Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 20, 2010

இராக்: அமெரிக்கப் படை விலக்கம் ஊரை ஏய்க்கும் நாடகம்!


‘‘அமெரிக்கப் படைகள் இராக்கில் நடத்தி வந்த போர் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 31, 2010 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக” அறிவித்திருக்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா. அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக, இராக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படைகளின் ஒரு பகுதி இராக்கிலிருந்து வெளியேறியது. இந்த நடவடிக்கைகள் மூலம், “இராக் தற்பொழுது சுதந்திரமான சுயாதிபத்தியமுள்ள நாடாக ஆகிவிட்டதாகவும், இராக்கிற்கு விடுதலை பெற்றுத் தரும் தனது நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாகவும்” உலக நாடுகளுக்கு அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

பாரக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்டபொழுது, இராக் போர் மீதான அமெரிக்க மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொள்ளும் தந்திரத்தோடு, இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அளித்தார். இப்பொழுது இந்தப் படை விலக்கத்தைக் காட்டி, அமெரிக்க மக்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், அவர். ஆனால், இந்தப் படைவிலக்கம் குறித்த செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தாலே, இதுவொரு மோசடி நாடகம் என்பதைப் பாமரர்கள்கூடப் புரிந்து கொள்ளலாம்.

இராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிக்கப் படை அமெரிக்காவிற்குத் திருப்பியனுப்பப்படவில்லை. இராக்கிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்துள்ள குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறது. 1990-இல் அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தபொழுது, அமெரிக்கப் படைகள் குவைத் வழியாகத்தான் இராக்கிற்குள் நுழைந்தன என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வெளியேற்றத்திற்குப் பிறகும் இராக்கில் 50,000 முதல் 70,000 துருப்புகள் வரை அடுத்த ஆண்டு வரை தங்கியிருப்பார்கள் என்றும், இத்துருப்புகள் ‘தீவிரவாதிகளை’ எதிர்த்துப் போராடுவதற்கு இராக் இராணுவத்திற்கு உதவி செய்வார்கள் என்றும் அறிவித்திருக்கிறது, அமெரிக்க அரசு.

அமெரிக்க அதிபர் வாக்களித்துள்ளபடி இத்துருப்புகள்கூட இராக் நாட்டிலிருந்து அடுத்த ஆண்டே விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அதனால் இராக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துவிட்ட தாகக் கருதிவிட முடியாது. ஏனென்றால், அமெரிக்க அரசால் இராக்கில் நுழைக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தனியார் கூலிப் படைகள் வெளியேறுவது பற்றி ஒபாமா வாயே திறக்க மறுக்கிறார்.

இதற்கும் மேலாக, இராக் நாட்டை தனது நிரந்தர இராணுவத் தளமாக மாற்றும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இதன்படி, இராக்கிலுள்ள பாலாத் என்ற ஊருக்கு அருகே 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும், அல்-அஸாத் என்ற ஊருக்கு அருகே 17,000 துருப்புகள் தங்கக்கூடிய இராணுவத் தளமொன்றையும் அமைத்து வருகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். இந்த இரண்டு தளங்களையும் சேர்த்து, இராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக 94 இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது, அமெரிக்க ஏகாதிபத்தியம்.

இதுவொருபுறமிருக்க, அமெரிக்க இராணுவத் தலைமை பீடமான பென்டகனின் திட்டப்படி, இராக்கிலிருந்து வெளியேறியுள்ள படைக்கு ஈடாக மற்றொரு படையை இராக்கில் இறக்கிவிட்டுள்ளது, அமெரிக்கா. அரசு தந்திர நிபுணர்கள், பொருளாதார ஆலோசகர்கள், சமூக சேவகர்கள் என்ற போர்வையில் நுழைந்துள்ள இந்த அரசியல் படையின் கண்ணசைவிற்குத் தகுந்தபடிதான் இராக் பொம்மையாட்சி நடக்கும். இதற்குத் தகுந்தபடி இராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் 800-க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம்தான் அந்நாட்டில் ஆட்சி அதிகார மையமாக இருக்கும்.

அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்த பிறகு, தனது மேலாதிக்க நலன்களுக்குத் தகுந்தவாறு படைபல ஒப்பந்தமொன்றை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம்தான் இன்று இராக்கின் எழுதப்படாத சட்டத் தொகுப்பாக விளங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, இராக்கின் வான்வழிப் பாதையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இராக்கிற்கு கிடையாது. அந்த அதிகாரம் இந்த ஒப்பந்தத்தின் வழியாக அமெரிக்காவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இராக்கை நேரடியாக ஆக்கிரமித்த பின், அதன் எண்ணெய் வளத்தில் 60 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது. சதாம் உசேன் ஆட்சியின்பொழுது நாட்டுடமையாக்கப்பட்டிருந்த இராக்கின் எண்ணெய் வயல்களைத் தனியார்மயமாக்கி, அவற்றை அமெரிக்க எண்ணெய்க் கழகங்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது என்ற உண்மை இந்தக் கைப்பற்றல் மூலம் மீண்டும் பளிச்சென அம்பலப்பட்டிருக்கிறது.
source:வினவு!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...