Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 21, 2011

மூலப்பொருள்களின் விலை உயர்வால் நுகர்வோர் சாதனங்கள் விலை மேலும் உயரும்

புதுடில்லி:மூலப்பொருள்களின் விலை உயர்வால், நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன.அலுமினியம், தாமிரம், உருக்கு உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருள்களின் விலை, கடந்த ஆறு மாதங்களில், 60 - 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், ரெப்ரிஜிரேட்டர்கள், ஏர்கண்டிஷனர் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாப வரம்பு, மிகவும் பாதிப்படைந்துள்ளது.

இதை ஈடு செய்யும் வகையில், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், இச்சாதனங்களில் விலையை, சென்ற ஜனவரி மாதத்தில் உயர்த்தின. இந்நிலையில், இவற்றின் விலையை வரும்ஏப்ரல் மாதத்தில், மீண்டும்அதிகரிக்கும் வகையில், இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், எல்.ஜி., நிறுவனத்தின் 'ஸ்பிலிட்' வகை 1.5 டன் திறன் கொண்ட '5 நட்சத்திர' குறியீட்டை பெற்ற ஏர்கண்டிஷனர் சாதனத்தின் விலை, 27 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிறுவனம், மீண்டும் வரும் ஏப்ரல் மாதத்தில், அதன் ஏர்கண்டிஷனர் சாதனங்கள் விலையை, 5 - 7 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இதே போன்று, நடப்பாண்டின் தொடக்கத்தில், ரெப்ரிஜிரேட்டர் சாதனங்களின் விலையும், 500 முதல் 1,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருந்தது.கொரிய நாட்டை சேர்ந்த, சாம்சங் நிறுவனமும், அதன் ரெப்ரிஜிரேட்டர்களின் விலையை 2.5 சதவீத அளவிற்கும், 'ஸ்பிலிட்' வகை ஏர்கண்டிஷனர் சாதனங்களின் விலையை, 10 சதவீத அளவிற்கும் உயர்த்தியுள்ளது. இத்துறையில் ஈடுபட்டு வரும் வேர்ல்பூல், கோத்ரெஜ் அப்ளையன்சஸ் ஆகிய நிறுவனங்களும், இச்சாதனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

இது குறித்து எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி (ஏர்கண்டிஷனர்கள்) அஜய் பஜாஜ் கூறுகையில், 'நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருள்களின் விலை, மிகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை ஈடு செய்ய, நுகர்வோர் சாதனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது' என்றார்.இது குறித்து நுகர்வோர் சாதனங்கள் துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகையில், 'நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்களின் விலையை உயர்த்தும் நிலையில், அது மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, வாடிக்கையாளர்கள், இச்சாதனங்கள் வாங்குவதை தவிர்க்க கூடும்' என்றார்.

முன்பெல்லாம் 6 - 8 மாதங்களுக்கு ஒரு முறை, நுகர்வோர் சாதனங்கள் விலை உயர்வு குறித்து, நிறுவனங்கள் முடிவெடுத்து வந்தன. ஆனால், தற்போது, ஒவ்வொரு மாதமும் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகின்றன. இது, இத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என, மும்பையை சேர்ந்த மற்றொரு ஆய்வாளர் தெரிவித்தார்.கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின், வைஸ் பிரசிடென்ட் (விற்பனை மற்றும் சந்தை படுத்துதல்) கமல் நந்தி கூறுகையில், 'தொடக்கத்தில், விலை உயர்வு காரணமாக நுகர்வோர்சாதனங்கள் விற்பனையில், மந்த நிலை காணப்பட்டது.தற்போது, கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஏர்கண்டிஷனர்கள் மற்றும் ரெப்ரிஜிரேட்டர் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, இவ்வாண்டு ஏர்கண்டிஷனர் சாதனங்கள் விற்பனை, 20 - 25 சதவீத அளவிற்கும், ரெப்ரிஜிரேட்டர் சாதனங்கள் விற்பனை, 12 - 15 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.நுகர்வோர் சாதனங்கள் மட்டுமின்றி, நுகர்பொருள்கள் விலையும் இவ்வாண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பால், சர்க்கரை, கோக்கோ, உலர் பழங்கள் மற்றும் பேக்கேஜிங் சாதனங்களின் விலை அதிகரித்துள்ளதால், ஐஸ்கிரீம் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனையில், முன்னணியில் உள்ள அமுல் மற்றும் வாடிலால் ஆகிய நிறுவனங்கள் முறையே, 12 சதவீதம் மற்றும் 8 சதவீதம் உயர்த்தியுள்ளன. மேலும், குளிர்பானங்களின் விலையும், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுவருகின்றன.பாமாயில் விலை உயர்வை சுட்டிக் காட்டி, சோப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், அண்மையில் அதன் லக்ஸ் மற்றும் லிரில் போன்ற சோப்பு வகைகளின் விலையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...