Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 08, 2011

எகிப்து:மக்​கள் எழுச்சிப் போ​ராட்டத்திற்​கு தூண்டுகோலா​க அமைந்தது அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோ

முப்பது ஆண்டுகாலமாக எகிப்து நாட்டில் ஆட்சி புரிந்துவரும் ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்திருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது எகிப்தைச் சார்ந்த அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோவாகும்

கடந்த 2008 ஆம் ஆண்டு அல்மஹல்லா அல் குப்ரா தொழில் நகரத்தில் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட 'ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ்.



இளைஞர்களுக்கு புரட்சியின் தீக்கனலை கிளறச்செய்யக் காரணமாக அமைந்தது அவருடைய ப்ளாக்கில் போஸ்ட் செய்யப்பட்ட வீடியோக் காட்சியில் இடம்பெற்ற வார்த்தைகளாகும்.

துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்தில் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்திய 4 இளைஞர்களைக் குறித்த விமர்சனங்களுடன் அந்த வீடியோ துவங்குகிறது.

துனீசியாவைப் போல் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நான்கு இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவர் பாவம் புரிந்துவிட்டார். வீணாக தனது உயிரை பலிகொடுத்துவிட்டார். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! என சிலர் இதனைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? அஸ்மா கேள்வி எழுப்புகிறார்.


"நாட்டில் மாற்றத்திற்காக ஆவல் கொண்டு தனது உயிரை தியாகம் செய்த அந்த இளைஞருக்கு ஆதரவு தேடி நான் தனியாக தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்று பேனரை உயர்த்திப் பிடிக்கப்போவதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். குறைந்தது சிலராவது எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் எனக் கருதினேன். ஆனால், எனக்கு ஆதரவு தெரிவித்து முன்வந்தது 3 இளைஞர்கள் மட்டுமே. எங்களுக்கு பின்னால் போலீஸ் கவச வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

ஹுஸ்னி முபாரக்கின் குண்டர் படையினரும், அதிகாரிகளும் எங்களை அச்சுறுத்தினர். பலம் பிரயோகித்து எங்களை அகற்றினர். சுயமாக தங்களை தீவைத்துக் கொளுத்தியவர்கள் மனநோயாளிகள் என அவர்கள் தெரிவித்தனர். மனநோயாளிகளாகயிருந்தால் ஏன் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று தீவைக்கவில்லை?" அஸ்மா வினா தொடுக்கிறார்.

"ஜனவரி 25-ஆம் தேதி உங்கள் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைக்கத்தான் இந்த வீடியோவை போஸ்ட் செய்கிறேன். இப்பொழுதும் நமக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விரும்பினால் நாம் ஜனவரி 25-ஆம் தேதி போராட்டத்தில் குதிக்கவேண்டும். அரசியல் உரிமைகளை குறித்து ஒன்றும் நான் பேசவில்லை. மனித உரிமைகளாவது நமக்கு கிடைக்கவேண்டும்.

யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் தனியாக தஹ்ரீர் சதுக்கம் செல்வேன். தீக்குளிப்பதற்காக அல்ல. இதனால் என்னை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை. நீங்கள் ஆணாக உங்களை கருதினால் என்னுடன் வாருங்கள். இந்த செய்தியை நீங்கள் எஸ்.எம்.எஸ், ட்விட்டர் போன்ற இணையதள சமூக நெட்வர்க்குகள் மூலமாக ஆயிரக்கணக்கான நபர்களுக்கு அனுப்புங்கள்." -அஸ்மா மஹ்ஃபூஸின் இந்த அழைப்புதான் காட்டுத்தீ போல எகிப்து முழுவதும் பரவி இளைஞர்களை ஜனவரி 25-ஆம் தேதி தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுக் கூட்டியது.

வீடியோ காட்சியின் கடைசியில் அவர் கூறுகிறார் "அல்லாஹ்வைத் தவிர வேறு எதற்கும் அஞ்சாதீர்கள். "எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்..." என தனது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான். ஜனவரி 25-ஆம் தேதி நான் தஹ்ரீர் சதுக்கத்திற்கு செல்வேன். பின்னர் நான் உரக்கக் கூறுவேன் "ஊழல் ஒழியட்டும்! முபாரக் அரசு ஒழியட்டும்! என.

செய்தி:தேஜஸ்&பாலைவனத் தூது

அஸ்மா மஹ்ஃபூஸின் வீடியோவிற்கு இங்கு க்ளிக் செய்யவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...