Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 25, 2010

கடலூர் டெல்டா பகுதியில் சம்பா நடவுக்கு தண்ணீர் போதவில்லை

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், சம்பா நடவுப் பணிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.கர்நாடகத்தில் இருந்து, நமக்கு வழங்க வேண்டிய நீரை, கேட்டுப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன.

இவற்றில் வடவாறு நேரடிப் பாசனப் பகுதிகள் 11 ஆயிரம் ஏக்கரில் 10 ஆயிரம் ஏக்கரிலும், வடக்கு ராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகள் 27 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.வீராணம் ஏரி பாசனப் பகுதிகள் 50 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன.கடைமடைப் பகுதிகளான சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 1 லட்சம் ஏக்கரில் நாற்றங்கால்கள் தயாராகி வருகின்றன.

இந்தப் பகுதிகளில் அக்டோபர் இறுதியில் நடவுப் பணிகள் தொடங்கி, நவம்பர் 20-ம் தேதி வாக்கில் முடிவடையும் என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள் .நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். விவசாயிகளின் தண்ணீர் தேவைக் கோரிக்கைகளை ஏற்று கடந்த 5-ம் தேதி கடலூர் மாவட்டக் காவிரி பாசனப் பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து 3,528 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சம்பா நடவுப் பணிகளில் விவசாயிகளின் உத்வேகம் அதிகரித்தது.ஆனால் தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து, வெள்ளிக்கிழமை கல்லணையில் இருந்து கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு 1,207 கன அடியும், சென்னைக் குடிநீருக்காக கூடுதலாக 100 கன அடியும் திறக்கப்பட்டு, கீழணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்ட சம்பா பாசனத்துக்கு கீழணையில் இருந்து, வடக்குராஜன் வாய்க்காலில் 148 கனஅடி, குமிக்கி மண்ணியாறில் 88 கனஅடி, வீராணம் ஏரிக்கு 900 கனஅடி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பகுதிகளுக்கு 268 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.நடவுப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் தற்போது வந்துகொண்டு இருக்கும் தண்ணீர் போதாது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
"கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 40 சதவீதத்துக்கும் குறைவான பகுதிகளில் மட்டுமே நடவுப் பணிகள் முடிவடைந்து உள்ளன. மற்றப் பகுதிகளுக்கு நாற்றங்கால் தயாராகிக் கொண்டு இருக்கிறது.படிப்படியாக நடவு நடந்து வருகிறது. ஆயினும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.இந்த நேரத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட்டால்தான் நடவுப் பணிகள் விரைவாக முடிவடையும். ஆனால் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.மேட்டூர் அணையிலும் நீர்மட்டம் குறைவாக உள்ளது.

ஜனவரி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை, தமிழகத்துக்கு கர்நாடகம் 169 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டு இருக்க வேண்டும்.ஆனால் 70.44 டி.எம்.சி. தண்ணீர்தான் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே கூடுதல் நீரை, கர்நாடகத்திடம் இருந்து, தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்.வருகிற நீரையும் முறையாக விநியோகிக்க, பொதுப் பணித்துறையில் போதுமான அதிகாரிகள் இல்லை. பல பணியிடங்கள் காலியாக உள்ளன. 40 லஸ்கர் பணியிடங்களில் 15 பேர் மட்டுமே உள்ளனர்' என்றார்.

இது குறித்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் செல்வராஜ் கூறியது
"நீர் மேலாண்மை குறித்து கடந்த 18-ம் தேதி விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்தோம். நீர் வீணாகாமல் இருக்க விவசாயிகளின் ஆலோசனைப்படிதான் நீர் விநியோகம் 25 சதவீதம் குறைக்கப்பட்டது.மேட்டூர் அணையிலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். நமது டிவிஷனில் லஸ்கர் பிரச்னை இல்லை. ஆனால் 5 ஓவர்சீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...