Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 14, 2012

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: தீவிர சோதனை, சேர்மன் ராஜினாமா

சென்னை:தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிப்பெற பணம் தந்ததாக கருதப்படும் 73 தேர்வர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று(வெள்ளிக்கிழமை) தீவிர சோதனை நடத்தினர். இவர்களின் தேர்ச்சியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

டி.என்.பி.எஸ்.சி தொடர்பாக ஏற்கனவே மூன்று தடவை சோதனைகள் நடந்துள்ளன. இப்போது நடந்திருப்பது நான்காம் கட்ட சோதனை ஆகும்.

சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. உதவி பல் மருத்துவர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரியதால் டி.என்.பி.எஸ்.சி. தலைவர், ஊழியர்கள் தவறான வழிகளில் பணப் பயன் பெற முயற்சித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் 73 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

டி.எஸ்.பி.க்கள் தலைமையில் அதிகாலை 7 மணி முதல் இந்த இடங்களில் 500 லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற 73 தேர்வர்களில் பெரும்பாலானோர் தற்போது பணியில் சேர்ந்துவிட்டனர்.
சென்னையை தவிர மதுரையில் 13 இடங்களிலும், தஞ்சை, புதுக்கோட்டை போலீஸார் தலா 5 இடங்களிலும், சிவகங்கை, சேலம், வேலூர் போலீஸார் தலா 4 இடங்களிலும், காஞ்சிபுரம், தேனி, திருச்சி, ஈரோடு போலீஸார் தலா 3 இடங்களிலும்,
விருதுநகர், கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் போலீஸார் தலா 2 இடங்களிலும், திண்டுக்கல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நாமக்கல் போலீஸார் தலா ஒரு இடங்களிலும் சோதனை நடத்தினர்.

உதவி பல் மருத்துவர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச, ஒழிப்பு போலீஸார் ரகசிய சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த நவம்பரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் செல்லமுத்து உள்பட 13 உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர். பின்னர் 2-வது கட்டமாக அதிகாரிகள், ஊழியர் வீடுகளிலும், 3-வது கட்டமாக இடைத்தரகர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களை
கைப்பற்றினர்.

இந்நிலையில் 4-வது கட்டமாக பல்வேறு பணிகளில் சேருவதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று(வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தினர். பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

தேர்வாணைய தலைவர் ராஜினாமா இதற்கிடையே, தமிழ்நாடு தேர்வாணைய தலைவர் ஆர்.செல்லமுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வி.ரோசய்யாவிடம் அளித்தார். ஆனால், ராஜினாமா அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை.

லஞ்ச ஒழிப்புப் போலீஸ் சோதனை நடைபெற்றபோது, பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம், தைரியமாக எதிர்கொள்வோம் என்றே தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து கூறி வந்துள்ளார். இதனால் உறுப்பினர்களும் அமைதியாக இருந்து வந்தனர். இந்த நிலையில், தலைவர் செல்லமுத்து திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது உறுப்பினர்கள், அலுவலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் நான்கு மாதங்களே எஞ்சி இருக்கின்றன. இவர் கடந்த 2010 ஜனவரி 3-ஆம் தேதி டி.என்.பி.எஸ்ஸியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...