Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 22, 2011

எஸ்.எஸ்.எல்.சி & பிளஸ்-2 பொதுத் தேர்வு கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வை கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 262 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் எனவும், முறைகேடுகளை தடுக்க 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை சிறப்பாக நடத்துவது சம்பந்தமான மாவட்ட தேர்வுக்குழு ஆலோசனை கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிட்டு முறைகேடு ஏதுமின்றி தேர்வு நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வது, வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து போலீஸ் அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வு 2-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி முடிவடைகிறது. இதை 14,405 மாணவர்கள், 15, 678 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 83 பேர் எழுதுகிறார்கள். இதற்காக 63 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. அதேபோல எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் பொதுத் தேர்வு மார்ச்ச் 22-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந்தேதி முடிவடைகிறது. இதை 20 ஆயிரத்து 886 மாணவர்களும், 18 ஆயிரத்து 293 மாணவிகளும் என மொத்தம் 39 ஆயிரத்து 179 பேரும் எழுதுகிறார்கள். இதற்காக 98 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்களை வைப்பதற்காக 7 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிக் வினாத்தாள்களை வைப்பதற்காக 12 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் நாட்களில் தினமும் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மேற்கொள்ளவும் தேர்வு மையங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க போதிய பாதுகாப்பை காவல்துறையினர் மூலம் மேற்கொள்வது பற்றியும் பேசப்பட்டது.

தேர்வு நடக்கும் மையங் களை திடீர் ஆய்வு செய்ய 3பேரை கொண்ட 25 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய தேர்வு மையங்களில் போதிய பாதுகாப்பை வழங்கி பிரச்சினையின்றி தேர்வுகள் நடைபெற செய்வது குறித்தும் பேசப்பட்டது. அச்சம் தரக்கூடிய தேர்வு மையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது, அந்த தேர்வு மையத்துக்கு 200 மீட்டர் தூரத்துக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும், அதையும் மீறி வருபவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

கல்வி மாவட்ட அளவில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு மாவட்ட வருவாய் மற்றும் கல்வித்துறையினரும் இணைந்து பார்வை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தபால்துறையை பொறுத்தவரை தேர்வுகள் முடிந்து அன்றே விடைத்தாள் கட்டுகளை தபால் அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் சிறிது காலதாமதம் ஆனாலும் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், விடைத்தாள்களை உரிய இடத்தில் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

தேர்வு நடைபெறும் போது தேர்வு மையங்களில் திடீரென ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் மாற்று எண்கொண்ட பாடங்களுக்கு வினாத்தாள்களை எடுத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி, மாவட்ட கல்வி அதிகாரி பாரதமணி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பூபதி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழி தேவி, அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், தபால்துறை கண்காணிப்பாளர், தீயணைப்பு அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Source: dailythanthi

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...