அனைவரும் இறைவனின் அடிமைகளாகத் தான் வந்தாக வேண்டும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததாலும், அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததாலும் 'ஒருவரைச் சொர்க்கவாசியாக அல்லது நரகவாசியாக ஆக்குவது இறைவனின் கட்டளைப்படி நடக்கக்கூடியது தானே தவிர என் கட்டளைப்படி நடக்கக்கூடியது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக வேறு கோரிக்கையைக் கேட்கச் சொல்கிறார்கள்.
அவர் தனது பழைய கோரிக்கையிலேயே பிடிவாதமாக இருப்பதைக் கண்டவுடன் 'நீ சொர்க்கம் செல்வது, எனக்குத் தண்ணீர் எடுத்துத் தந்து உதவுவதால் மட்டும் ஆகக் கூடியதல்ல. மாறாக, இறைவன் உனக்கு விதித்துள்ள கடமைகளைச் செய்து அவனது அன்பைப் பெற வேண்டும். இறைவன் உன் மீது அன்பு கொள்ளும் வகையில் நீ நடந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியம்' என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.
சாதாரண ஊழியம் செய்தவரை விட்டு விடுவோம். தமது குடும்பத்தாருக்கும், தமது நெருங்கிய உறவினருக்கும் அவர்கள் செய்த எச்சரிக்கையும் இதுவாகத் தான் இருந்தது.
தமது உறவினர் அத்தனை பேரையும் அழைத்து 'நீங்கள் என் செல்வத்தைக் கேளுங்கள் உங்களுக்குத் தருகிறேன். உங்களை அல்லாஹ்விடமிருந்து என்னால் காப்பாற்ற முடியாது. நீங்கள் தான் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்பது தான் அந்த எச்சரிக்கை.
'அப்து முனாபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! அப்துல் முத்தபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது மாமியாகிய உம்முஸ் ஸுபைரே! எனது மகளாகிய ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது சொத்துக்களில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்! அல்லாஹ்விடமிருந்து உங்களை நான் காப்பாற்ற முடியாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி: 2753, 3527, 4771
ஆன்மீகக் குருவாக ஒருவர் மதிக்கப்பட்டால் அவருக்குப் பிறந்த தறுதலைகளும் அவ்வாறே இன்றைக்கு மதிக்கப்படுவதை மக்களிடம் காண்கிறோம்.
இந்த மாமனிதரோ வாரிசு முறையில் எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ ஆக முடியாது. தனது வாரிசே ஆனாலும் நடத்தையின் மூலமாக மட்டுமே நல்லவராக முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள்.
ஆன்மீக வாதிகளால் நமக்கு நன்மை செய்ய முடிகிறதோ, இல்லையோ அவரைப் பகைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நமக்குத் தீமை செய்ய முடியும் என்ற தோற்றத்தை ஆன்மீக வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.
*பிடி சாபம் என்று சொல் விட்டால் நமது கதி அதோ கதி தான் என்று *மக்களை நம்ப வைத்து விடுகிறார்கள்.
*பெண்களைக் கற்பழிப்பார்கள். வெளியே சொன்னால் சாபம் போட்டு விடுவேன் என்பார்கள்.
*பணத்தை மோசடி செய்வார்கள். கேள்வி கேட்டால் சாபம் போடுவேன் என்பார்கள்.
*இவ்வளவு ரூபாய் கொடுத்தால் சிறப்பு பூஜை செய்து உன்னை எங்கேயோ கொண்டு போகிறேன் என்பார்கள். ஒன்றும் நடக்கவில்லை என்பதற்காக மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.
இந்த அயோக்கியனின் சாபம் நம்மை என்ன செய்து விடும் என்ற சாதாரண அறிவு கூட மக்களுக்கு இல்லாத நிலையை இவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
உலகில் உள்ள எல்லா ஆன்மீக வாதிகளைப் பற்றியும் இத்தகைய ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்திலும் கூட பத்துவா' (சாபம்) செய்து விடுவார் என்று பயந்தே பலரும் போகளிடம் ஏமாந்து வருகின்றனர்.
மாபெரும் ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே இதையும் ஒழித்துக் கட்டியுள்ளார்கள்.
ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்.
சில நிகழ்ச்சிகளைப் பாருங்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். 'அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே' என்று நான் கூறினேன். 'ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவ னிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4705
உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது 'நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்' எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார். 'மகளே என்ன நேர்ந்தது' என்று உம்மு சுலைம் கேட்டார்கள். 'என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே' எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். 'நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக' என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள். நூல் : முஸ்லிம் 4712
'இறைவா! நம்பிக்கையாளர் எவரையேனும் நான் ஏசினால் அதை மறுமையில் உன்னிடம் நெருங்குவதற்குக் காரணமாக ஆக்கி விடு!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றுள்ளேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி: 6361
'என் சாபத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம்!' என்று கூறியது மட்டுமின்றி நான் கோபத்தில் யாரையாவது சபித்தால் அது அவருக்கு நன்மையாகத் தான் முடியும் எனவும் கூறிய ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
இப்படி அறிவித்ததன் முலம் தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர், விமர்சனம் செய்வோரின் அச்சத்தைப் போக்குகிறார்கள்.
நியாயத் தீர்ப்பு நாளில் நான் தடாகத்தின் அருகே நிற்பேன். அப்போது என்னுடன் தோழமை கொண்டிருந்த சிலர் தடாகத்தை நோக்கி தண்ணீர் அருந்த வருவார்கள். அவர்களை நான் காணும் போது, வெட்கப்பட்டு என்னை விட்டும் திரும்பிக் கொள்வார்கள். 'என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் ஆயிற்றே!' என்று நான் முறையிடுவேன். 'உமக்குப் பின் அவர்கள் என்ன செய்தார்கள் என்று உமக்குத் தெரியாது' என்று எனக்குப் பதில் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நூல்கள் : முஸ்லிம் 4259, புகாரி 4259, 4740, 6576, 6582, 6585, 6586, 7049
என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்) பிடிக்கப்படுவார்கள். அப்போது 'என் தோழர்கள், என் தோழர்கள்' என்று நான் கூறுவேன். 'நீர் அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்' என்று என்னிடம் கூறப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நூல் : புகாரி: 3349, 3447, 4625, 6526
கெட்டவர்களையெல்லாம் தீட்சைக் கொடுத்து நல்லவர்களாக்கு கிறோம் என்று கூறும் போகள் எங்கே? நல்லவன் யார் கெட்டவன் யார்' என்பதை இறைவனால் மட்டுமே கண்டு கொள்ள இயலும் என அறிவித்த இந்த மாமனிதரின் போதனை எங்கே!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...