Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 07, 2011

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தை வீழ்த்திய தொழிற்சாலைகள்!

கிழக்குக் கடற்கரை ஓரமாக கடலூர் வழியாக, பரங்கிப்பேட்டை முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை நீண்டு கிடப்பது பக்கிம்ஹாம் கால்வாய்.

பக்கிம்ஹாம் கால்வாயின் இருபுறமும் பச்சைப் பசேலென காட்சி தந்த வேளாண் பயிர்கள், உடலுக்கும் மனதுக்கும் இதம் தரும் கண்கொள்ளா காட்சி. வானுயர வளர்ந்து நிற்கும் பனை மரங்கள், மாமரங்கள், தென்னை மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக் காடுகள், சவுக்குத் தோப்புகள், மணிலா, வெட்டிவேர் வயல்கள், கத்தரி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் என்று விரிந்து பரந்து கிடந்த நிலப்பரப்பு இன்று, தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு புகை கக்கிக் கொண்டு இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு, சில கட்டடங்கள் தவிர மற்றபடி, பெரும்பகுதி சுடுகாடாய்க் காட்சி அளிக்கின்றன. வேளாண்மையை அழித்தது மட்டுமன்றி, நச்சு வாயுக்களை பெருமளவுக்கு வெளியேற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களின் சுகாதாரத்தை பாழ்படுத்தி வருகின்றன. அன்று வெள்ளைக்காரர்களால் எளிமையான நீர்வழிப் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்ட பக்கிம்ஹாம் கால்வாய் (உப்பனாறு) இன்று தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு தகுதியான இடமென மத்திய, மாநில அரசுகள் வகைப்படுத்தி, அங்கு பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்து வருவது, குதிரை குப்புறத் தள்ளியதுமன்றி குழியும் பறித்த கதையாகி விட்டது.
3 ஆயிரம் ஏக்கரில் சிப்காட் ரசாயனத் தொழிற்பேட்டை, 3 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, 1,400 ஏக்கரில் அனல் மின் நிலையம், 1,000 ஏக்கரில் தனியார் கப்பல் கட்டும் தளம், இன்னும் பெயர் வைக்கப்படாத ஆலைகளுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், நல்ல விலை தருவதாகவும், அவர்களின் சந்ததிக்கு வேலை தருவதாகவும், விவசாயிகளிடம் ஆசைகாட்டி பறிக்கப்பட்டுவிட்டன.

விளை நிலங்களை இழந்த, பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இந்தத் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு ரூ. 60 முதல் ரூ. 80 வரை ஒப்பந்தத் தொழிலாளிகளாக கூலிவேலை பார்க்கும் அவல நிலைக்குத்தான் தள்ளப்பட்டனர். ஆனால் விவசாய நிலங்களை பறித்து அவற்றில் தொடங்கப்பட்ட ஆலைகள், தங்கள் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளில் விற்று, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் முன்னதாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு, இன்று விதிகளை இறுக்கியதன் காரணமாக, பல இறால் பண்ணைகள் மூடப்பட்டாலும், அவற்றில் மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத பரிதாப நிலைக்கு அந்த நிலங்கள் தள்ளப்பட்டு, சுடுகாடாகக் காட்சி அளிக்கின்றன. பறிபோனது போக மிச்சம் சொச்சம் இருக்கும் நிலங்களில் இன்றும் பனைமரங்கள், தென்னை மரங்கள், மணிலா, வெட்டிவேர், மலர்ச் செடிகள் பயிரிட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஏழை விவசாயிகள்.

தியாகவல்லி, நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில், 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் இன்று, 150 ஏக்கராகச் சுருங்கி விட்டது. ஓராண்டுப் பயிரான வெட்டிவேர் பயிரிடுவதில், ஏக்கருக்கு 4 டன் வெட்டிவேர் கிடைக்கும் என்றும், ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சம் என்றும் நினைவு கூறுகிறார், தியாகவல்லி விவசாயி சாமிக் கச்சிராயர்.

ஆயிரக்கணக்கான வெட்டிவேர் வயல்களும், சவுக்குத் தோப்புகளும், மணிலா தோட்டங்களும், முந்திரிக் காடுகளும், காய்கறித் தோட்டங்களும் அழிக்கப்பட்டு, அவைகள் நச்சு வாயுக்களை உமிழும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டதுதான் உலகளாவிய புதிய பொருளாதாரக் கொள்கையா என்று வினா எழுப்புகிறார் சாமிக் கச்சிராயர்.
thanks -கடலூர் நியூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...