Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 14, 2010

பெற்றோரை புறக்கணிக்கிறீர்களா? உங்கள் சொத்து பறிபோகும். எச்சரிக்கை!!!

பெற்ற மகன்களால் புறக்கணிக்கப்பட்டு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் பராமரிப்புத் தொகைக்காக இனி நீதிமன்றங்களுக்கு போய் ஆண்டுக் கணக்கில் அல்லாட வேண்டாம். ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சமூக நலத்துறை முயன்று வருகிறது.தாங்கள் பெற்ற குழந்தைகளை கண்ணும், கருத்துமாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோர், 'வயதான காலத்தில் குழந்தைகள் எங்களைப் காப்பாற்றும்' என்று பெருமையோடு சொல்வதுண்டு. அவ்வாறு பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குழந்தைகள் செயல்படுகிறார்களா, பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். முடிந்த வரை பெற்றோர் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, வயதான காலத்தில் அவர்களை ஓரங்கட்டியவர்களும் நம்மில் உண்டு. வசதி படைத்த இடங்களில் கூட, வயதான காலத்தில் உபத்திரவமாக இருக்கிறார்களே எனக் கூறி, பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் மகன்களும் இல்லாமல் இல்லை.'எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பெற்றோரை விழுந்து விழுந்து கவனித்து நம்பிக்கையைப் பெற்று, சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டு, அதன் பின் பெற்றோரை விரட்டியடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, வயதான காலத்திலும், தன்னம்பிக்கையோடு உழைத்து வாழும் முதியோரை நாம் காண முடிகிறது. இப்படி புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், முதியோர் நீதிமன்றத்துக்கு போய் அலைந்து, திரிந்து மகன், மகளிடம் பராமரிப்புத் தொகை வாங்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அப்படியே நீதிமன்றத்துக்குப் போனாலும், வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், தள்ளாத வயதிலும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது. இவ்வாறு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.பெற்றோர், மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007இன்படி புகார் கொடுத்தால், உடனுக்குடன் பிரச்சினையை தீர்த்து பராமரிப்புத் தொகை பெற்றுத் தரும் வகையில், 2009 டிச., 31இல் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, அருகிலுள்ள ஆர்.டி.ஓ.,விடம் (கோட்டாட்சியர்) பாதிக்கப்பட்ட முதியோர் புகார் செய்தாலே போதும். அவர் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து, முதியோருக்கு, பெற்றோருக்கு பராமரிப்புத் தொகை பெற்றுத் தர முடியும். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களிடமும் புகார் செய்யலாம்.வழக்கை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவும், பராமரிப்புத் தொகை தர மறுப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது சிறைக்குள் தள்ளவும், அபராதமும், தண்டனையையும் சேர்த்து வழங்கவும் ஆர்.டி.ஓ.,க்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வயோதிகத்தின் காரணமாக, விசாரணைக்கு வர முடியாத முதியோர், தங்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள் தரப்பில் ஒருவரை பிரதிநிதியாக நியமித்துக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக நலத்துறை பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமூக நலத்துறை ஆணையர் நிர்மலா கூறியதாவது: சிறீரங்கத்தில் தந்தை இறந்துவிட்டதாக கூறி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மகன் மாற்றிக் கொண்டார். தந்தையையும் ஓரங்கட்டி விட்டார். விஷயமறிந்த தந்தை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்தார். விசாரணையில், மகன் மோசடி செய்தது உண்மை என தெரிந்து, சொத்துக்கள் அனைத்தையும் தந்தை பெயருக்கே மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய உத்தரவின் மூலம், எழுதி வைத்த உயிலைக்கூட பெற்றோர் மாற்றி எழுதவும் வகை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்மலா கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...