Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 25, 2013

ஜக்காத் (இஸ்லாமிய வரி)

"நிச்சயமக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே) நீர் கூறும். (34:39) 

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் ஜக்காத்தையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இறைவனை வழிபடுவற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் இறையன்பைப் பெறுவத்ற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

காலில் முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது. உடம்பில் எங்கேனும் அடிபட்டால் கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இது போன்று சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழிவகைச் செய்கிறது.ஜக்காத்தின் தலையாய நோக்கமாக திகழ்வது ஏழ்மை எனும் ஒரு நிலையை விரட்டியடிக்க இறைவனால் உருவாக்கப்பட்ட திட்டமாகும். ஐம்பது பைசா, ஒரு ருபாய் போன்ற நாணயங்களாக அல்லது ஆடைகளாக கொடுப்பதினால் ஜக்காத் நிறைவேறிவிட்டது என கருதவேண்டாம்.

ஒரு செல்வந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் வாழத்துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத்தந்தால், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி, அவரும் பலருக்கு ஒத்துழைப்புத்தரும் சாத்தியக்கூறு ஏற்படலாம். அல்லது பல செல்வந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு செல்வந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏழ்மை விரண்டோடிடும் என்பதில் ஐயமில்லை. இக்கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அருமையாக சித்தரிக்கிறார்கள்.

 "ஓரிரு கவள உணவு அல்லது ஓரிரு பேரீத்தம்பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தருமம் கொடுப்பதற்காக அவரை
யாரும் எளிதில் இனம் கண்டுக்கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில் நிற்கவும் மாட்டார்" - (அல்ஹதீஸ் - நூல்:புகாரி) அருள்மறை இவ்வாறுக் கூறுகிறது: "அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெறமாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங்கண்டு கொள்வீர்! அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்" (2:273)

ஜக்காத் கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்குமட்டும் காரண்மல்ல. ஒருவரின் செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்பட்டிருக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுக்குள் செல்வதைப் போன்று, ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்துவிடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த இறைவன் வகுத்துதந்துள்ளான். அதுபோல நாம் செல்வத்தைத் தேடும் போது, அழிவை தேடித்தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து, நம்மை அழிவுப் பாதைக்கு கொண்டுச் செல்லும் ஒரு பகுதியை அப்புறப்படுத்துவதற்குள்ள ஒரே வழி ஜக்காத்தாகும். இக்கருத்தை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது.

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும், புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக; நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான். (9:103) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை மன்னிப்புக் கோருதலை ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (9:104)

நபிகள் நாயகம் (ஸல்) விளக்குகிறார்கள். "நோன்பு உடலை சுத்தம் செய்வதைப் போன்று ஜக்காத் செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்". (அல் ஹதீஸ்) செல்வத்திலிருந்து, இறைவன் கூறும் அளவை அப்புறப்படுத்தும் போது, எஞ்சிய செல்வம் பரக்கத்தானதாக, பலன் தருவதாக, நிலைப் பெற்றதாக மாறிவிடும். அஃதனின்றி அந்த அளவை அப்புறப்படுத்தாவிடில் திரட்டிய செல்வத்துக்கும் அழிவு ஏற்படும் நிலையுண்டாகும். ஒரு பாத்திரப் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தால் அது முழுவதும் எவ்வாறு நஞ்சாகிவிடுமோ! அதுப்போன்றுக் கொடுக்கப்படாத ஜக்காத் தொகை எல்லாச் செல்வத்தையும் பரக்கத்தற்றதாக, தேவையின் போது கை கொடுக்காததாக முறையற்ற வழியில் செல்விட வேண்டிய கட்டாயத்துள்ளானதாக மாற்றி விடும். கடலிலோ, திடலிலோ ஒருவரின் பொருள் அழிவதற்கு ஜக்காத் செலுத்தப்படாமலிருப்பதேயன்றி வேறு காரணமில்லை.

ஜக்காத்தின் மூலம் உங்களின் செல்வத்தைக் காப்பாற்றுங்கள். தருமத்தைக் கொண்டு உங்களின் நோய்க்கு மருந்திடுங்கள். சோதனைகளை பிரார்த்தனையைக் கொண்டு வெல்லுங்கள். (அல் ஹதீஸ்) செல்வத்தின் மாமருந்து: செல்வத்தை எல்லோரும் தேடுகின்றனர். ஆனால் தேடிய செல்வத்தை அழியாததாக, உரிய நேரத்தில் கை கொடுக்கவல்லதாக நினைந்தறியா விதத்தில் வளர்ச்சியடையக் கூடியதாக ஆக்கும் முறையை அறிந்து செயல்படுபவர் மிகவும் குறைவே! கோடைக்காலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து வரும் வசந்த காலத்தில் புத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால் உடல் மெலிவதைப் போன்றிருந்தாலும், பின்னர் நல்ல சக்திகள் சேகாரமாகி உடல் திடகாத்திரம் ஆவதுப் போல, ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு குறைந்துவிட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.

"முறையான வகையில் ஜக்காத்தை (இஸ்லாமிய வரியை) கொடுத்து நாமும் வழம் பெற்று நம்மை சார்ந்தவர்களையும் வழமோடு வாழவைத்து, வல்ல ரஹ்மானின் கிருபையையும், நெருக்கத்தையும் பெருவோமாக! ஆமீன்!!.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...